உலகின் அத்தனை நிகழ்வுகளையும் மூடிவைத்துவிட்டு புலம் பெயர் நாடுகளின் அரசியல் “ஆய்வாளர்களும்” “அறிஞர்களும்” தாம் யாரையெல்லாம் சந்தித்தோம் எங்கெல்லாம் பேசினோம் என வாதப் பிரதிவாதங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள். பதினொரு வருடங்களாக இலங்கையிலோ அன்றி உலகின் எந்தப் பகுதியிலுமோ போராட்டங்கள் எதுவும் நடைபெற்றுவிடதாவாறு ஐ.நாவையும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பியிருங்கள் என்று நடந்துமுடிந்த இனப்படுகொலையை ஒரு சிறிய வட்டத்தினுள் அடக்கிய இவர்கள் இம்முறை இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள். எதுவுமே அற்ற வெற்றுத் தீர்மானத்தை இலங்கை அரசும், பேரினவாதிகளும் இலங்கைக்கு எதிரான ஏனைய நாடுகளின் தாக்குதல் என அப்பாவிச் சிங்கள மக்களை அணி திரட்டுகிறார்கள்.
ராஜபக்சக்களும் இனக்கொலையாளிகளும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அவலங்கள் மிகுந்த இனப்படுகொலையை நடத்தி முடித்துவிட்டு எந்த அச்சமும் இல்லாமல் ஒரு குழு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. உலகின் அத்தனை கொலைகாரர்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் இவர்கள் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது. மீண்டும் உலகின் எந்த மூலையிலும் வன்னிப் படுகொலைகள் போன்ற சாட்சிகள் மறைக்கப்பட்டு கொத்துக்கொத்தாக மனிதர்கள் எந்தக் காரணத்திற்காகவும் படுகொலை செய்யப்படக் கூடாது. இந்த அச்சம் ஏற்படுவதற்காகவாவது இனப்படுகொலை செய்த கும்பல் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.
ராஜபக்சக்களின் காட்டுமிராண்டி அரசு அரசியலிலிருந்து அகற்றப்பட வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் உலக
மக்கள் மத்தியில் நிர்வாணமாக்கப்படவேண்டும்.
சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறையும் தமிழ் இனவாதக் கனவான்களும் காலனியத்திற்குப் பின்னான காலம் முழுவதும் இலங்கை அரச அதிகாரம் சிங்கள பௌத்த மேலாதிக்கக் கோட்பாட்டால் கட்டமைக்கப்பட்டு அதன் உச்ச வடிவத்தை முள்ளி வாய்க்காலில் நடத்திக்காட்டியது. இனப்படுகொலையின் வெற்றி இலங்கை என்ற எல்லைக்குள் சிங்கள பௌத்த மேலாதிக்க வெறியை வெளிப்படையாகவே மக்கள் மீது பயன்படுத்த துணை செல்கிறது. ஆக, மனிதப் படுகொலைகளையும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் உரமூட்டி வளர்க்க இலங்கை அரசிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கின் அரசுகளும். ஐ.நாவும், இந்திய, சீன அரசுகளும் துணை செல்கின்றன.
இந்த அரசுகளை எல்லாம் நம்பக் கோரி உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும், போராடும் தமிழ் மக்களையும், ஒடுக்கப்படும் சிங்கள மக்களையும் முடக்கிவைத்திருக்கும் “தமிழ் இனவாதக் கனவான்கள்” தமிழ்ப் பேசும் மக்களையும் அவர்களின் அரசியலையும் பல ஆண்டுகள் பின்னோக்கிஇழுத்துச்சென்றுள்ளனர்.
ஐ.நா தீர்மானமும் தோல்வியும்
2014 ஆம் ஆண்டு இலங்கை அரசை விசாரணை செய்வது உலக நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கை அரசுடன் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. அதிகாரத்திலிருந்த மைத்திரிபால சிரிசேன “நல்லாட்சி” அரசு ஐ.நா உடன் ஒத்துழைப்பதாகக் கூறிவிட்டு தனது பேரினவாத நிகழ்ச்சி நிரலை தொடர ஆரம்பித்துவிட்டது. இம்முறை பலவீனமான மைத்திரி – ரணில் அரசுடன் ஒப்பு நோக்கும் போது தனது முழு அதிகத்தையும் 20 திருத்தச் சட்டத்தின் ஊடாகக் கையகப்படுத்திக்கொண்ட ராஜபக்சக்களின் குடும்ப அரசிடம் உலக நீதிபதிகளின் தலையீடின்றி விசாரணைக்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையில் ஈடுபட்ட அத்தனை சூத்திரதாரிகளும் அரச அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னணி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இன்றைக்கு இலங்கையின் இராணுவத் தளபதி. ஆக, சவேந்திர சில்வாவும், கோத்தாவும், மகிந்தவும் தம்மைத் தாமே விசாரணை கொ|ள்ளவா ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
தவிர, ஆவணங்கள் திரட்டப்பட்டு போர்க்குற்றத்தை நிறுவுவதற்கு என ஆதாரங்களைச் சேர்ப்பதற்கு பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 டரூஸ்மன் தலைமையிலான அறிக்கை ஆவணங்கள், சாட்சிகள், ஆதரங்கள் அடிப்படையில் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என இதே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்திருந்தது. இப்போது புதிதாக ஏன் அதனை ஆரம்பிக்க வேண்டும்? ஆக, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதரங்களை அழிக்கவா என்ற வினாக்களுக்கும் அப்பால் இலங்கை அரசாங்கத்தை அகற்றி தம்மை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசை உருவாக்குவதற்கான முன்னறிவிப்பா என்ற கேள்வியே முன் நிற்கிறது.
தீர்மானம் தொடர்பான எதிர்வினைகள்
பொதுவாக இரண்டு கருத்துக்கள் தமிழ் “அரசியல் கனவான்களால்” முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, தமது இடைவிடாத முயற்சியால் ஐ.நாவில் ஒரு தீர்மானம் நிறைவேறிவிட்டது. எதிர்காலத்தில் இந்தியாவையும் தாஜா செய்து இதைவிட உறுதியான தீர்மானத்தை முன்வைப்போம் என்பது. இரண்டாவதாக மனித உரிமைப் பேரவையில் ஒரு அரசைத் தண்டிக்க முடியாது என்பதால் அதனை ஐ.நாவின் வேறு நிறுவனங்களான பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்றவற்றிற்கு மாற்றி, அங்கு ராஜபக்ச அரசைத் தண்டிக்க வேண்டும் என்பது. இந்த இரண்டுமே சாத்தியமற்றது மட்டுமல்ல குறுகிய எல்லைக்குள் அனைத்தையும் முடக்கும் செயற்பாடாகும்.
ஒரு நாடு அல்லது அரசுடன் மற்றொரு நாடு அரசியல் உறவுகளை வைத்திருப்பது போன்று ஒரு குழு அல்லது அரசியல் அமைப்பு செயற்பட முடியாது, இருப்பினும் அதற்கான அரசியல் சூழலை உருவாக்க முனையலாம். அவ்வாறான நடவடிக்கைகள் கூட ஏகாதிபத்திய நாடுகள் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் வெறுமனே பேச்சுவார்த்தைகள், |”காய் நகர்த்தல்கள்” ஊடாக சாதித்துவிட முடியும் என்பது முட்டாள்தனமான முடிவு.
லொபி அரசியலும் தனிமைப்படுத்தப்படும் தமிழ் பேசும் மக்களும்
லொபி அரசியல் ஊடாக, நாடுகளைத் தாஜா செய்து சில மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என இக் குழுகள் நம்பியிருப்பதும் அதனை மையமாக வைத்தே தமது அரசியலை நகர்த்துவதும் அடிப்படையில் முட்டாள்தனமானது மட்டுமன்றி, சாத்தியமற்றதுமாகும். இந்த நாடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்களிலும், பெரும் மனிதப்படுகொலைகளிலும், ஏகபோக கொள்ளைகளிலும் மிருகத்தனத்தோடு ஈடுபட்டவைதான். இந்த நாடுகள் தலையிட்டு விடுதலை பெற்றுக்கொண்ட எந்த நாடுகளையும், அடிப்படை ஜனநாயகம் மீட்கப்பட்ட உலகின் எந்த பிரதேசங்களையும் காணமுடியாது.
மாறாக தலையீடுகள், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. உலகின் ஒவ்வொரு நாடுகளின் ஒவ்வொரு மூலையிலும் மேற்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறியின் தாக்கத்தைக் காணமுடியும். ஆக, மனிதாபிமான அடிப்படையில் இந்த நாடுகள் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதோ, ராஜபக்ச ஆட்சியை தண்டிக்கும் என்பதோ பொய்யாகத் திணிக்கப்படும் கருத்தாகும்.
சரி, மனிதாபிமான அடிப்படையில் இந்த நாடுகள் தலையிடாது என்பது வெளிப்படையான ஒன்று என்பதால் இதன் மறுபக்கத்தில் இந்த நாடுகளின் அதிகாரவர்க்கத்தைத் திருப்திப்படுத்துவதன் ஊடாக ராஜபக்ச அரசைத் தண்டிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
பொதுவாக இன்று களத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கனவான்களுமே இரண்டாவதுவழிமுறையையே தேர்ந்தெடுத்துக்கொண்டு அதற்காக நாடுகளின் உளவு அமைப்புக்கள் போலவும், பிற்போக்கு, பின் தங்கிய அரசியலைக் கொண்ட பழமைவாதக் கட்சி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றுடன் நேரடியான தொடர்புகளைப் பேணி வருகின்றனர். அமெரிக்காவில் ட்ரம்பிற்கான தமிழர்கள், பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர்கள் போன்ற அமைப்புக்களின் தோற்றம் இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்தது. அரசுகள் போன்று செயற்படும் இக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் “இராஜதந்திர” நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்கிறார்கள்.
உலகத்தின் அனைத்து பிற்போக்கு அமைப்புக்களோடும் தாமே தமிழர்களின் தலைவர்கள் என அடையாளப்படுத்திய குழுக்கள் தொடர்புகளைப் பேணிக்கொண்டது மட்டுமல்ல, தம்மை அவைகளின் நண்பர்களாக
வெளிக்காட்டிக்கொண்டனர். உலகின் சோவனிச பாசிச அரசுகளில் ஒன்றான இஸ்ரேலிய யூதர்களுக்குச் சமனாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டனர். நடந்து முடிந்த போராட்டம் தொடர்பாக உலகின் அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புக்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அப்போராட்டம் தொடர்பான விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுக மறுத்து, அத்தனை குறைபாடுகளையும் இணைத்தே நியாயப்படுத்தினர்.
பாலஸ்தீனத்திலிருந்து இந்திய மாவோயிஸ்டுக்கள் ஈறாக பலூசிஸ்தான் வரை எங்கு மக்கள் அழிக்கப்பட்டாலும் உலகின் அறிவுசீவிகள் அளவிலான விவாதங்கள் பொதுமக்களின் கருத்தை எட்டும் வகையில் அமைந்திருக்கும். ஈழப் போராட்டத்தில் மட்டும் இவர்கள் எவரதும் பங்களிப்பு முற்றாக அற்றுப் போயிருந்தது. இவ்வாறு தமிழ் பேசும் மக்களை, உலகின் ஜனநாயக முற்போக்கு அணிகளிடமிருந்தும், போராடும் மக்களிடமிருந்தும், அறிவியல் சமூகத்திடமிருந்தும் அன்னியப்படுத்திய தமிழர்களின் தலைமை என பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தம்மைத் தமிழ்த் தலைமைகள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள், முழு தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் அனாதைகள் ஆக்கினர். அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை ஐக்கிய நாடுகள், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்ற ஏகபோக வல்லரசுகளின் கோரப்பிடிக்குள் அமிழ்த்திவிட்டு இன்று எம்மால் இயலாது எனக் கையை விரிக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டோடு மட்டும் இனப்படுகொலை நிறுத்தப்படவில்லை. உலக மக்கள் மத்தியிலிருந்து அதனை அன்னியமாக்கி நிலை நிறுத்தியவர்கள் புலம்பெயர் மற்றும் உள்ளூர் தமிழ்த் தேசியத் தலைமைகள். கொலைகளின் பின்புலத்தில் செயற்பட்ட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவையும் இலங்கை அரசும் செய்ய வேண்டிய அதே வேலைகள் கடந்த 11 ஆண்டுகளில் இவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்.
தவிர, அப்பாவி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் இலங்கை பேரினவாத அரசுகளின் ஆதரவாளர்களாக மாற்றியுள்ளனர். தம்மை இலங்கை ஆட்சி அதிகாரத்திற்கு எதிரானவர்களாக அடையளப்படுத்துவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களாக இனம்காட்டி பேரினவாத அரசுகளிடம் அவர்களை கொண்டு சேர்த்தனர். தமிழ்த் தலைமைகளின் பின் தங்கிய பிற்போக்கு பழமைவாத செயற்பாடுகள் இன்னும் சில காலங்களுக்கு நீடிக்குமானால், தமிழ் பேசும் மக்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு அழிவின் விழிம்பிற்கே அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அண்மைய சில ஆதாரங்கள்:
கடந்த வருட இறுதியிலிருந்து கறுப்பின மக்களின் உரிமைக்கான போராட்டம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடைபெற்று வருகிறது. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட்ட நாடுகளின் மீதான் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஏனைய பல்வேறு ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன. இலங்கையில் ஒரு சிறு மூலையில் வைத்து கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட ஒரு மனிதக் கூட்டம் தொடர்பாகப் பேசப்படவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
இனிமேல் ஒன்றும் செய்துவிட முடியாது, தமிழ் நாட்டைக் கொதி நிலையில் வைத்திருப்பதன் ஊடாக இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசின் “பிரதமர்” உருத்திரகுமார் பேசுகிறார். இதுவரைக்கும் உலக நாடுகளைப் பயன்படுத்தியது போல எமது பிரச்சனைக்காக மற்றவர்களைப் பயன்படுத்தும் குறுக்கு வழி சுய நலவாதிகளாக மீண்டும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் முயற்சி தான் இது. உலகில் எந்த மூலையில் மனித குலம் பாதிக்கப்பட்டாலும், எமக்கு அவர்கள் பயன்படுவார்களா இல்லையா என்ற குறுகிய நோக்கங்களுக்கு அப்பால் அவர்களுக்காகக் குரல்கொடுக்கப் பழகிக்கொள்ளுங்கள். இன்று தமிழகத்தை இந்துத்துவ அதிகாரம் ஆக்கிரமிக்க முற்படும் போது முழு தமிழக மக்களும் அதற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்தியாவிலும், உலகின் பல ஜனநாயகவாதிகளும் தமிழக மக்களுக்கு ஆதரவாகச் செயற்பட நாம் மட்டும் காட்டிக்கொடுக்கும் அரசியலை நடத்திவிட்டு கொதி நிலையில் வைத்துக்கொள்வதா?
இந்தியாவில் கால் மில்லியனுக்கும் மேலான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பாசிச அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு துண்டறிக்கை பின் தங்கிய தமிழ் அமைப்புக்களிடமிருந்து வரவில்லை, மாறாக இந்திய அரசிற்கு லொபி செய்ய வேண்டும் என முட்டாள் தனமாகப் பேசிக்கொள்கிறார்கள்.
அமெரிக்க அரசின் தொடர்ச்சியான தாக்குதலால் வெனிசூலா பற்றியெரிகிறது. அமெரிக்காவிற்கு அடிபணியாத மதுரோவின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா கிரிமினல் சதி செய்து கொண்டிருக்கிறது. போராடும் மக்கள் என்ற அடிப்படையில் வெனிசூலா மக்களுக்குக்கான ஆதரவு எங்கே? பதிலாக அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் இக் கும்பல்கள் வெனிசூலா ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறது என்கிறார்கள். போராடும் தேசிய இனத்தின் புலம் பெயர் நீட்சி என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் பிற்போக்கானவர்கள் என ஏற்படுத்தப்பட்டிருக்கும் அபிப்பிராயம் தகர்க்கப்பட வேண்டும். இதுவே முதலாவது கடமை.
இலங்கையில் சிங்கள மக்களைச் சுரண்டிக் கொழுத்திருக்கும் ராஜபக்ச சர்வாதிகார அரசிற்கு எதிராக சிங்கள மக்கள் நாளந்தம் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஒடுக்கப்படும் தேசிய இனம் என்ற அடிப்படையில் எப்போதாவது ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறதா? பதிலாக ராஜபக்ச அரசை மேலும் பலப்படுத்தும் இன வாத முழக்கங்களே முன்வைக்கப்படுகின்றன.
பதினொரு வருடங்கள் மக்களை மாயைக்குள் வைத்திருக்கும் இத் தலைமைகள் அரசியல் நீக்கம் செய்யப்படுவதும், புதிய மக்கள் சார்ந்த தலைமை தோன்றுவதுமே இலங்கைப் பேரினவாத அரசையும் அதன் சிங்கள பௌத்த கோட்பாட்டையும் தகர்ப்பதற்கான முதலாவது நுளைவாசல்.