Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் புரட்சி தோன்றலாம் – ஐரோப்பிய ஒன்றியம்

Capitalism-Crisis-logoஐரோப்பிய ஏகாதிபதியமும் அதன் அதிகாரவர்க்கமும் இப்போது முழு நிர்வாணமாக மக்கள் முன்னால் தம்மை வெளிக்காட்டியுள்ளன. முதலாளித்துவம் அதன் ஆரம்ப நாட்களான 16 ஆம் நூற்றாண்டில் போதித்த பாராளுமன்ற ஜனநாயகம் கூடச் சாகடிக்கப்பட்டுவிட்டது என பெரு முதலாளிகளின் நிர்வாகிகள் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துவிட்டனர். ஜனநாயகம் என்பதெல்லாம் இனிமேல் சாத்தியமற்றது என கூச்சலிட்டு தமது முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளனர்.

இதுவரை காலமும் வறிய மூன்றாமுலக நாடுகளில் வாழும் நாகரீகமடையாத மனிதர்கள் மத்தியில் தமது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் எனக் கூறியவர்கள் ஐரோப்பாவின் கொல்லைப் புறத்திலேயே அது சாத்தியமற்ற கேலிக்கூத்து என கூற ஆரம்பித்துவிட்டனர். சர்வாதிகாரம். பாசிசம், நிறவாதம், இனவாதம் போன்றவை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்கள். அவைகூட மக்கள் மத்தியில் இனிமேல் சாத்தியமற்ற ஒன்றாகிவிடும் என முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தின் நிர்வாகிகள் கைவிரிக்கும் நிலை உருவாகி வருகின்றது.

கிரேக்க மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு விரல்விட்டு எண்ணக்கூடிய பெரு முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே ஜனநாயகம் என்று அதிகாரவர்க்கம் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துள்ளதை மக்கள் அவதானிக்கின்றனர்.

மிரண்டுபோயுள்ள அதிகாரவர்க்க நிர்வாகிகள்

டொனால்ஸ் ரஸ்க் : புரட்சி தோன்றலாம் என அச்சம்

கிரேக்கத்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானித்திற்கு மாறாக அவர்களைத் தொடர்ந்தும் கொள்ளையிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளது. அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவருவது அதிகாரவர்க்கத்திற்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் முன்னைநாள் போலந்துப் பிரதமரும் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவருமான டொனால்ட் ரஸ்க் (Donald Tusk) தான் சார்ந்த அதிகாரவர்க்கம் மிரட்டப்படுவதை எந்தக் கூச்சமுமின்றி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“கிரேக்கத்தில் தோன்றியுள்ள நிதி நெருக்கடி குறித்து நான் அச்சமடையவில்லை, அங்கு தோன்றியுள்ள கருத்தியல் மற்றும் அரசியல் குறித்தே நான் அதிக அச்சமடைகிறேன். 1968 ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பாவில் உருவாகிவரும் புரட்சிகரச் சூழலே ஆபத்தானது.” என்கிறார்.

86 பில்லியன் யூரோக்களை கிரேக்கத்தின் வங்கிகள் ஊடாகக் கடனாக வழங்குவதற்கு தனது பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்ட ஜேர்மனிட அதிபர் அஞ்சேலா மர்கெல் Angela merkel), “கிரேக்கத்திற்குக் கடன் வழங்காவிட்டால் அங்கு வன்முறைப் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது” என்று உரையாற்றினார்.

இந்த நிலமைகள் தொடர்பக குறிப்பு எழுதிய பிஸ்னஸ் இன்சைடர் என்ற சஞ்சிகை “கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த போது புன்னகையுடன் அவதானித்தது போல இன்று ஐரோப்பியத் தலைவர்கள் வன்முறை குறித்தும் புரட்சி குறித்தும்வெளிப்படையாகவும் வழமைக்கு மாறாகவும் துயரடந்து காணப்படுகின்றனர்.” என்கிறது.

கிரேக்க மக்களின் தீர்ப்பு…

கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்த நாட்டைச் சூறையாடிய வங்கிகளும் பல்தேசிய நிறுவனங்களும் கிரேக்க அரசை கடனாளி அரசாக மாற்றியிருந்தன. பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்த அதே வேளை மக்களிடமிருந்து அதிக வரி அறவிடப்பட்டது.

சமூக உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் போன்றன குறைக்கப்பட்டன. ஐரோப்பிய மத்திய வங்கியும், உலக நாணய நிதியமும் வழங்கிய கடன் தொகையில் பெரும் பகுதியை வங்கிகளும், பல்தேசிய வியாபார நிறுவனங்களும் சூறையாடிக்கொள்ள உழைக்கும் மக்கள் வறிய நிலைகுத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சிரிஸா (Syriza) என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பு கடந்க ஆண்டு ஆட்சியை கையகப்படுத்தியது.

தொடர்ச்சியாகச் சூறையாடப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான முழக்கங்களோடு முன்வந்த சிரிஸா மட்டுமே ஒரே தெரிவாகக் காண்ப்பட்டது.

சிரிஸா ஆட்சியமைத்ததும், ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கடன் வழங்க முன்வந்தது. மறுபடி உழைக்கும் மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்து பல்தேசிய நிறுவனங்களை வியாபாரத்திற்கு அனுமதிக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்குமாறு கிரேக்க அரசைக் கோரியது. மூன்று யூரோக்களாகவிருந்த கிரக்க உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நீக்கக் கோரியது. ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்து ஓய்வூதியத்தைக் குறைக்கக் கோரியது.

இதனை தனது நாட்டின் மீதான மிரட்டல் என்று கூறிய கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் மக்களிடமே முடிவை விட்டுவிடுவதாகக் கூறி 5ம் திகதி ஜூன் மாதம் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பு விடுத்த முதல் நாளே பல்தேசியக் கோப்ரட் ஊடகங்களிலிருந்து ஐரோப்பிய அரசுகள் வரை அனைத்து ஏகாதிபத்தியக் கூறுகளும் பொது வாக்கெடுப்பில் சிப்ராசிற்கும் சிஸ்ராவிற்கும் எதிராக வாக்களித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சாரம் மேற்கொண்டன.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிட்டால், கிரேக்கம் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டு அழிவது உறுதியென்று மக்களை மிரட்டின. கிரேக்கத்தில் வெளியாகும் பெரும்பாலான ஊடகங்களும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களைக் கோரின. தீவிர இடதுசாரி அரசு கிரேக்கத்தில் பொருளாதார அவலத்தை ஏற்படுத்த முனைவதாக 24 மணி நேரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

எல்லாவற்றிற்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக நாணய நிதியத்திற்கு ஆதரவான கிரேக்க மக்களே அதிகம் என்றும், ஆக எதிர்த்தரப்பு வாக்களிப்புத் தோல்வியடையும் என்றும் போலியான கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாகின.

தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த ஐந்தம் திகதி மாலை வரை ஊடகங்கள் அனைத்தும் இதனையே திரும்பத்திரும்ப பிரச்சாரம் மேற்கொண்டன. பரபப்புச் செய்திகளால் மக்களின் சிந்தனையில் வலிந்து மாற்றாத்தை ஏற்படுத்தாத இடதுசாரி ஊடகங்கள் மட்டும் உண்மையை வெளிப்படுத்தின.

இவர்கள் அனைவரதும் முகத்தில் அறைந்து பதில் சொன்ன கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, உலக நாணய நிதியம் ஆகியவை முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 62 வீதமான கிரேக்க மக்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வாக்களித்தனர்.

2001 – 2007 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரேக்கத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை அதிகரித்தன. பல்தேசிய அங்காடிகள், உணவகங்கள், குடிபானங்கள், மருந்து நிறுவனங்கள், உல்லாசப்பயண நிறுவனங்கள் போன்றன கிரேக்கத்தை வளப்படுத்துவதாகக் கூறி தமது சூறையாடலை ஆரம்பித்திருந்தன. இந்த நிறுவனங்களுக்கான வரிவீதம் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவாகக் காணப்பட்டதால் கொப்ரட்களின் சொர்க்கபுரியாகக் கிரேக்கம் திகழந்தது.

சூறையாடலை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம் பணப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய வியாபார நிறுவனங்களிடம் வரி அறவிடுமாறு கூறவில்லை. மாறாக அரசிற்கு கடன் வழங்கிற்று. கடன் தொகைக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த மக்களைச் சூறையாடுமாறு கிரேக்க அரசை ஐரோப்பிய ஒன்றியம் கோரியது.

2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியில் கிரேக்கமும் சிக்கியது. நிதிவளம் ஒரு சில தனி நபர்களிடமும், நிறுவனங்களிடமும் குவிந்துவிட மக்களின் கொள்வனவுத் திறன் குறைவடைந்தது. இதனால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்தேசிய நிறுவனங்கள் அசுர பலத்தைப் பெற்றுக்கொண்டன. அரசுகளை அவர்களே தீர்மானித்தார்கள்.

2010 ஆம் ஆண்டில் £169 பில்லியன் தொகையை கிரேக்க அரசிற்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியமும், உலக நாணய நிதியமும் கிரேக்க அரசைச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தன. மீண்டும் உழைக்கும் மக்களின் ஊதியத்தைக் குறைக்குமாறும், வேலையற்றோருக்கான உதவித்தொகையிலிருந்து ஓய்வூதியம் வரைக்குமான அனைத்து உதவித்தொகைகளையும் அரைவாசியாகக் குறைக்குமாறு கிரேக்க அரசைக் கோரின. அதற்கு இணங்கிய கிரேக்க அரசு மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளின. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும் வங்கிகளும் பணக்காரர்களும் தமது சலுககைகளைப் பெற்றுக்கொண்டு கிரேக்க அரசை ஆதரித்தனர்.

2014 ஆம் ஆண்டு சிஸ்ரா வெற்றிபெற்றதும் பல்தேசிய நிறுவனங்கள் முன்னிலும் அதிகமாகத் தமது பணத்தைக் கிரேக்க வங்கிகளிலிர்ந்து பெற்றுக்கொண்டு வெளியேறின. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியன முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த சிஸ்ரா அரசு வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற்றது.

போலிப் பிரச்சாரங்கள் மிரட்டல்கள் போன்றவற்றின் மத்தியில் மக்கள் வெற்றிபெற்றனர்.

மக்கள் தீர்ப்பை நிராகரித்த அதிகாரவர்க்கத்தின் சர்வாதிகாரம்

அதன் பின்னர் கிரேக்க மக்கள் மீது ஐரோப்பிய அதிகாரவர்க்கம் யுத்தம் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டது. கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் உடன் பேச்சு நடத்திய ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம் ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு மிரட்டியது. உழைக்கும் மக்களின் அடிப்படை ஊதியத்கைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியது.

புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மின்சார சபை, விமான நிலையம் போன்ற பல்வேறு அரச சேவைகளைத் தனியார் மயமாக்குமாறு கோரப்பட்டுள்ளது. பொதுத் துறை ஊழியர்களைக் கண்காணித்து அதிக வேலை வாங்குமாறு அரசு கோரப்படுகின்றது. ஓய்வூதியத்திற்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரப்படுகின்றது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக்கு மேலும் வழியைத் திறந்துவிடுவதற்கு உணவு விடுதிகள், ஹொட்டேல்கள், நீர், மின்சாரம், மருந்துவகை போன்றவற்றிற்கான வரியை அதிகரிக்குமாறு கோரப்படுகின்றது.

மாற்று வழிகளை நிராகரிக்கும் சிப்ராஸ்..

கிரேக்கப் பிரதமரிடம் ஐரோப்பியக் கடனை நியாய விலையில் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு திட்டங்கள் இருக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கடனுக்காகக் காத்திருக்கிறார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் அடிப்படை வசதிகளை அழிக்கும் இத்திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரேக்கத்தில் பல போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்ளைக்கு எதிராக ஆரம்பித்தன.

புதிய சிக்கன நடவடிக்கை தோல்வியடையும் : முன்னை நாள் நிதியமைச்சர்

ஆளும் இடதுசாரிக் கட்சியில் சிப்ராசின் சரணடைவிற்கு எதிரான போக்கு அதிகரித்தது. வாக்கெடுப்பு வெற்றிபெற்ற முதல் நாளிலேயே தனது பதவியைத் துறந்த நிதியமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடையும் என எச்சரித்துள்ளார். கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டதாலேயே பதவியை விட்டு விலகியதாகக் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு எதிராக கிரேக்கத்தில் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மக்கள் இன்றைய தமது தேவைகளைப் புறக்கணித்து தமது எதிர்காலத்திற்காகப் போராடுகின்றனர்.

ஐரோப்பிய முதலாளித்துவத்திடம் சரணடைந்த சிறுபான்மை கிரேக்க அரச உறுப்பினர்கள் கிரேக்கத்தின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தாம் நிராகரித்த திட்டங்களை மீண்டும் திணிக்க முயலும் அரசுகும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கும் எதிராக மக்கள் மட்டுமல்ல ஆளும் சிஸ்ரா கட்சியிலும் பலர் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆளும் இடதுசாரிக் கூட்டமைப்பில் 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியம் திணித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியது என வாக்களிக்க மறுத்துள்ளனர்.

ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தின் சதி…

கிரேக்க மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமது அணிகளைப் பலப்படுத்திக்கொண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவும் நோக்கில் தம்மைத் தயார்படுத்திக்கொள்கின்றனர். அதற்கு எதிராக ஐரோப்பிய அதிகாரவர்க்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. ஊடகங்கள் கிரேக்கர்களின் வன்முறை குறித்து அவதூறுப் பிரச்சாரங்களை துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளன.

கிரேக்கத்தில் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியமைக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிரேகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என அரசு அறிவித்துள்ளது. ஜேர்மனி, உக்ரையின், அவுஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து சென்றவர்களே அவர்கள் என அடையாளம் காணப்படுள்ளதாக அந்த அறிவித்தல் கூறுகின்றது.

வேறு வழிகளற்ற அதிகாரவர்க்கத்தின் அடுத்த திட்டம்...?

ஐரோப்பிய ஒன்றியமும் அதிகாரவர்கமும் மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தால் இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு, இதனால் கிரேக்க மக்கள் மீது தமது திட்டத்தைத் திணிக்கவே ஐரோப்பிய அதிகாரவர்க்கம் முயல்கிறது.

அதற்கு எதிரான போராட்டங்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும், சதித்திட்டங்கள் மூலம் அழிக்கவும் ஐரோப்பிய அதிகாரம் முயற்சிக்கும். குறிப்பாக நிறவாதிகளையும், தேசிய வெறியர்களையும், அன்னிய மாபியாக்களையும் களத்தில் இறக்கும்.

சுயநிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் இனவாதப் போரட்டமாக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டதைப் போன்று கிரேக்க மக்களின் போராட்டங்களையும் அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் முயற்சிக்கும்.

ஒரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகச் சரணாகதியைப் போதிக்கும் ஏகாதிபத்தியங்கள் மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் ஊடாக இனவாதத் தீயை அணையாமல் பாதுகாக்கின்றன. கிரேக்கத்தில் தங்க விடியல் என்ற நிறவாதப் பாசிசக் கட்சி தங்குதடையின்றிச் செயற்படுகின்றது. மக்கள் அக்கட்சிக்கு எதிராக எழுச்சி பெற்றால் கிரேக்கத்தில் ஜனநாயகம் செத்துவிட்டதாக ஐரோப்பிய அதிகாரவர்க்கம் கூச்சலிடும்

எது எவ்வாறாயினும் ஏற்கனவே போராட்டங்கள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொண்ட, அறிவியல் வளர்ச்சியில் முன்னணியிலுள்ள ஐரோப்பிய உழைக்கும் மக்களை ஈழத் தமிழர்களைப் போன்று ஏமாற்ற முடியாது.

தவிர ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முதலாளித்துவக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு வகையான ஜனநாயக ஐக்கிய முன்னணி ஊடாக எழுச்சி பெற்றுள்ளன. ஸ்பெயினில் 2014 ஆம் ஆண்டு பல்கலைக் கழகப் பேராசியரியரான லெகிலெசியாஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொடெமொஸ் என்ற இடதுசாரி முன்னணி, ஒரு வருடத்திற்கு உள்ளாக அந்த நாட்டின் இரண்டாவது பெரும் கட்சியாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. கிரேக்க மக்களுக்கு ஆதரவாக அக்கட்சி பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

அதேவேளை இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் என்ற அமைப்பு இத்தாலியின் இரண்டாவது பெரும் கட்சியாகப் பரிணாமம் பெற்றுள்ளது. நடிகரும் இணையச் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியருமான பீப்பே கிரில்லோ இனால் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரி முன்னணி எதிர்கால இத்தாலியப் புரட்சியின் முகவுரையாகக் கருதப்படுகின்றது. இத்தாலி முழுவதும் செல்வாக்குப் பெற்றுள்ள ஐந்து நட்சத்திர இயக்கம் கிரேக்க மக்களின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறது.

ஆக, ஐரோப்பிய முதலாளித்துவமும் உலகின் அதிகாரவர்க்கங்களும் மிரண்டுபோயுள்ள சூழல் சமூக மாற்றத்திற்கும், விடுதலைக்கும், புரட்சிக்கும் புதிய உத்வேகத்தை வழங்கிவருகின்றது. பழமைவாதப் பிற்போக்கு அரசியல் பிழைப்பு வாதிகளின் கைகளில் சிக்கிச் சிதைந்துபோன தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இந்த வெளிச்சத்தில் வெற்றிக்கான அடித்தளத்தை நிறுவிக்கொள்ளலாம்.

Merkel: Grexit could bring “chaos and violence”

Donald Tusk told the FT

Greece just taught capitalists a lesson about what capitalism really means

Exit mobile version