Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல்

vidyaசிறுமி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த போராட்டம் வட மாகாணம் ஈறாக இன்று கிழக்கிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சமூகவிரோதிகள் சிலர் சிறுமி வித்தியாவைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திப் படுகொலை செய்த நிகழ்வு ஒரு தீப்பொறி மட்டுமே. மக்கள் மத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு இன்று தீயாக எரிய ஆரம்பித்துள்ளது என்பதே இதன் பின்புலத்திலுள்ள யதார்த்தம்.

போர் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்குப் பின்னான காலப் பகுதி முழுவதும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு முழுமையும் சமூக விரோதிகளின் புகலிடமாகிவிட்டது. குறைந்த பட்ச சட்ட ஒழுங்கு முறைகளை இராணுவமே நடத்தி வந்தது. இராணுவத்தைப் பொறுத்தவரை மீண்டும் விடுதலைப் புலிகள் முளைவிடாது பாதுகாப்பதே சட்டமும் ஒழுங்கும் என்று கருதியது. இலங்கை அரசும் அதையே தனது நோக்கம் என்று கூறியது. இந்த இடைவெளி சமூகவிரோதக் கும்பல்கள் நிலைகொள்ள வழிவகுத்திருந்தது. இரவு மதுபான விடுதிகள், போதைப் பொருட்களின் விற்பனை, பாலியல் தொழில் என்ற அனைத்து சமூகவிரோதச் செயற்பாடுகளும் தாராளமாக நடைபெற ஆரம்பித்தது.

இலங்கை அரசின் நோக்கமும் மக்களின் வாழ்க்கையும் எதிரெதித் திசைகளில் பயணிக்க ஆரம்பித்தன. மக்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர் நோக்க ஆரம்பித்தனர். இளைய சமூகத்தின் ஒரு பகுதி சமூகவிரோதிகளின் செயற்பாடுகளை பொதுப் புத்தியாக அங்கீகரிக்கும் நிலை தோன்றியது.

இராணுவம் ஏற்படுத்திய இந்த இடைவெளியை ஊக்கப்படுத்த பல்வேறு வெளிக் காரணிகள் செயற்பட்டன.

1. புலம்பெயர் பணம்

உழைப்பின்றி புலம்பெயர் நாடுகளிலிருந்து இலவசமாகக் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்துகின்ற ஊதாரிகளாகச் சமூகத்தின் ஒரு பகுதி மாற்றமடைந்தது.
உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்ளாத சமூகத்தின் ஊதாரித்தனம் சமூகவிரோதிகளை ஊக்கப்படுத்தியது. குறுக்கு வழிகளில் பணம் சேர்க்கும் ஒரு கூட்டம் ஊதாரிகளுக்குப் போட்டியாக வளர ஆரம்பித்தது. சமூகவிரோதிகள் வளர்ச்சியடைய எந்தத் தடையும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை.

2. மக்கள் அமைப்புக்களின் வெற்றிடம்

மக்களை ஒழுங்கமைக்கும் அமைப்புக்கள் எதுவும் வடக்கிலும் கிழக்கிலும் இருந்திருக்கவில்லை விடுதலைப் புலிகள் அதிகாரத்திலிருந்த காலங்களில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தியிருந்ததால், கிராமிய மட்டத்திலான அமைப்புக்களும் அதனை வழி நடத்தியவர்களும் கூட சட்டவிரோதமாக்கப்பட்டிருந்தனர்.இதனால் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் ஒருங்கு சேரும் நிலையும் தனி மனிதர்கள் சமூகத்தால் கண்காணிக்கப்படும் நிலையும் அற்றுப்போனது. அறம் என்பது தனிமனிதனின் தீர்மனம் என்ற எல்லைக்குள் குறுகிப் போனது.

3. உயர் மட்டச் சூறையாடல்கள்

வட மாகாண அரசு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், அந்த அரசோடு தொடர்புடையவர்கள் கூட சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர். அதன் உச்சகட்டமாக வடமாகாண அமைச்சர் சுன்னாகத்தில் நீரை நஞ்சாக்கிய நிறுவனத்தின் ஊதுகுழலாகிய ஊழலில் ஈடுபட்ட சம்ப்வத்தை இளைஞர்கள் கண்டனர். இவை அனைத்தும் சமூகவிரோதச் செயல்களை பொதுப் புத்தி ஆக்கிற்று.

தன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் பண வெறியாகவும், வியாபாரமாகவும் காட்சியளிப்பதைக் காணும் இளஞர் கூட்டம் சூறையாடல் என்பது வழமையான ஒன்று என எண்ண ஆரம்பித்தது. அனீதி என்பது சமூகத்தின் ஓர் அங்கம் என்ற எண்ணம் வளர்ந்தது.

4. பயங்கரக் கொலையாளிகளின் அதிகாரம்

இனக்கொலை நடத்திவிட்டு மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக வலம்வரும் கொலையாளிகள்; இனப்படுகொலைக்கு உட்பட சமூகத்தின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் நயவஞ்சகர் கூடங்கள், இந்திய அரசியல் வாதிகளின் அருவருக்கும் ஈழ வியாபாரம், பல்தேசிய நிறுவனங்களின் பகல்கொள்ளை, மில்லியன்களைச் சுருட்டிக்கொண்டு தேசியம் பேசும் புலம்பெயர் தேசியக் கோமாளிகள் என்ற தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் அநீதியின் விம்பத்தையே காணும் சிறுவர் கூட்டம் தம்மையும் சமூகவிரோதியாக்குவதில் தயக்கம் காட்டவில்லை.

5. கூலிக் குழுக்களின் இரட்டைவேடம்

வித்தியாவின் கொலையைத் தொடர்ந்து புலம்பெயர் பெண்கள் அமைப்பு ஒன்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது. பெண்களின் உரிமையில் அக்கறை கொண்ட பலரின் கையொப்பங்களோடு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவரும் கையொப்பமிட்டிருந்தார். இதன் மறுபக்கத்தில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டமைக்காக பிள்ளையான்ற்கு எதிரான வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மக்களைப்பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு தனிமனதனும் ஏமாற்றுப் பேர்வளிகளாக மட்டுமே உலாவருகின்ற இழிவான அரசியல் மட்டுமே உயிர்வாழ்கின்ற சமூகமாக ஈழத் தமிழர்கள் மாறிவிட்டனர் எனபதற்கு இதைவிட வேறு முன்னுதாரணங்கள் தேவையில்லை. இவற்றை எல்லாம் கேள்வியுறும் இளைய சமூகம் சமூகவிரோதச் செயல்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுவதாகக் கருதுகிறது. ஆக, அது தவறில்லை என்று எண்ணுகிறது,

6. புலம்பெயர் குழுக்களின் திருட்டு

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் துணையோடு தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களைச் சூறையாட ஆரம்பித்துள்ள இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பு வேறு வழிகளில் தொடர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மைத்திரி அரசிற்கு ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் ஆதரவு வழங்க ஆரம்பித்தபின்னர் வேலைத்திட்டமின்றி நடுத் தெருவில் விடப்பட்ட புலம்பெயர் அமைபுக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தமது வியாபாரத்தைத் தொடர வேறு வழிகள் தென்படவில்லை. இதனால் வித்தியாவின் கொலை தொடர்பாகவும் அதன் சமுக அரசியல் பின்புலம் தொடர்பாகவும் ஆராய மறுக்கும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் வித்தியாவின் கொலை இனப்படுகொல என ஆரம்பித்துப் பிரபாகரன் ஆட்சியை மறுபடி நிறுவுவோம் என கூச்சல் போடுகின்றனர். பொதுவாக இவர்களின் கூச்சல்கள் வெறுமனே வியாபாரத்திற்கானது என வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

மக்களின் கண்ணீரைப் பயன்படுத்தி மில்லியன்களைப் பதுக்கிவைத்துக்கொண்டு அதனைப் பாதுகாக்க தேசியம் பேசும் விசமிகள் கூட்டத்தைக் கேள்வியுறும் இளைய சமூகத்திற்கு தமது சமூகவிரோதச் செயல்கள் தொடர்பான குற்ற உணர்வுகள் ஏற்படுவதில்லை.

தன்னைச் சுற்றிக் கொழுந்துவிட்டெரியும் அனீதியின் ஊழித் தீயிற்கு எதிராகப் போராடவும் அதனை எதிர்கொள்ளவும் எந்த நம்பிக்கையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படவில்லை. சமூகத்தை வழி நடத்தும் புதிய அரசியலை நேர்மையக முன்வைக்க எவரும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் இளைய சமூகத்தின் ஒரு பகுதி ஊழித் தீயின் ஒரு பகுதியாகத் தம்மை இணைத்துக்கொண்டு சமூ விரோதச் செயல்களில் ஈடுபடுகிறது.

7. வித்தியாவின் கொலையாளிகளைத் தூண்டிய ஊடகங்கள்

இதனோடு கூடவே பாலியல் வக்கிரங்களைச் செய்திகளாக்கி வெளியிடுவதில் புலம் பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் ஊடகங்கள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. லண்டனில் பல செக்ஸ் இணையங்களின் உரிமையாளர் ஒருவர் ‘தமிழ்த்  தேசிய’ ஊடக ஜாம்பவான். இவர் நடத்தும் இணையத்தின் ஒரு மூலையில் ‘தேசியத் தலைவர் பிரபாகரனின் வழியில்’ என்று முழக்கங்களும் மறு மூலையி இளைய சமூகத்தைச் சிதைக்கும் வக்கிரங்கள் நிறைந்த செய்திகளும் வெளியாகும்.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைப் பாலியல் வன்முறைகளை நோக்கிக் கவர்ந்திழுக்கும் இக் கொடியவர்களும் சிறுமி வித்தியாவின் கொலைக்கான சமூகப் பொறுப்பளிகளே.

இவை அனைத்தின் காரணமாகவும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வெவ்வேறு அளவுகளில் நடைபெற்றன. சிறுவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதும், விடுதிகளில் மதுபானம் அருந்துவதும் வழமையானதாகிவிட்டது. வன்முறைக் குழுக்களும் அவற்றிற்கு இடையேன மோதல்களும் ஆரம்பித்தன.

பெண்களின் பெற்றோர் பலர் அச்சமடைய ஆரம்பித்தனர். இளைஞர்கள் சமூகவிரோதிகளாக மாறிவிடுவார்களோ என தாய் தந்தையரை பயம் பற்றிக்கொண்டது.

சட்டமும் ஒழுங்கும் சிதைக்கப்பட்ட சமூகத்தில் சமூகவிரோதச் செயல் இலகுபடுத்தப்பட்டது.

மக்ககள் ஏன் போராடுகிறாகள்?

இவற்றைக் கண்டு கொதித்தெழுந்த சமூகத்தின் போர் முழக்கமே வித்தியாவின் கொலையின் பின்னான போராட்டங்கள். வித்தியாவின் படுகொலையைத் தமது அவல நிலையின் குறியீடாகவே போராடிய மக்கள் காண்கின்றனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் போராட்டத்தின் பின்னால் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற குரல் இழையோடுகிறது. தமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று போராடிய முதியவர்கள் ஓலமிடுவது கேட்கிறது.

ஆக, இராணுவத்தைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கம் குறைந்தபட்ச நிர்வாக அலகுகளை மறுசீரமைத்து மக்களுகு நம்பிக்கையைக் கொடுக்கும் வரையிலும் இவ்வாறான போராட்டங்களை நடத்துவதத் தவிர மக்களிடம் வேறு வழிகள் இல்லை.

மக்களின் போராட்டங்களை வழி நடத்த அவர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைமைகள் கிடையாது. தன்னிச்சையாக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் நேற்றைய தினம் தேவையற்ற வன்முறைகளாகத் திசை திருப்பப்பட்டன.

வன்முறைகளோடு தொடர்புடைய இளைஞர்களும் சமூகவிரோதக் கும்பல்களின் ஒரு பகுதியே. ஒவ்வொரு சம்பவத்தையும் வயிற்றுப் பிழைப்பிற்கான மூதனமாக மாற்றும் புலம்பெயர் ஊடகங்கள் சில ‘சிங்களப் போலீசின் தலையை உடைத்த தமிழர்கள்’ என செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த வன்முறையைத் தவிர, நிலமையைக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த இலங்கை அரசு மக்களுக்கு எந்த நம்பிக்கையைம் வழங்கவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதைப் போல, ‘யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் மிரட்டப்படுகின்றனர்’ என அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சி கூச்சலிடுகிறது.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகக் கருதப்பட்டவரும் சட்ட வல்லுனருமான தமிழ்மாறன் கொலையாளிகளைக் காப்பாற்ற முனைந்ததை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். தமிழ்மாறன் போராடும் மக்களால் குறிவைக்கப்படும் தனி நபர்களில் ஒருவர். சமூகத்தின் ஆதிக்கத்திலுள்ளவர்களின் சமூகவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களின் வெறுப்பிற்கு தமிழ்மாறன் உதாரணம்.

தமிழ்மாறன் தொடர்பாக இதுவரைக்கும் தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ சிறிய துண்டறிகை கூட விடவில்லை. கட்சியிலிருந்து தமிழ்மாறன் விலக்கப்பட்டுள்ளாரா அன்றி கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இன்னும் தொடர்கின்றாரா என்பதுகூட இன்னும் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

வடக்குக் கிழக்கில் சமூகத்தின் பெரும்பான்மையன உழைக்கும் மக்களை ஆதாரமாக முன்வைத்து மக்கள் சார்ந்த அரசியல் தலைமை தோன்றும் வரை இளைஞர்களின் சிதைவு தவிர்க்க முடியாத அவலமாகிவிடும்.

உடனடித் தேவையாக சட்டம் ஒழுங்கு மறுசீரமைக்கப்படுவதும், சமூகவிரோதக் குழுக்கள் அழிக்கப்படுவதும் அவசியமானது. சிறுமி வித்தியாவின் கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதன் ஊடாகவே எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச நம்பிகையை மக்களுக்கு வழங்கமுடியும்.

Exit mobile version