ஒரு தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோருகின்றது.
இலங்கை என்ற சிறிய நாட்டில் வடக்குக் கிழக்குப் பிரிந்து சென்றால் தமது இருப்பிற்கு ஆபத்து என சிங்கள மக்கள் மத்தியில் இலங்கை அதிகாரவர்க்கம் பிரச்சாரம் மேற்கொள்கிறது. அதனூடாக தேசிய இன முரண்பாட்டை ஆழப்படுத்தி அதனை வாக்குகளக மாற்றிக்கொள்கிறது.
ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பிரிந்து செல்லும் உரிமையை நிராகரிக்கும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே தேசியவிடுதலைப் போராட்டமாகும்.
இவ்வாறான சூழலில் வட கிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமை குறித்துப் பேசும் பாராளுமன்ற அரசியல் வாதிகள் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரித்துவிட்டு தம்மை ஜனநாயகவாதிகள் என அழைத்துக்கொள்வது நயவஞ்சகத்தனம்.
இலங்கையில் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மைத் தேசிய இனமும், சிறுபான்மைத் தேசிய இனங்களான வட-கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள் என நான்கு தேசிய இனங்கள் உண்டு.
இவை அனைத்தித்தினதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றான பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கும் போது மட்டுமே நாம் எமது உரிமைகள் குறித்துப் பேச முடியும்.
சிங்கள தேசிய இனத்தின் அதிகாரவர்க்கம் அப்பாவிச் சிங்கள மக்களை நச்சூட்டி வைத்திருப்பது போன்றே, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணைய உரிமைக் குரலெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சீ.வீ.விக்னேஸ்வரன் போன்றோரும் இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே இருப்பதாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதனால் மலையக மக்களையும், முஸ்லீம் தமிழர்களையும் கருத்தியல்ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர்.
வடகிழக்குத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களை அன்னியப்படுத்தி போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இது கருதப்பட வேண்டும்.
தலைவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இவர்கள் தமது அரசியல் அறியாமையின் காரணமாக இவ்வாறு கூறி வருகின்றனரா அல்லது திட்டமிட்ட செயற்பாடா என்பதில் தெளிவில்லை.
இலங்கை என்ற நாட்டினுள் நான்கு தேசங்கள் இருக்கும் போது, வட கிழக்குத் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மட்டும் சுய நிர்ணைய உரிமை உரித்துடையவர்கள் அல்ல. ஒரு நாடு இரு தேசம் எனக் கூறிவரும் இந்த இருவரும் ஏனைய தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரிக்கின்றனர்.
இலங்கையிலுள்ள நான்கு தேசத்தின் மக்களும் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதா அன்றி பிரிந்து செல்லும் உரிமையைப் பாதுகாத்துக்கொண்டு கூட்டாட்சி நடத்துவதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். கஜேந்திரகுமாரினதும், விக்னேஸ்வரனினதும் ‘இரண்டு தேசம்’ என்ற கருத்து ஏனைய தேசிய இனங்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துவிடுகிறது.
ஏனைய தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்தால் மட்டுமே வட கிழக்குத் தமிழர்கள் மீதான சந்தேகம் நீங்கி இலங்கை அரசிற்கு எதிரான பல மிக்க போராட்டம் தோற்றம் பெறும்.
லண்டன் சென்ற விக்னேஸ்வரன் முஸ்லீம் மக்கள் தம்முடன் ஒத்துழைப்பார்களா என்ற சந்தேகத்தை வெளியிட்டார். அவர்களது சுய நிர்ணைய உரிமையை நிராகரித்து ஒடுக்க எண்ணினால் முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல மலையக மக்களும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.