Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவின் அடியாளாக இந்தியா : பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து !

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை.

புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை 27.10.2020 அன்று அமெரிக்க அரசோடு இந்திய அரசு, பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.  இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் பங்கேற்றனர். இருநாடுகளின் பாதுகாப்புத் துறை, ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இந்திய அரசு அமெரிக்க அரசோடு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதன்படி இருநாடுகளும் கூட்டாக இராணுவ பயிற்சி பெறுவது, ஆயுதங்கள் இறக்குமதி செய்வது, அமெரிக்க ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, தேவைப்பட்டால் இந்திய ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவது ஆகியவை அமலில் இருக்கின்றன. இப்போது சீன இந்தியா மோதல் அதிகரித்து வரும்  நிலையில் அமெரிக்காவின் அடியாளாகவே இந்தியா மாறிவிட்டதை இந்த புதிய ஒப்பந்தம் எடுத்துரைக்கிறது.

இந்த ஒப்பந்தப்படி அதிநவீன தொழில்நுட்பங்கள், புவிசார் வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்களை இருநாடுகளின் இராணுவங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் இருநாடுகளும் இணைந்து பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயந்து வருகின்றன என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ உண்மை போட்டுடைக்கிறார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் “சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக இந்தியாவின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். சீனா உள்ளிட்ட நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து  செயல்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.

இப்படி அமெரிக்காவின் அணியில் இந்தியா சேர்ந்து மேலும் மேலும் புதிய ஒப்பந்தங்களை போடுவது சீனாவின் கோபத்தை கிளறும் என்று தெரிந்தே இந்திய அரசு இதை மேற்கொள்கிறது. மற்றொரு புறம் சீனாவிற்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி விடுவதை அமெரிக்கா மேற்கொள்கிறது. இதனால் யாருக்கு ஆதாயம்? நிச்சயம் அமெரிக்காவிற்குத்தான். ஒன்று அமெரிக்காவின் ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு இலாபம். இரண்டு சீனாவிற்கு எதிரான தனது புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்கு இந்தியாவை ஒரு அடியாளாக பயன்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம். இதன் மூலம் சீனாவிற்கு எப்போதும் பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் அதனை அடக்கலாம் என அமெரிக்கா எண்ணுகிறது.

இந்திய இராணுவத்திற்கான 2019-ம் ஆண்டின் பட்ஜெட் 4,31,011 கோடி ரூபாயாகும். 2020-ம் ஆண்டின் படி அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட் 732 பில்லியன் டாலராகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவின் பட்ஜெட் 261 பில்லியன் டாலராகும். உலக அளவில் முதலிரண்டு இடங்களை இந்த நாடுகள் பிடிக்க மூன்றாவதாக இந்தியா 70 பில்லியன் டாலரை இராணுவத்திற்கு செலவழிக்கிறது.

மேலும் உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. ரசியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காதான் இந்தியாவிற்கு அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. 2013-17ம் ஆண்டின் கணக்குப்படி அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி 550% அதிகரித்திருக்கிறது என்றால் இந்தியா அமெரிக்கா ‘உறவை’ புரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று நோய்கள், வறுமை முதலான மனிதவளக் குறியூடுகளில் நேபாளம், வங்கதேசத்தை விட பின்தங்கியிருக்கும் ஏழை நாடான இந்தியா இவ்வளவு பெரிய தொகையை இராணுவத்திற்கு செலவழிக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். மோடி அரசு வந்த பிறகு இராணுவமயமாக்கம் அதி வேகத்தில் நடக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள் ஊற்றி மூடப்பட்டு இராணுவத்திற்கு செலவழிப்பது அதிகம் நடக்கிறது.

பாசிச ஆட்சியில் மக்களுக்கு பாயாசம் கிடைக்காது. பயங்கரவாத ஒடுக்குமுறைதான் கிடைக்கும்.

– வரதன்

Exit mobile version