அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்…
இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.
1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்கால தர்ப்பாரை நடத்திக்கொண்டிருந்தது. அது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற கூலிப்படையை அழிப்பதற்காகவே உருவாக்கியது, அதன் நிறுவன வேலையை ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை தாங்கியது.
சாலையில் ஒரு இளைஞன் தனியாக நடமாடுவதைக் கண்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் கடத்திச் சென்றுவிடும்.
அழுகுரலோடும், அச்சம் படர்ந்த முகங்களோடும் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களைக்கொண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைப்படையை உருவாக்குவதே இந்திய இராணுவத்தினதும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனது,ம் நோக்கம்.
எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பல்கலைக் கழக மாணவர்கள் வரை எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலும் வைத்துக் கடத்திச் செல்லப்படலாம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிந்து வைத்திருந்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
பள்ளிகளுக்கு தந்தையர் தாயாருடன் செல்லும் நிலை காணப்பட்டது. யாழ்ப்பாணம் செத்துப் போயிருந்தது. தெருக்கள் வெறிச்சோடியிருந்தன.
கடத்திச் செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகரத்தின் கொல்லைப் புறத்தில் அமைந்திருந்த அசோக் ஹொட்டேலில் அருசி மூட்டைகள் போல அடைத்து வைக்கபட்டனர்.
புலிகளை அழிப்பதும், சுயாட்சியை ஏற்படுத்துவதும் எமது நோக்கம்; அதற்கு நீங்கள் தான் பாதுகாப்புப் படை என பிடித்துவரப்பட்டவர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது குற்றுரையை ஆரம்பிப்பார். நீண்ட அகலமான சந்திப்புக் கூடத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கான கூட்டம் நடைபெறும்.
ஒரு மூலையில் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், நெருக்கமாக தரையில் மாற்ற உடையின்றி அமர்ந்திருக்கும் கடத்திவரப்பட்ட இளைஞர்களுக்கு சுரேஷ் உரையாற்றுவார்.
யாராவது மறு பேச்சுப் பேசினால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அவர்கள் மீதான விசாரணையை சுரேஷ் பிரேமச்சந்திரனின் ‘மண்டையன் குழு’ கவனித்துக்கொள்ளும்.
மண்டையன் குழு என்றால், மண்டைய பிழந்து கொலை செய்வது என்பதே பொருள் படும் என பலர் தெரிந்து வைத்திருந்தனர்.
இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபா யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா 64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தோழமை தினம் இரண்டு நாட்களின் முன்னர் கொண்டாடப்பட்டது. இன்று வரை இந்திய அரசின் தோழர்களகவே தொடரும் ஈ.பி.ஆர்.எல் எப் இன் தோழமை இன் இலக்கணம் இரத்தக்கறைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
இவை நடந்துகொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப்பெருமாள் ‘இது பழைய ஈ.பி.ஆர்.எல்.எப்’ இல்லை; புதியது என வில்லத்தனமாக உரையாற்றினார்.
இப்போது இன்னொரு புதிய முகத்தோடு தோழமை தினத்தில் அதே வரதராஜப்பெருமாள் உரையாற்றியுள்ளார். வக்கிரத்தனத்தின் மறு பெயர் தோழமை என்று நினைத்துக்கொண்ட்டார்களோ?
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கொலைகள், சித்திரவதைகள் எல்லாம் அந்த இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த புரட்சி என்ற பெயரை அவமானப்படுத்திற்று. உயரிய தோழர் என்ற வார்த்தையை கொலையாளிகள் தங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திக்கொண்டார்கள்.
இடதுசாரிய இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைய ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற துணை இராணுவக் குழு காரணமாயிற்று,
வடக்குக் கிழக்கில் இடதுசாரி இயக்கங்களைத் துடைத்தெறிவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அரசிற்குத் துணை சென்றது. உலக மக்களின் போராட்டத் தத்துவமாகத் திகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகரக் கருத்துக்கள் மீது மக்கள் வெறுப்படைந்தமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
இவ்வாறு அழிவுகளின் ஆதாரசக்தியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல் எப் இன்றும் தனது அதிகாரவர்க்க அரசியலைப் புரட்சியின் பெயரால் தொடர்கிறது. அதன் குற்றவாளிகள் சமூகத்தின் உயரடுக்குகளில் உலா வருகின்றனர்.
டெலோ மற்றும் புலிகள் இயக்கங்களைத் தவிர ஏனைய எல்லா இயக்கங்களின் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பத்மநாபா ஈரோஸ் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து ஆரம்பித்த அமைப்பாகும். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே மக்களை அமைப்புகளாக அணிதிரட்டியது.
ஈழப் பெண்கள் முன்னணி, கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் முன்னணி போன்ற துணை அமைப்புக்கள் ஊடாக வடக்குக் கிழக்கு முழுவதும் மக்களை அணிதிரட்டி பல வேறு போராட்டங்களை நடத்திற்று. இவ்வாறான போராட்டங்கள் ஊடாக பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் உருவாகினர். போர்குணம் மிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி மிக்க இளைஞர் அணி இயக்கத்தின் பல்வேறு மட்டங்களில் செயற்பட்டது.
இயக்கத்தின் பிற்போக்குத் தலைமை இந்தியாவிலிருந்து செயற்பட அதன் முற்போக்கு ஜனநாயக அணி பொதுவாக ஈழத்தில் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது களத்தில் மக்களோடு வாழ்ந்த முற்போக்கு அணியே அழிக்கப்பட அதன் பிற்போக்குத் தலைமை தப்பித்துக்கொண்டது.
எஞ்சிய சிலரை இணைத்துக்கொண்ட அதன் பிற்போக்குத் தலைமை, புலிகளைப் பழிவாங்குவதே தமது நோக்கம் என்ற முழக்கத்துடன் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இலங்கையில் களமிறங்கிற்று.
புலிகளின் அழிப்பிலிருந்து தப்பி எஞ்சியிருந்த ஒரு சிலரையும், இந்திய இராணுவத்துடன் வந்திறங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் தேட ஆரம்பித்த போது அவர்களுகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இருந்திருக்கவில்லை.
ஆபத்தான முற்போக்கு அணியை அழித்து, பிற்போக்குப் பகுதியைத் தம்மோடு இணைத்துக்கொள்வது என்ற இந்திய அரசின் முதலாவது நோக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது புலிகளின் தாக்குதலால் நிறைவேற்றப்பட்டது.
கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பான பிழைப்புவாதிகளின் கூட்டே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்றைய இரண்டு அணிகளும்!
தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இருப்பு அவசியமற்றது, அது நமது போராட்டத்தின் அவமானச் சின்னமாக மாறிய காலம் இந்திய இராணுவத்துடனேயே ஆரம்பித்துவிட்டது.