Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய சமூக உருவாக்கத்தில் போராளிகளின் பங்கு : எஸ்.என்.கோகிலவாணி

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது?

கோகிலவாணி

முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதற்கான பதிலை ஒற்றை வசனத்திலோ அல்லது ஒற்றை விடயத்திலோ அடக்கி விட முடியாது. அது ஒற்றைபரிமாணம் கொண்டதல்ல.
புனர்வாழ்வு என்ற பெயரில் நடத்தப்பட்ட போராளிகளை அரசியல் நீக்கம் செய்யும் நடவடிக்கை அவர்கள் தொடர்ந்து சமூகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை வழங்கவில்லை. முழு நேர அரசியல் போராளிகளான அவர்கள் சமூகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு விடயத்தை இங்கே நான் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். புனர் வாழ்வு என்பது எதனைக் குறிக்கின்றது? புனர்வாழ்வு என்பதன் முதல்படியே அவர்களின் உடல் மற்றும் மனோவியல் சார்ந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவிலிருந்த ஆரம்பமாகும். இலங்கை அரசின் புனர்வாழ்வோ அவர்களை அரசியல் நீக்கம் செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிவதாகவே அமைந்திருந்தது.
அரச தரப்பால் வழங்கப்ப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கை என்பது வெறுமனே அப்போராளிகளை தடுத்து வைத்திருந்தது மட்டுமே. அக்கால கட்டத்த்தில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகள் கூட அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை. உதாரணமாக பம்பைமடு என்ற தடுப்பு முகாமில் பெண் போராளிகளைத் தடுத்து வைத்திருந்தார்கள். அங்கே சுமார் 1800 இற்கும் 2000 இற்குமிடையிலான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுள் மாற்றுத் திறனாளிகள் சுமார் 400இற்கும் அதிகமாக இருந்தார்கள்.

அவர்கள் எதுவிதமான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படாத நிலையிலேயே விடுவிக்கப்படிருந்தார்கள். எஞ்சியிருந்தோரில் சுமார் 300 இற்கும் குறைவானவர்களிற்கு தொழிற்பயிற்சி என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிகளை ( அதிக பட்ச காலம் 2 வாரங்கள்) வழங்கியிருந்தனர். இதே நிலைமைதான் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆண் போராளிகளுக்கும். ஆகவே இங்கு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் என்பது வெறுமனே தடுத்துவைக்கப்பட்டு உளவியல் ரீதியான வதைகளுக்கு அவர்களை உட்படுத்தியபின்னர் விடுவிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறதேயன்றி வேறு எதையுமல்ல.

உங்களது கேள்வியில் முன்னாள் போராளிகளது தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று கேட்டிருந்தீர்கள். அனைவரையும் போல் சாதாரண வாழ்வியல் தொடக்கம் அரசியல் நிகழ்வுகள் வரை ஒவ்வொரு விடயத்திலும் அவர்களிற்கென்று தனியானதாகவோ பொதுவானதாகவோ நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனாலும் அதனை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு பல தடைகள் இருக்கின்றன. அதில் பிரதானமானது அவர்களது பாதுகாப்புத் தொடர்பான நிச்சயத்தன்மை இன்மை. அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் ஒரு நிச்சயத் தன்மை உறுதிப்படுத்தப்படும் வரை அனைத்து விடயங்களும் அவர்களுக்கு சவாலானதாகவும், மிரட்டுகின்ற தன்மை கொண்டதாகவுமே அமையும். இதனை நாங்கள் ஆரோக்கியமானதாகப் பார்க்க முடியாது.

சமூகத்தில் முன்னாள் போராளிகளுக்கான அங்கீகாரம் எவ்வாறு காணப்படுகின்றது?

யாது. வேண்டுமானால் முன்னாள் போராளிகள் அவரவரது குடும்ப உறவுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்று கூறிக்கொள்ளலாம். போராளிகளுக்கான தற்போதைய சமூக அங்கீகாரம் என்னும் போது ஒவ்வொரு போராளியும் 2009 களின் முன்னர் தங்களுக்கு எத்தகைய அங்கீகாரம் இந்த சமூகத்திடமிருந்து கிடைத்தது என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கத் தவற மாட்டார்கள். 2009களில் இருந்து இன்று வரை அவர்களுக்கான அந்த சமூக அங்கீகாரமென்பது முற்றிலும் நேர்மாறான ஒன்றாகவே இருந்து வருகின்றது.

ஒட்டு மொத்தத்தில் கூறப்போனால் முன்னாள் போராளிகள் எனப்படுவர்கள் தோற்கடிக்கப்பட்ட ஒரு போராட்டத்தின் எச்சங்களாகவே பெரும்பாலானவர்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோக்கப்படுகிறார்கள் ஒரு சிலர் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருந்துவிட்டுப் போகலாம்.

இன்றும் கூட சமூகத்தில் ஒரு தனிக் கூட்டமாக கருதப்பட்டு புறமொதுக்கப்படுகின்ற நிலைமை பல முன்னாள் போராளிக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பது ஒரு நிதர்சனமான விடயம். அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் இப் போராளிகள் விடயங்களில் அக்கறை காட்டுவதாகவும் அவர்களது வாழ்வியல், பொருளாதாரம் மற்றும் சமூக அங்கீகாரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் எடுப்பதாகவும் கூறி வருகின்றார்கள். ஆனாலும் நடைமுறையில் அவ்வாறு எதுவும் நடைபெறுவதில்லை. போராளிகளாக இருந்த ஒரே காரணத்திற்காகவே அரச செயலகங்களிலும் அரசியற் கட்சி அலுவலகங்களிலும் அலட்சியப்படுத்தப்பட்டமைக்கும், அவமானப்படுத்தப்பட்டமைக்கும் சான்றுகள் உண்டு.

இதன் காரணமாக சமூகத்தின் ஒரு புது அங்கமாக அவர்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் . இச் சமூகத்தின் கூட்டு உளவியல் இன்னும் பேரினவாதத்தின் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்கள் இன்றுவரை அச்சம் கலந்த, துறைசார் பயிற்சிகளற்ற, தாம் நேசித்த சமூகத்திலிருந்து ஒரு வித புறக்கணிப்பிற்கு உள்ளானவர்களாக காணப்படுகின்றனர். இதிலிருந்து முன்னாள் போராளிகளிற்கான சமூக அங்கீகாரம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புனர்வாழ்வின் பின்னர் போராளிகளை சமூகம் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது?

வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு காலத்தில், போராளிகளாக சமூகத்தின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள்,

இனப்படுகொலைக்குப் பின்னான சமூகத்தில் சமூக மற்றும் உளவியல் புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்படுவதை நிராகரிக்க முடியாது. அதற்காக முழுச் சமூகத்தின்மீதும் இங்கே குற்றம்கூறவில்லை. போருக்குப் பின்னான சமூக உருவாக்கம் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. நமது அரசியல் தலைமைகள் நாங்கள் தோற்றுப் போனவர்கள் என்ற மனோ நிலையிலிருந்து எங்களது உரிமைக்கான கோரிக்கையை அணுகுவதால் தாழ்வுச் சிக்கல் மற்றும் அச்ச உணர்வுடன் கூடிய சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எங்களது உரிமை எங்களுக்குரியது. அதை போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு நிலையினை மறக்கடித்து ஆளும் பேரின வாதம் தருவதைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்துவிட வேண்டும் என்ற மன நிலையினை அரசாங்கமும் எங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளும் செவ்வனே செய்து வருகின்றனர். எங்கள் மக்களைப் பொறுத்தவரையில் போரினால் அவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட காயங்களின் வடு இன்னும் ஆறவில்லை. அந்த மக்கள் மத்தியில் காலத்திற்குக் காலம் போராளிகளின் இருப்பு என்பது மீண்டும் ஒரு இரத்தக் களரியினை ஏற்படுத்தி விட்டுவிடும் என்பது போன்ற பொய்யான கருத்துருவாக்கம் அரச மற்றும் ஏனைய தரப்புக்களால் மறைமுகமாக ஏற்படுத்தப்படுகின்றது. அதை மெய்ப்பிப்பதுபோல் முன்னாள் போராளிகளின் கைதுகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் ஒரு சமூக நலன் கருதி ஒரு ஒன்று கூடல் நடாத்தினால் கூட அது பாதகமாகக் கணிக்கப்படுகின்றது. மக்களும் அதை பிரச்சனையாகக் கருதி அத்தகைய விடயங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய சம்பவங்கள் பாதுகாப்பற்ற உளவியலைப் போராளிகள் மத்தியில் ஏற்படுத்திவிடுகிறது. அச்சஉணர்வு தன்னம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவிக்கிறது. இவற்றின் நீட்சியாக பேரினவாத அரசின் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இவற்றைக் கடந்து சமூகத்தில் தொழில் வாய்ப்புக்கான போதிய துறைசார் தகமைகள் இன்மை. அதனால் ஏற்பட்ட வறுமை.

இவை மட்டுமல்ல இன்றைய புதிய சமூக உருவாக்கத்தின் பின் தங்கியகூறுகளை எதிர்ப்பதற்கான அரசியல் தலைமை இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகிறது. அந்த வெற்றிடத்தைப் பிரதியிட்டுக்கொள்ளும் பிற்போக்கு அரசியல் தலைமைகள் தமது சுய நல அரசியல் இலாபத்திற்காக எமது போராட்டத்தையும் போராளிகளையும் பலியிட்டு காலத்திற்குக் காலம் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றனவேயொழிய இம் முன்னாள் போராளிகளின் சமூக இருப்பிற்காக எதையும் செய்திருப்பதாகக் தெரியவில்லை.

ஆகவே சமூகத்திற்கான சரியான வழி காட்டுதல்கள் ஏற்படுத்தப்படும் வரை இப்போராளிகள் மீதான புரிதல்கள் என்பது சமூகத்தைப் பொறுத்தவரை கடினமானதாகவே அமையும்.

அண்மைக் காலங்களில் முன்னாள் போராளிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில் ஏன் இலங்கையின் தென்பகுதியினையும் நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். சிறிய வெள்ளப்பெருக்கினால் ஒரு இடப்பெயர்வு நிகழ்ந்தால் கூட அந்த மக்களுக்கு, உளவியல் ஆலோசனை, மருத்துவ சேவைகள் நட்ட ஈடு என்று முழுமையாக அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை அனைத்து அடிப்படைகளும் ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களுக்கு அந்த உரிமை அல்லது வாய்ப்பு என்று கூடக் கூறிக்கொள்ளலாம்

முற்றாகவே மறுக்கப்பட்டிருக்கின்றன. கந்தகக் காற்றை பல நாட்களாகச் சுவாசித்தவர்களுக்கு, குண்டுச் சன்னங்களைச் சுமந்த உடலோடு உலா வருபவர்களுக்கு, நச்சு வாயுக்களின் நடுவே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு இன்றுவரை முழுமையான மருத்துவம் சார் மதிப்பீடு (common medical assessment) செய்யப்படவில்லை இலங்கை அரசாங்கம் மேற்படி விடயத்தில் கவனமெடுத்து தனது படை வீரர்களுக்கு உடல் சார்ந்த உளவியல் சார்ந்த மருத்துவ நடவடிக்கையினை முழுமையாக மேற்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த யுத்தத்தைப் பொறுத்தவரையில் மிக மோசமான தாக்கங்களைக் கொண்டிருக்கும் எங்களது மக்களுக்கோ அதன் ஒரு பகுதியான போராளிகளுக்கோ இது வரை எந்த விதமான மருத்துவ நடவடிக்கைகள் வழங்கப்படவோ அல்லது அது சார்ந்த ஆய்வோ மேற்கொள்ளப்படவில்லை.

நேற்று கூட ஒரு செய்தி. அதாவது காணாமற் போனவர்களைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம சொல்லியிருக்கின்றார் கொத்துக்குண்டுகளை இராணுவம் யுத்தத்தில் பாவித்திருந்தால் அது சட்டவிரோதமல்ல என்று. இத்தகைய மன நிலையினைக் கொண்டுள்ளவர்களை தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடும் இத்தகையதே.

ஆகவே அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. அண்மைக்காலமாக பலர் இனம்புரியாத நோய்களினால் திடீர் மரணங்களைத் தழுவியிருந்தார்கள். அவர்களுள் பலர் முன்னாள் போராளிகள் எனக் கூறப்படுகின்றது.

அண்மையில் ஊடகங்களில் சுமார் 103 முன்னாள் போராளிகள் இனம் புரியாத நோயினால் மரணித்ததாக தகவல்கள் வெளி வந்திருந்தன. எனக்கு தெரிந்த வகையில் சுமார் ஆறு பேர் வரையில் சமீபத்தில் புற்று நோய்த் தாக்கத்தினால் மரணித்திருந்தனர் அவர்களுள் மூவர் முன்னாள் போராளிகள். (ஒருவர் தமிழினி, சிவகௌரி- கிளிநொச்சி, கைதடியைச் சேர்ந்த மோகன்) ஏனைய மூவரும் வன்னிப்பகுதியில் இறுதி யுத்தக்காலப் பகுதியில் அங்கு வாழ்ந்திருந்தவர்கள். ஆகவே தடைசெய்யப்பபட்ட ஆயுத வெடிபொருட்களை ஏவி இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமானத்திற்கான யுத்தத்தின் பின்விளைவு இன்றுவரை எங்களது மக்களது குருதியில் கலந்திருப்பது மேற்குறித்த மரணங்களிற்குக் காரணமாக அமையலாம்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். 1996ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல் முடிந்து ஒரு வாரம் கடந்ததன் பின்னர் குறித்த ஒரு வயல் வெளியினைப் போராளிகளும் மக்களும் கடந்து சென்றபொழுது அவர்களது உடல் மஞ்சள் நிறமாக மாறியதுடன் தலையினை பிளக்கக் கூடிய வகையில் தலையிடியும் ஏற்பட்டது. இந்த நிலை சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்தது.

ஒரு சில நிமிடங்களில் ஏற்பட்ட தாக்கங்கள் அவை. ஆகவே தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு மேலாக நஞ்சூட்டப்பட்ட சுற்றாடலைச் சுவாசித்து வந்த எங்களது மக்களது மற்றும் போராளிகளது நிலைமை மிக மோசமானது. இந்த மோசமான பின் விளைவுகள், குறித்த மரணங்களிற்கு காரணங்களாக அமைந்திருக்கலாம். ஆனால் இதனை ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனைகளின்றி நிரூபிக்க முடியாது. ஒருவர் இருவரல்ல சுமார் 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தாக்கங்களிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ரீதியான பரிசோதனை அவசியம் என்பதை இதுவரை இலங்கை அரசு கண்டுகொண்டதில்லை.

எங்களது மக்கள் பிரதி நிதிகளும் கண்டு கொண்டதில்லை. காலத்திற்குக் காலம் தமது இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக விடுக்கப்படும் அறிக்கைகள், பிரேரணைகளுடன் ஓய்ந்து விடுவார்கள். எங்களிற்கென்று இரண்டு மாகாண சபைகள் உண்டு. தமிழ் பேசும் தலைமைகள் மற்றும் அங்கத்தவர்கள் பெரும்ப்பான்மையாக அந்த சபைகளில் அங்கம் வகிக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண சபை 2012இலும் வடக்கு மாகாண சபை 2013இலும் தெரிவு செய்யப்பட்டன. எத்தனையோ பிரேரணைகள் இச் சபைகளினால் முன்மொழியப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்பட்டனவா இல்லையா என்பது வேறு விடயம்.

ஆனால் இதுவரை இந்தக் கொடூர போர்முனையினை எதிர்கொண்ட மக்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என 103 மரணங்கள் என ஊடகங்களில் செய்தி வரும் வரை அரசியல்வாதிகளின் பக்கத்திலிருந்து எந்தவகையான அழுத்தங்களும் வெளிவந்ததில்லை. இதற்கான முழுமையான திட்டம் ஒன்றை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசைக் கோருவதற்கு அரசியல்வாதிகள் எவரும் இன்று வரை முன்வரவில்லை. மருத்துவப் பரிசோதனைக்கான பொதுவான வெளி ஒன்றை மக்களுக்கும் போராளிகளுக்கும் உருவாக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தி முழுமையான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசின் மீது அழுத்தங்கள் பிரையோகிக்கப்பட வேண்டும்.

வன்னியின் ஒரு சிறிய மூலைக்குள் நச்சுக் காற்றையே சுவாசித்த மனித இனத்தின் ஒரு பகுதி மக்களும் போராளிகளும் இன்று அனாதரவாக விடப்பட்டுள்ளனர். அந்த நச்சுக் காற்றை தோற்றுவித்து போர்க்குற்றம் புரிந்த அரசாங்கம் இன்று நல்லிணக்கம் குறித்து குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் பேசிக்கொண்டிருக்கிறது.
மக்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசாங்கமே இதற்கான பொறுப்பினை ஏற்று அதனை நிவர்த்தி செய்வதென்பது கட்டாயமானதாகும்.

விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதா?

இதற்குப் பதில் கூறுவது கடினம் என்றுதான் நான் நினைக்கின்றேன். வன்னியில் மக்கள் மீது நடாத்தப்பட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், அந்த மக்களிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் ஏனைய வளங்களைக் கருத்திற் கொண்டால் இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தொகையினைப் போன்று எத்தனையோ மடங்கு அதிகமானவர்களிற்கு அவை போதுமானதாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதே போன்றே போராளிகளிற்கான உதவித் திட்டங்களும். உதவி வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்தவரையில், போராளிகளைச் சந்தித்தோ அல்லது அவர்களைத் தமது அலுவலகங்களிற்கு வரவழைத்தோ அந்த உதவிகளை வழங்குவதோடு முடிந்து விடுகின்றது.

வழங்கப்பட்ட உதவித் திட்டத்திற்கான தொடர் கண்காணிப்போ அல்லது மதிப்பீடோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அந்தத் உதவித் திட்டங்கள் நீடித்த தன்மையினைக் கொண்டிருப்பதில்லை. இத்துடன் இந்த உதவித் திட்டம் வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றின் மோசமான தன்மைகளை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். ஒரு பிரபல்யமான சர்வதேசத் தொண்டு நிறுவனம் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் என கருதப்படும் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அங்கு பணிபுரிந்த உள்ளூர் பணியாளர்கள் அந்த உதவித் திட்டத்திற்கான நிதி தொடர்பில் மோசடிகளில் ஈடுபட்டு அவ்விடயம் ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் மூடிமறைக்கப்பட்டு விட்டது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம் என்ற ஔவைப் பிராட்டியின் வரிகள் இங்கே பொருந்தும். இங்கேயும் நெல்லுக்குத்தான் நீர் விடப்பட்டது ஆனால் பொசிந்தது நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கு என்று மாறிவிட்டது. ஆகவே இத்தகைய உதவித்திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைகிறார்களோ இல்லையோ அது சார்ந்த நிறுவனங்களும் பணியாளர்களும் மிகுந்த பயனடைகிறார்கள் என்பதே மனதிற்கு வருத்தம் தரும் உண்மையாகும்.

அதே போன்று புலம் பெயர் உறவுகளினால் இப்போராளிகளிற்கெனப் பல தரப்பட்ட நலத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான நிதிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை கட்டமைக்கப்படாமல் உதிரிகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டால் அதன் பலன் என்பது பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்றினூடாக அத்தகைய விடயம் மேற்கொள்ளப்படும் போது அவை வினைத்திறன் வாய்ந்ததாக அமையும் என்பது எனது அபிப்பிராயம்.

துறைசார் பயிற்சிகள், சுய பொருளாதாரத் திட்டங்கள், கூட்டுப்பண்ணை போன்ற அமைப்புக்கள் ஆகியன வாழ்வாதராங்களுக்காக உருவாக்கப்படலாம். மேலும், மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆய்வுகள், போன்றன மேற்கொள்ள பக்கபலமாக அமையலாம். சமூகத்திற்காகப் போராடிய போராளிகள் போருக்குப் பின்னான சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றவும் சாட்சிகள் பாதுகாக்கப்படவும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஜனநாயக வெளி பயன்படுத்தப்பட வேண்டும்.

நன்றி : தினக்குரல்

Exit mobile version