Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி

“ஆப்கானிஸ்தானிலும், அரபு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் எங்களுக்கு அக்கறையிருக்கிறது. அங்கு மனித் உரிமைகள் மீறப்படும் போதும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம், அந்த நாடுகள் எல்லாம் அபிவிருத்தியடைவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். ” இப்படித்தான் மேற்கு ஏகபோக நாடுகள் உலக மக்களை ஏமாற்றிக்கொண்டே அவர்களைச் சுரண்டி ஏழைகளக்கி அழித்து வருகின்றன.

ராஜித சேனாரத்ன

மேற்கு நாடுகளால் கற்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தமது உள்ளூர்ப் பதிப்பை ஆரம்பித்துள்ளது. “போர் வெற்றியை நாங்கள் வழமை போலக் கொண்டாடப் போவதில்லை. இலங்கையின் ஒரு பகுதி இன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவிலை. இதனால் போர் வெற்றி நாளாக மே 19ம் திகதியைக் கொண்டாட முடியாது. மாறாக ஆயுதப் படைகளின் நாளாகப் பிரகடனப்படுத்துவோம். போரில் மரணித்தவர்களையும், பிரிவினை வாதிகளான புலிகளை வெற்றிகொள்வதில் மரணித்துப்போன ஆயுதப் படையினரையும் நினைவு கூர்வோம்.” இவ்வாறு இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இரத்தவாடை இன்னும் விசிக்கொண்டிருந்த போது, ராஜபக்சவிற்கு ஆதரவகப் புலம்பெயர் நாடுகளில் பிரச்சாரம் செய்வதற்காக பெல்பொட்டிங்டர் என்ற பிரித்தானிய நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அதே ராஜீவ சேனரத்தன தான் இவர்.

சம்பூர் அனல் மின் நிலைய ஒப்பந்ததை இந்திய அதிகாரிகளுடன் கைச்சாத்திடும் சம்பிக்க ரணவக்க

மேலோட்டமாகப் பார்த்தால் ராஜித சேனாரத்ன நேசக்கரம் நிட்டுவது போல தென்படும். அதன் மறுபக்கம் ஆபத்தானது. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. மன்னாரிலும், சம்பூரிலும், சுன்னாகத்திலும், காங்கேசந்துறையிலும் பல்தேசிய நிறுவனங்கள் தமிழர்களின் தன்னாட்சிகுரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்றன.

துப்பாகிகளும் பட்டிகளும் அணிந்த இராணுவ அதிகாரிகளுக்குப் பதிலாக பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமித்து மக்களின் வாழ்விடங்களை அழித்துச் சூறையாட அவற்றை இலங்கை அரசு அபிவிருத்தி என்கிறது.

வடக்குக் கிழக்கில் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அதே இராணுவ நிர்வாக அமைப்பு முறை எந்த வேறுபாடுமின்றி அப்படியே தொடர்கிறது. ஆர்ப்பாட்டமின்றி மென்மையாக அழித்துச் சிதைக்கும் நயவஞ்சகத்தனத்தை மேற்கின் ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசிற்குக் கற்பித்துள்ளன.

இன்னும் சில வருடங்களில் கிழக்கைப் போல வடக்கிலும் தமிழர்களைச் சிறுபான்மையாக்கிவிட்டால் சுய நிர்ணைய உரிமைக்கான முழக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதே என்பதே இலங்கை அரசின் குறுகிய கால வேலைத்திட்டம். அவ்வாறு எதிர்ப்புக்கள் எழாமல் பாதுகாத்துக்கொள்ள தமிழர் தலைமைகள் துணை செல்கின்றன, ஒரு பகுதி நேரடியாக இலங்கை அரசை ஆதரிக்கிறது. மறுபகுதி இலங்கை அரசின் செயற்பாடுகளைக் க்ண்டுகொள்வதே கிடையாது.

ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் தமிழர்களை வழி நடத்துகிறோம் பேர்வழிகள் என்று கூறுபவர்கள் மக்களின் நடைமுறைப் பிரச்சனைகளோடு தொடர்பற்றவர்கள். இலங்கை அரசின் பின்னணியில் செயற்படும் மேற்கு ஏகாதிபத்தியங்களின் தொங்கு தசைகள்.

இவர்களிடமுள்ள அரச எதிர்ப்பு வேலைத்திட்டம் என்பது அரசிற்குப் பாதிப்பற்றது. வேலைத்திட்டம் என்று குறிப்பிட இயலாத கீழ்வரும் சுலோகங்களை மட்டுமே தமிழர் தலைமைகள் வைத்திருக்கின்றன

1. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.
2. மேற்கு நாடுகளின் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும்.
2. புலிகள் இயக்கத்தையும் அதன் நினைவுச் சின்னங்களையும் பாதுகாப்பது.
3. நினைவு நாட்களையும் மரண அஞ்சலிகளையும் நடத்துவது.
4. வசதி கிடைக்கும் போதெல்லாம் தமிழீழம் வேண்டும் என்றும், எங்கள் தலைவன் பிரபாகரன் என்றும் புலம்பெயர் நாடுகளில் கூடியிருந்து கூச்சலிடுவது.

கிராமங்களிலுள்ள சனசமூக நிலையங்கள கூட இத விட அதிகமான நோக்கங்களையும் வேலைத்திட்டங்களையும் கொண்டிருக்கும். முள்ளிவாய்க்கால் அழிப்பு நடந்து ஆறு வருடங்கள் அவசரமாக ஓடிப்போய்விட்டன. இந்த இடைவெளிக்குள் தமிழர்களை வழி நடத்துவதாகக் கூறும் பேர்வளிகள் ஏதாவது சாதித்திருக்கிறார்களா? மேற்குறித்தவற்றை இவர்கள் தேசியம் என்று வேறு நம்பச் சொல்கிறார்கள்.

இத் தமிழ்த் தலைமைகளை விட்டால், மேற்கு நாடுகளின் நிதிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு கூலிக்குக் கூச்சல் போடும் தன்னார்வ நிறுவனங்கள் அங்காங்கே முளைத்திருக்கின்றன. புத்திசீவிகள் எனத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொள்ளும் சிலருக்கு மேடை போட்டு ஆய்வு நடத்த வழி செய்யும் இத் தன்னார்வ நிறுவனங்கள் அரசுசாரா அமைப்புக்கள் என்றும் தம்மை அழைத்துக்கொள்கின்றன. எப்போதும் அரச எதிர்ப்பு அமைப்புக்கள் என அழைக்கப்படுவதில்லை. சாராம்சத்தில் இவை அரசு சார்ந்த அமைப்புக்களே.

இன்று தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கு நாடுகளிடமும் ஐ.நாவிடமும் நாங்கள் முறையிடுகிறோம் என்று தமிழர் தலைமைகள் கூறும் போது, நாங்களும் அங்குதான் முறையிடுகிறோம் என்று இலங்கை அரசு கூறுகிறது. மேற்கு நாடுகள் இலங்கை அரசைப் பாராட்டுகின்றன.

முள்ளிவாய்க்காலில் அழிப்பு நடந்திருக்கிறது நாங்கள் அதனை நினைவு கூருகிறோம் என்று தமிழர் தலைமைகள் கூறுகின்றன. நாங்களும் மரணித்தவர்களைத் தான் நினைவுகூருகிறோம் என்கிறது இலங்கை அரசு.

புலிகள் இயக்கத்தின் நினைவுச் சின்னங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் அதுவே தேசியம் என்கிறது புலம்பெயர் தலமை. அதனை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்கிறது இலங்கை அரசு.

OLYMPUS DIGITAL CAMERA

இதனால் புலம்பெயர் அமைப்புக்களுக்கு அரசியல் நடத்த வேறு வழிகளின்றி பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பாகிவிட்டன. வெறும் மரணச் சடங்கு சேவை மையங்களாக மாறிப்போய்விட்டன. ‘ஓம் நமச்சிவாய’ என்று உச்சரிப்பது போல ‘தாயகம் தேசியம் தலைவர்’ என்று உச்சரித்துக்கொண்டிருப்பது மட்டுமே மரணச்சடங்குச் சேவை மையங்களின் தாரக மந்திரமாகிவிட்டது.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் ஒட்டுக்குழுக்கள் போலச் செயற்பட்ட புலம் பெயர் அமைப்புக்கள் அதே ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை ஆரத் தழுவிக்கொண்ட போது நட்டாற்றில் விடப்பட்டன. கடந்த முப்பது ஆண்டுகளாக இன்று வரைக்கும் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்குவதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ‘மரணச்சடங்கு சேவை மையங்கள்’ என்றாவது ஒரு நாள் பிரித்தானிய அரச பாராளுமன்றத்தின் முன்னால் ஆயுதங்களை வழங்காதே என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்களா என்றால் இல்லை! மாறாக இனப்படுகொலைக்குக் துணைபோன அதே அரச பிரதிநிதிகளை அழைத்து மாலைபோட்டு பொட்டும் வைத்துவிட்டு அவர்கள் தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைக்குப் பின்பு ஒரு பெரும் மக்கள் கூட்டம் சுன்னாகத்தில் அழிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழிப்பிற்கு துணை சென்றது என்பது அறிந்த ஒன்று. இதற்கிடையில், கோல்பேஸ் கடற்கரையிலிருது தமிழ்த் தேசியம் என்று புலம்பெயர் நாடுகளுக்கு கடல் அலைகளைத் தூதுவிடும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடுத்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பொறுக்குவதற்கு புலம்பெயர் தேசியத்தை நம்பியிருக்கிறார்.

எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான தேவா

சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் நிறுவனத்தின் பின்னால் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய பிரதிநிதி செயற்படுகிறார் என்று தெரிந்துகொண்டும் அது குறித்து மூச்சுக்கூட விடாமல் மௌனம் சாதித்த புலம்பெயர் அமைப்புக்களின் தேசியம் என்பது போலித் தேசியம் என்பதை சொல்லித் தெரியவேண்டிய தேவையில்லை.

சம்பூரில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு திருகோணமலையின் ஒரு பகுதியே மக்கள் குடியிருப்பிற்கு ஒவ்வாத பகுதிகளாக மாற்றப்படுவதை தமிழ்த் தலைமைகள் இதுவரை கண்டுகொண்டதில்லை. மன்னார் கடற்படுக்கை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கரயோரம் முழுவதும் எண்ணைக் குதங்களாக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை ‘புலம்பெயர் தேசியத்திற்கு’ தேவையற்ற ஒன்றாகிவிட்டது.

காங்கேசந்துறை, வவுனியா, பாசிக்குடா என்று புற்று நோய்போல பிரதேசங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, ‘We want Tamil Ealam’ என்று கூச்சலிட்டுவிட்டு, ஈழப் போராட்டம் நடத்தப் போகிறோம் எனப் பணப் பற்றுச்சீட்டுடன் கதவுகளைத் தட்டும் இவர்கள் யார்? இனிமேலும் இவர்களைத் தமிழர்களின் தலைமைகள் என அனுமதிக்கப் போகிறோமா, அல்லது புதிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பப் போகிறோமா?

இலங்கை அரசின் நோக்கம் தெளிவானது. இன்னும் ஐந்து வருட கால எல்லைக்குள் வடக்குக் கிழக்கை இலங்கை பல்தேசிய நிறுவனங்களுக்கும், அமெரிக்க இராணுவத்தின் ஆசியா பசிபிக் கட்டளையகத்திற்கும், இந்திய அரசின் ஆக்கிரமிப்பிற்கும் தாரைவர்த்துக் கொடுத்துவிட்டால் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவார்கள். அதன் பின்னர் லண்டன் தெருக்களில் ‘ We want TamilEalam, Our leader Prabaharan’ என்று கூச்சலிட்டால் என்ன, ‘ We dont want Tamil Ealam, Our leader Srisena’ என்று கூக்குரலிட்டால் என்ன யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் நியாயம் நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாகக் கரைக்கப்பட்டது. இன்று தமிழர் தலைமைகள் எனக்கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகளின் துணையுடன் அதே அழிப்புத் தொடர்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவலம் நிறைந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Exit mobile version