Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

NGO பின்புலத்தை ஆராய ராம.கோபாலன் வேண்டுகோள்:ஒநாய் அழுகிறது

ramagopalanதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று கூறப்ப்படும் அரசு சார அமைப்புக்கள்(NGO) அடிப்படையில் அரசுகளுக்கு ஆதரவானவையே. அரசுகளுக்கு எதிரான மக்களின் உணர்வை உள்வாங்கிச் சிதைப்பது அவற்றின் நோக்கங்களில் ஒன்றாகும். அரசுகள் இவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் ஊடாக மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பி தொண்டு நிறுவனங்களை எதிர்ப்புப் போராட்டங்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரிக்கின்றது. இவ்வகையான அங்கீகாரம் அரசிற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் இறுதியில் சேவை செய்கிறது. இந்த வகையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் களைக் கண்காணிக்க வேண்டும் எனத் துயர் கொள்வது ஆடு நனைகிறது என்று ஓனாய அழுவதற்கு ஒப்பானது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுசரா தொண்டு நிறுவனங்களின் (Non-Government Organisation) செயல்பாடு குறித்து ரகசிய புலனாய்வுத் துறையின் அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டு சில விவரங்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இதுகுறித்த விஷயங்களை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்தன. கடந்த மார்ச் மாதத்திலேயே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணை அறிக்கை அப்போதே பத்திரிகைகளில் வெளிவந்தன.

அதில் 120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் 20 லட்சம் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை பற்றி துல்லியமான புள்ளிவிவரங்கள் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என்பதை வெளியிட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்கள் எந்தவிதப் புள்ளி விவரங்களையோ, மற்ற விவரங்களையோ தந்து விசாரணைக்கு உதவவில்லை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் நிறுவனங்களிலும், தொகையிலும் முதல் இடம் பெறுவது தமிழகம். 3,341 நிறுவனங்கள், 1,704 கோடி ரூபாய் பெற்றதாக தெரிகிறது. வெளிநாட்டில் இருந்து மட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும் மானியங்களை வாங்கி சுருட்டுகின்றன இந்த தொண்டு நிறுவனங்கள். இதற்கு பின்புலத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அரசியல் பின்னணியும் இருப்பதை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார், அவரது தொண்டு நிறுவனம் பற்றிய திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றி மத்திய மந்திரிகள் முன்பே செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள புலனாய்வு அறிக்கையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக செயல்படவே இவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் சுனாமி வந்தபோது, அமெரிக்காவின் ஓர் அறக்கட்டளை அளித்த 13 கோடியை சி.எஸ்.ஐ. சர்ச் சுருட்டிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. இதில் 3 கோடியை சுருட்டிய கோவை பிஷப் மாணிக்கம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். சுனாமி நிவாரணத்திற்கு அளிக்கப்பட்ட நிதியை மதமாற்றத்திற்கும், தங்கள் சுகபோகத்திற்கும் பயன்படுத்தி கொண்டனர்.

குழந்தை கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்றவற்றிற்கும், ஹவாலா பணத்தை வெள்ளையாக்கி நன்கொடை எனும் பெயரில் உள்நாட்டிற்கு வருவதற்கும், நமது நாட்டில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு அளிக்கப்படும் கூலியாகவும் கூட இந்த நிதிகள் இருக்கலாம்.

இப்போது நேரம் வந்துவிட்டது, புலானய்வு துறை தந்த தகவல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விரைந்தும், திட்டமிட்டும் செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் NGO எனும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை அரசு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு வரும் நன்கொடைகளைக்கொண்டு அரசின் சமூக நலத்துறை மூலமோ அல்லது அதிகாரிகளின் மேற்பார்வையிலோ சேவைப்பணிகள் நடைபெற வேண்டும். வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை அரசு நேரடியாக தணிக்கை செய்ய வேண்டும். வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தொண்டு நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய வேண்டும். மதமாற்றத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், பொருளாதார சீர்குலைவிற்கும் இந்த நிழல் தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு ராம.கோபாலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version