Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

GTF இற்கு எதிராக BTF அறிக்கை – குத்துவெட்டின் பின்புலம்

BTFlogo1உலகத் தமிழர் பேரவை (GTF) இன் நடவடிக்கைகளிலும் அவற்றின் முயற்சிகளிலுமிருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் என பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இவ்விரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்புக்களாகக புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னர் பிரித்த்தானியாவில் செயற்பட்டுவந்தன. GTF அமைப்பு தோன்றிய ஆரம்பகால நோக்கங்களான வெளிப்படைத் தன்மை, கூட்டு முடிவெடித்தல், ஜனநாயகத் தன்மை, அடிமட்ட மக்கள் மத்தியாலான செயற்பாடுகள் ஆகியவற்றிலிருந்து GTF விலகிச் செல்வதால் நாம் அந்த அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்கிறோம் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
தவிர தமிழர்களுக்கு இலங்கையில் நடைபெறும் நிறுவனமயப்படுத்தப்பட்ட இனப்படுகொலக்கு எதிராகக் குரல்கொடுக்க GTF தவறிவிட்டதாகவும் அதுவும் தாம் அவ்வமைப்புடன் இணைந்து செயற்பட இயலாமைக்கான காரணம் என்றும் BTF தெரிவித்துள்ளது.

தமிழர்கள் மத்தியில் இந்த இரண்டு அமைப்புக்கள் குறித்த குழப்பங்கள் நிலவிவருவதாகவும் இதன் காரணமாகவே தாம் GTF குறித்த இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் BTF ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் எங்கும் வாழும் தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் இணைக்கும் நோக்கிலேயே உலகத் தமிழர் பேரவை தோன்றியதாகவும் அதன் செயற்பாடுகள் காரணமாக இன்று பல அமைப்புக்கள் அன்னியப்பட்டுள்ளதாகவும் BTF இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை மையமாகக்கொண்டு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நான்கு பிரதான அமைப்புக்கள், பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF), உலகத் தமிழர் பேரவை(GTF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் நாடுகடந்த தமிழீழம் (TGTE)ஆகியவையாகும். கருத்தியல் அடிப்படையில் பெரும்பாலும் ஒரே நிலைப்பாடுகளையே கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கள் எதனிடமும் அரசியல் வேலைத்திட்டம் இதுவரை காணப்பட்டதில்லை. இலங்கையில் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவந்த இந்த அமைப்புக்கள் இன்று பிரித்தானியா அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிடுவதற்கு ஆதரவளிக்கின்றன.

தவிர, மூன்று செயற்பாடுகளை இந்த அமைப்புக்கள் மேற்கொள்கின்றன,

1. மாவீரர் தினம் போன்ற மரண அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்கு படுத்தல்.

2. அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் இலங்கை அரசுக்கு எதிராகத் தீமானம் நிறைவேற்றுவதாகக் கூறும் போது ஜெனீவா சென்று ஆர்ப்பாட்டம் பிரச்சாரம் போன்றவறை நடத்துதல்.

3. ராஜபக்ச குடும்பத்தினர் பிரித்தானியாவிற்கு வந்து செல்லும் போது ஆர்ப்பாட்டங்களை நடத்துதல்.

இந்த அமைப்புக்களின் ஏகாதிபத்திய சார்பு நிலை பல பாதிப்புக்களை பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் உள்ளேயே ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், சிரியாவில் பிரித்தானியாவின் தலையீட்டை நிறுத்தியது. தவிர, உலகம் முழுவது ம் உள்ள பல்வேறு போராட்ட அமைப்புக்கள் பிரித்தானியாவில் செயற்படுகின்றன. இவர்களிடமிருந்து தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை அன்னியப்படுத்தி எதிரிகளான ஏகாதிபத்தியங்களிடம் அதனை விற்பனை செய்த ‘பெருமை’ இந்த அமைப்புக்களையே சாரும்.

பிரித்தானியாவின் உட்புறத்திலேயே புலம் பெயர் தமிழகளின் எரியும் பிரச்சனைகள் இவர்களுக்கு எட்டுவதில்லை. அண்மைக் காலங்களில் புலம் பெயர் நாடுகளில் போர்க்குற்றம் என்ற அடிப்படையில் கைதுசெய்யப்படும் போதும், ஐரோப்பா முழுவதும் முன்னை நாள் போராளிகள் கைதாகும் போதும் அதனை அரசியல் இயக்கமாக முன்னெடுக்க மேற்குறித்த எந்த அமைப்பும் முன்வரவில்லை.

ஈழத் தமிழ் அகதிகள் அரசின் குடியவரவுக் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் போது அறிக்கை வெளியிடும் அளவிற்குக் கூட இவர்களின் போராட்டங்கள் அமைந்திருக்கவில்லை. தேசியத்திற்காகப் போராடுவதற்காக கூறும் இவர்கள் அதற்கு நேர் எதிராகச் செயற்படுகின்றனர். ஈழத் தமிழர்களின் தேசியமும் கலை இலக்கியமும் பண்பாடு விழுமியங்களும் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அதனைக் கண்டுகொள்ளாமல் அவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன.

தென்னிந்தியாவின் சினிமா வன்முறைக் கலாச்சாரத்தை புலம் பெயர் நாடுகளில் உட்செலுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் இந்த அமைப்புக்களின் ஆதரவாளர்களும் அமைப்புகளும் பின்புலத்தில் செயற்படுகின்றனர்.

பிரித்தானியாவில் கல்விகற்கவென இலங்கையிலிருந்து புலம் பெயரும் தமிழ் இளைஞர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பிரித்தானியாவில் இவ்வமைப்புக்களின் நெருங்கிய ஆதரவாளர்களின் நிறுவனங்களில் பிரித்தானியச் சட்டங்கள் நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தை விடக் குறைவான கூலிக்கு வேலைசெய்கின்றனர். தாம் செயற்படும் மண்ணிலேயே நடைபெறும் இந்த அவலங்களின் மீது அமர்ந்துகொண்டு மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூச்சலிடும் இந்த அமைப்புக்கள் அடிமட்ட மக்களின் பிரச்சனைகளோடு எந்தத் தொடர்பும் அற்றவை. ஆக, பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சாட்டுவது போல, எந்த அமைப்புக்களுமே அடிமட்ட மக்களின் பிரச்சனைகளோடு தொடர்பற்றவை.

இனி இலங்கையில் ராஜபக்சவைப் பலவீனப்படுத்துவது இவர்களின் நோக்கமா என்றால் அது சந்தேகத்திற்குரியதே.

வன்னி இனப்படுகொலையை ராஜபக்ச அரசு திட்டமிட்டு நடத்திய பின்னர் பல தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. நிலப்பறிப்பு, கலாச்சார பண்பாட்டு அழிப்பு, ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான தாக்குதல்கள், சிங்கள உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் என்பன இலங்கை பாசிச அரசின் மக்கள் மீதான தாக்குதல்கள்.

குறிப்பாக ராஜபக்ச அரசின் இஸ்லாமிய்த் தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மலையகத் தமிழர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றிற்கு எதிராக அவர்களுடன் ஒருங்கிணைந்து உலகின் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களை இணைத்துப் போராட்டங்களை நடத்தி ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் அனைத்து சந்தர்பங்களையும் இந்த அனைத்து அமைப்புக்களும் தவற விட்டுள்ளார்கள். தவிர, தொடரும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாத இனக்கொலை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிராக அனைத்துத் தேசிய இனங்களையும் உலக அமைப்புக்களையும் இணைத்துப் போராடும் எந்தத் திட்டமும் எந்த அமைப்புக்களிடமும் காணப்படவில்லை.

பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் அறிக்கைகூட வெளியிடத் திரணியற்ற இந்த அமைப்புக்கள் இனப்படுகொலைக்கு எதிராகச் செயற்படுவதில்லை.

டேவிட் கமரன் ‘கோரமான புலிகளை அழித்ததற்காக’ ராஜபக்சவை வாழ்த்தும் அதே வேளை ராஜபக்சவோ புலிகள் இன்னும் செயற்படுகிறார்கள் என்று கூறுகிறார். இந்த வேளையில் நாங்கள் தான் புலிகள் என்று ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றன இந்த அமைப்புக்கள்.

இன்ன்னொரு புறத்தில், புலம் பெயர் நாடுகளிலிருந்து ராஜபக்ச அரசோடு நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி பல புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் பாசிச அரச ஆதரவாளர்களாச் செயற்படுகின்றனர்.

தன்னார்வ நிறுவனங்கள், மனிதாபிமான உதவி, வியாபார முதலீடுகள், சாதீயம் போன்ற சமூகப் பிரச்சனைகள், இலக்கிய நிகழ்வுகள் போன்ற பல்வேறு வழிகளில் தமது இலங்க்கை அரச தொடர்புகளை நியாயப்படுத்துகின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக இனியொரு போன்ற வெறும் இணையம் சார்ந்த சில தனி நபர்கள் மட்டுமே குரல்கொடுக்கின்றனர். பல்வேறு அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் சிறிய குழுக்கள் செயற்படும் அளவிற்குக் கூட இந்த நான்கு அமைப்புக்களும் செயற்படுவதில்லை.

ஆக இவர்கள் எவருமே நிறுவனமயப்படுத்தப்பட்ட இனச்சுத்திகfரிப்பிற்கு எதிராகச் செயற்படுவதில்லை. மாறாக, தமிழ்ம் மக்களின் தலைமையை வலிந்து கையிலெடுத்துகொண்டு தேவையான போராட்டங்களைத் திசைதிருப்பும் செயற்பாடுகளையே இந்த அமைப்புகள் மேற்கொள்கின்றன.

இனியொரு.. போன்றவை கட்டுரைகள் ஊடாகவும் கடிதங்கள் விவாதங்கள் ஊடகவும் பல்வேறு ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், புதிய செயற்பாட்டு உக்திகளையும் இந்த அமைப்புக்களிடம் முன்வைத்த போதும் இவை அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஆக, அனைத்து அமைப்புக்களிடமும் வெளிப்படைத் தன்மை என்பது அற்றுப்போயுள்ளது.

இந்த நிலையில் BTF GTF ஆகிய அமைப்புகளிடையே தோன்றிய முரண்பாடுகளின் பின்புலம் என்ன.? பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டவை, பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் உள்முரண்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி ஆகியவற்றுடனனான தொடர்புகளும் அவர்களின் நலன்களுமே இந்த அமைப்புக்களின் அடிப்படையான நலன்கள். இக்கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சலுகைகள், வர்த்தகத் தொடர்புகள் போன்றவையே இந்த இரு அமைப்புக்களின் அரசியலையும் நிர்ணையிக்கின்றன. தமிழப் பேசும் மக்களின் நலன்கள் அல்ல.

உலகத் தமிழர் பேரவையும் அவர்களின் வர்த்த நலன்களும் தன்னார்வ நிறுவனங்கள் பாணியிலான பேச்சுவார்த்தை அரசியலைச் சார்ந்தும் அதன் ஆதாரமாக தொழிற்கட்சியும் செயற்படுகிறது. பேச்சுவார்த்தையை மட்டுமே அரசியலாகக் கொண்ட அதிகார வர்க்க அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அமைப்பு பிரிஎப் இலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிற்கட்சி ஆதரவாளர்களையும் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

இதன் மறுபக்கத்தில் டேவிட் கமரனின் இலங்கைப் பயணத்தின் பின்னர் பி.ரி,எப் இல் தனது செல்வாக்கை பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் வளர்த்துக்கொண்டனர். தமிழர் அரவசியலில் தலையிடுவதற்கு மிக நீண்ட காலங்களின் முன்பே கொன்சர்வேட்டீவ் (பழமைவாதக் கட்சியின்) உயர்மட்ட ஆலோசகரான கலாநிதி அர்ச்சுனா சிவானந்தம் போன்றோர் பிரிஎப் ஐ பழமைவாதக் கட்சியின் செல்வாக்கின் கீழ் கொண்டுவந்தனர்.

பிரித்தானிய வங்கியான Barclays இன் Director பதவி மற்றும் பிரஞ்சு வங்கியான Société Générale இன் Director பதவி ஆகியவற்றை வகிக்கும் பல பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆலோசகருமான அர்ச்சுனா சிவாநதன், பி.ரி.எப் இன் துணை அமைப்பான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பின் தலைவர். இலங்கை அரசிற்கும் அதேவேளை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பண உதவி வழங்குவதாகக் கருதப்படும் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக புலம் பெயர் அமைப்புக்கள் எப்படுக் குரல்கொடுக்கலாம்?

ஆக, தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டு புலம் பெயர் நாடுகளை நோக்கித் துரத்தப்ப்பட்டு அங்கு ஏகாதிபத்தியங்களின் கோரப்பிடியில் அதன் நிறைவை நோக்கி நகர்த்தப்பட்டுகொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

Exit mobile version