முகநூலில் முடங்கிப் போன ஒரு சில அரசியல் ஆரவலர்கள் ட்ரம்ப் ஏதாவது தமிழர்களைப் பற்றிப் பேசுகிறாரா எனத் தேடிக்கொண்டிருந்திருப்பார்களோ.
இவை அனைத்துக்கும் மத்தியில் பிரித்தானிய மாகாராணியின் விருந்தே தனது பிரித்தானியப் பயணத்தின் முன்னிலைப் படுத்தத்தக்க சம்பவம் என பி.பி.சி தொலைக்காட்சியின் ‘ஊடகவியலாளர்ரும்’ ட்ரம்பின் விசிறியுமான பியர்ஸ் மோர்கனிடம் ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரம்பிற்கான தமிழர்கள் என்ற தமிழ்த் ‘தேசியவாதக்’ குழு எப்படியாவது பிரர்ஸ் மோர்கனைச் சந்தித்துவிட வேண்டும் எனத் துடித்திருப்பார்கள். அவரின் ஊடாக ட்ரம்பைப் பிடித்து தமிழீழம் பிடிக்கலாம் என்று திட்டம் வேறு தீட்டியிருப்பார்கள்.
ட்ரம் பிரித்தானியாவில் வந்திறங்கிய முதல் நாளே பி.பி.சி இன் காலைச் செய்தி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஆஷ் சாகர் என்ற பெண்ணைப் பேசக்கூட அனுமதிக்காமல் ட்ரம்ப் விசுவாதத்தைக் காட்டிய பியர்ஸ் மோர்கனை ஆஷ் சாகர் முட்டாள் என அழைத்ததை ஜனநாயகவாதிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
இதுவரை காலமும் பல ஜனநாயக முற்போக்கு சக்திகளை அவமானப்படுத்தியிருந்த பியர்ஸ் மோர்கனின் முகத்தில் அறைந்தால் போல் ஆஷ் சாகர் வழங்கிய பதிலின் இறுதியில் தான் உண்மையில் ஒரு கம்யூனிஸ் எனக் குறிப்பிட்டுருந்தார்.
முக நூல் தமிழ்த் தேசியவாதிகளில் பலர் அரசியல் ‘இராணுவ’ கட்டுக்கோப்புடன் வளர்ந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களில் பலர் ஒரே குரலில் எப்படியிருந்தாலும், பொது வெளியில் ஒரு பெண் ஊடகவியலாளரை முட்டாள் என அழைத்திருக்கக்கூடாது என்றனர்.
அது எப்படி ஒரு சமூகத்தின் பெரும்பகுதி இப்படி முட்டாள் தனமாகச் சிந்திகிறது என்பதற்கு இதுவரை எவரிடமும் பதில் இல்லை.
ஒரு முட்டாளை, பாசிசத்தின் எஜண்டை, முட்டாள் என அழைப்பது நாகரீகமானதே.
ஒபாமாவிற்கான தமிழர்களிடமிருந்தும், ட்ரம்பிற்கான தமிழர்களிடமிருந்தும் கூச்சமில்லாமல் தமிழ்த் தேசியம் ஊட்டச்சத்துப் பெற்றுக்கொள்ளும் போது, பியர்ஸ் மோர்கன் மா மனிதர் தான்.
முப்பது வருடப் போராட்டம் இவ்வளவு பின் தங்கிய சமூகச் சிந்தனையையும், பிற்போக்கு சந்ததியையும் உருவாக்கும் என்பதை ‘முப்பாட்டன் முருகன்’ கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
விமர்சனம், சுய விமர்சனம் என்ற அடுத்த எல்லைக்குள் எல்லாம் போவதற்கு இன்னும் ஒரு சந்ததி கடந்து போகவேண்டியிருக்கலாம். குறைந்த பட்சம் ஓரமாக நின்று அழிந்தவைகளுக்காகவும் அழிக்கப்பட்ட்வைகளுக்காகவும் அழுதாலே இப்போதைக்குப் போதுமானது.