Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மண்புழு வளர்ப்பின் பயன்கள்

(மீள்பதிப்பு)
ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது.

அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.

ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.

அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.

மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.

இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!

அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?

அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.

அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம்.

அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?

காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!

ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.

மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம்.

நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின.

போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.

என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது.

இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி!

அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.

ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள்.

மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.

அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்!

நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா?

மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா?

இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.

மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது.

அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது.

ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது.

மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?

அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது.

அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.

ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.

இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?

அதனால் நாம் மண்புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும். கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும்.

எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.

அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.

விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இதுபோன்ற எதிர்ப்புக் குரல் எல்லாம் கடல் அலைகளின் முன் குருவி கீச்சிடுவது போன்றதுதான்.

யார் கேட்கப் போகிறார்கள்?

நன்றி – Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2012/06/blog-post_21.html

Exit mobile version