திருநெல்வேலியில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராயின் புத்தகம் ஒன்றை திரும்பப் பெற்றிருக்கிறது. Walking with the Comrades எனும் அந்தப் புத்தகம் முதுகலை ஆங்கில பட்டப் படிப்பின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மத்திய இந்தியாவின் தண்டகாரண்யாவில் இருக்கும் மாவோயிச போராளிகளோடு தங்கி அவர்களது அனுபவத்தை அந்த நூலில் எழுதியிருந்தார் அருந்ததி ராய். இந்தப் புத்தகம் இந்தியாவில் புகழ்பெற்ற ஒன்று என்பதோடு சட்டரீதியாக தடை செய்யப்பட்டதும் அல்ல.
“இந்த புத்தகம் 2017-ம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த புத்தகம் மாவோயிஸ்டுகளை போற்றுகிறது என்று ஒரு வாரத்திற்கு முன்னர்தான் எங்களது கவனத்திற்கு வந்தது. எனவே அது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவைப் போட்டோம். அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தப் புத்தகத்தை திரும்பப் பெறுகிறோம். அதற்கு பதில் சூழலியவாதியான எம். கிருஷ்ணனது, My Native Land: Essays on Nature எனும் புத்தகத்தை சேர்த்திருக்கிறோம்.” என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான கே.பிச்சுமணி கூறியிருக்கிறார்.
சரி, இந்த பல்கலையின் கவனத்திற்கு அருந்ததி ராய் புத்தகம் குறித்த கருத்தை கவனத்திற்கு கொண்டு வந்தது யார்? அது அகில பாரதீயி வித்யார்த்தி பரிஷத் எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவு. ஏபிவிபி மட்டுமல்ல இன்னும் சிலரும் இது குறித்து புகார் தெரிவித்திருந்தார்கள் என்று ஏபிவிபியை காப்பாற்ற நினைக்கிறார் துணை வேந்தர். இவரே கடந்த ஆண்டில் ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் என்பதால் துணை வேந்தரின் பதவி சங்கிகளின் கருணைக்கு உட்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம்.
அருந்ததி ராயின் புத்தகம் 2010-ம் ஆண்டில் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையில் நீண்ட கட்டுரையாக எழுதி வெளியிடப்பட்ட ஒன்றாகும். ஏபிவிபியின் தென் தமிழக துணைச் செயலாளர் சி.விக்னேஷ், “ இந்த புத்தகம் வெளிப்படையாக தேசத்துரோக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறது” என்று துணை வேந்தரிடம் நீக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். மேலும் இந்தப் புத்தகத்தின் மூலம் கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களிடம் நக்சல் கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கிறது, நக்சலுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள் என்றெல்லாம் கொதிக்கிறார் அவர். இதை வெறும் கோரிக்கையாக அவர் வைக்கவில்லை.
மனோன்மணி பல்கலை இந்தப் புத்தகத்தை திரும்பப் பெறவில்லை என்றால் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திடம் புகார் அளிப்போம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் ஆங்கில இதழான ஆர்கனைசர் பத்திரிகையிலும் “பாரதத்தின் மிகப்பெரும் உள்நாட்டு அபாயமான மாவோயிஸ்ட்டுகளை இந்தப் புத்தகம் போற்றி புகழ்ந்துரைக்கிறது” என்று புகார் எழுதப்பட்டிருக்கிறது.
உண்மையில் இந்தியாவின் உள்நாட்டு அபாயம் மாவோயிஸ்ட்டுகள் அல்ல, அது ஆர்.எஸ்.எஸ் எனும் சங்கபரிவார அமைப்புகள்தான். ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் என பெரும்பாலான மக்களை கலவரம், பார்ப்பனிய பண்பாட்டு அமைப்புகளால் அன்றாடம் வதைத்து வரும் இவர்கள்தான் அபாயகரமானவர்கள், பாசிசத்தை கொண்டு வரும் வில்லன்கள்.
பார்ப்பனர்களே வாழத்தகுதியானவர்கள் மற்றவர்கள் சாகத் தகுதியானவர்கள் என்பதை விதியாக அறிவிக்கும் மனு தர்மத்திற்காக வக்காலத்து வாங்கும் இந்த இழிபிறவிகள் அருந்ததி ராயின் புத்தகத்தை எதிர்ப்பதற்கு எவ்விதத்திலும் தகுதி அற்றவர்கள்.
புகழ்பெற்ற அருந்ததி ராயின் புத்தகம் கூட ஒரு பல்கலையின் பாடத்திட்டத்தில் இருக்கக் கூடாது என்றால் இங்கே நடப்பது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியன்றி வேறென்ன?