போராளிகளுக்கு ஏற்றப்பட்ட நச்சு ஊசிகள் தொடர்பில் பலரிடம் விசாரணை நடாத்தியதன் அடிப்படையில் போராளிகள் மீது நச்சு ஊசிகள் ஏற்றப்பட்டிருப்பது உண்மை எனத் தான் அறிந்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீப காலமாக மக்களிடையே பரபரப்பு மற்றும் அதிர்ச்சியூட்டக் கூடிய விடயமாகக் கருதப்பட்ட இந்த நச்சு ஊசி விடயம் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மனம் போன போக்கில் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் இணைந்துள்ளார் அனந்தி சசிதரன்.
கடந்த ஏழு வருடங்களில் நோய்களினால் சாவடைந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையினை ஆராய்ந்து பார்த்தால் அதன் விகிதம் இயல்பானது எனப் பல முன்னை நாள் விடுதலைப் புலிப் போராளிகள் தெரிவித்துள்ள நிலையில் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் போராளிகளின் வாழ்க்கை தங்களது சுய நல அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் இத்தகைய அரசியல்வாதிகளின் ஆதாரமற்ற கதைகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அப் போராளிகளின் வாழ்வியல் நிலையில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அவர்களை வைத்து அரசியல் லாபமடைய நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மிகவும் ஈனத்தனமானது என்பதுடன் கண்டிக்கத்தக்கது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமக்கான அவைகளில் நாற்காலிகளை சூடேற்றுவது மட்டும் தான் தமக்கான பணி என்பதை விடுத்து மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுவது அவசியம். அவ்வாறு இணைந்து செயற்படும் போது மேற்கூறப்பட்டது போன்ற ஆதாரமற்ற கட்டுக் கதைகளை வெளியிடுவதற்கான அவசியங்களோ அல்லது அவற்றில் தங்கியிருக்க வேண்டிய தேவைகளோ குறித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டியிராது.
பெரும் சர்ச்சையினைக் கிளப்பியிருக்கும் இவ்விடயம் தொடர்பில் மருதமடு, நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி, பம்பைமடு, பூந்தோட்டம், பட்டாணிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாலயம், வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம், வவுனியா வாணி வித்தியாலயம் உள்ளிட்ட பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்குறித்த விஷ ஊசி விவகாரம் ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த சில சக்திகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.