தம்மை குற்றங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முயலும் எம்.ரி.டி வோக்கஸ், யாழ்ப்பாணத்தில் யுத்தம் உச்சமடைந்திருந்த காலத்தில் மக்களுக்குச் சேவையாற்றும் நோக்கத்துடனேயே அங்கு சென்று மின்சாரம் வழங்கும் சேவையில் ஈடுபட்டதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் நீர் மாசடைந்தமைக்கும் தமது நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கைப் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்.ரி.டி வோக்கஸ் சேவை நோக்கத்துடன் இயங்கும் ‘புரட்சிகர இயக்கமில்லை’. இலாப வெறியோடு இயங்கி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த கிரிமினல்களின் கூட்டு. அவர்களுக்கு எவ்விதத் தர்மீகப் பொறுப்பும் கிடையாது.
அவர்கள் தமது பங்குதாரர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கே அஞ்சுகின்றனர் என அறிக்கையின் மற்றொரு பகுதி மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
“எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்”. என அறிக்கையில் பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான நிர்ஜ் தேவா என்பவருக்கு எதிராக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘பறை-விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவரது இணையத்தளம் மூடப்பட்டது. இன்று பங்குதாரர்களைப் பாதுகாக்கும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம், நீர் மாசடைதல் பிரச்சனை 1987 ஆம் ஆண்டிலிருந்தே காணப்படுவதாக யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் என்பவரை ஆதாரம் காட்டி செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதே வேளை நிர்ஜ் தேவாவிற்கு எதிராக அவரது தொகுதியில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சார்ந்த குமார் தெரிவிதார்.
நீதித் துறையின் விசாரணை வரைக்கும் பொறுமை காக்குமாறு தெரிவித்துள்ள இந்த நிறுவனம் நீர் நச்சாவது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வழக்குத் தொடர்ந்தவர்களைப் பயங்கரவாதிகள் எனப் போலிக் குற்றம் சுமத்தி வழக்கைத் திசைதிருப்ப முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.