Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜே.ஜெயரஞ்சனின் நியமனம் – ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு

ஆனந் தெல்தும்தே தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “வரலாறு ஒரே நேர்கோட்டில் செல்கிறது என்ற கோட்ப்பாடைப் பொறுத்தவரை கார்ல் மார்க்சும் கூட பின் நாளில் ஐரோப்பாவில் வரலாற்று வளர்ச்சி சென்ற பாதையிலிருந்து விலகல் ஏற்படும் சாத்தியப்பாட்டை உணரவே செய்தார். ஐரோப்பாவில் அடிமைச் சமூக, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ கடைசியில் சோசலிச உற்பத்தி முறை எனும் வரலாற்றுக் கட்டங்கள் வழியாக வரலாறு தர்க்கரீதியாக வளர்ச்சி பெறுவதாக மார்க்ஸ் கருதினார். ஆனால், ஐரோப்பாவிற்கு வெளியே ஆசிய உற்பத்தி முறை என்ற பொருளுற்பத்தி முறை மாற்றங்களுக்கு உட்படாமல் நீண்டகாலம் நிலைத்திருப்பதாகக் கருதினார்.” தொடர்ந்து அதே கட்டுரையில் “சாதி என்பது இந்தியாவிற்கே உரித்தான நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் ஒரு பகுதி என்கிறார். “

இந்திய உற்பத்தி முறை நீண்ட காலம் மாற்றமின்றி நிலைத்திருப்பதற்கு அல்லது வேகமற்ற மாற்றம் ஏற்படுவதற்கு மார்க்ஸ் முன்வைத்த காரணங்களுக்கு அவருக்குப் போதிய தகவல்கள் இல்லை என்பதை அவரே குறிப்பிடுகிறார். ஆக, கார்ல் மார்க்ஸ் இன் அவதானிப்பும், அது குறித்த ஆந்த் தெல்தும்தேயின் ஆய்வும் இன்றைய இந்துத்துவ இந்தியாவிற்கான விளக்கமாக அமையும்.

இந்த பின் தங்கிய சாதிய அமைப்பினால் மாறாமல் தொடரும் இந்தியாவின் பின் தங்கிய உற்பத்தி முறையை எதிர்கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்த வர்க்கங்கள் தொடபான பார்வை மட்டுமே போதாது என்பது இந்தியாவில் சோசலிச இயங்களின் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

காலனிய காலத்தில் எவ்வாறு பார்பனிய அதிகார அமைப்பு முறையை தமக்கு ஏற்றவாறு காலனிய அதிகாரங்கள் பயன்படுத்திகொண்டனவே உலக மயமாதல் வரையான காலம் வரைக்கும் அது அதிகார வர்க்கத்திற்குச் சார்ப்பாகப் பயன்பட்டே வந்தது. எந்த வரை முறைக்கும் உட்படுத்தாமல் பின் தங்கிய இந்திய உற்பத்தி முறையை எதிர்கொள்ள நடை முறையில் செயற்பட்ட முதலாவது செயற்பாட்டளாராகப் பெரியாரை மட்டுமே காணமுடியும்.
நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி முறையை அழித்து உற்பத்திக் கருவிகளை, குறித்த ஆதிக்க சாதிகளின் கைகளிலிருந்து பறித்து அதனை ஜனநாயக மயப்படுத்துவதற்கான கோட்பாட்டைபெரியாரும் திராவிட இயக்கங்களும் முன்வைத்தன . இக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகாரத்தில் அமர்ந்த திராவிடக் கட்சி, வாக்குக் கட்சிக்களுகே உரித்தான பண்புகளைக் கொண்டிருந்த போதும், உற்பத்தியை ஜனநாயகமயப்படுத்திற்று. இதனை அவதானித்த பொருளாதார அறிஞர் அமேர்திய சென், தனக்கே உரித்தான பார்வையில் தமிழ் நாடு தெற்காசியாவின் சமூக நல அரசு என்கிறார்.

இக் கோட்பாட்டைத் தெளிவான ஆழமான ஆய்வாக முன்வைத்த முதலாவது அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களே. அதிலும் நடைமுறை சார்ந்து தெற்காசியப் பொருளுற்பத்தி முறை என்றால் என்ன, அது இந்தியாவின் மற்றைய பகுதிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு தமிழ் நாட்டில் மாற்றமடைய ஆரம்பித்திருக்கிறது என்ற தெளிவான ஆய்வுகளை தனது விவாதங்கள், கட்டுரைகள் போன்ற ஆக்கங்களின் முன் வைக்கும் ஜெயரஞ்சன் இந்த மாற்றம் விரைவு படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவான கருத்தைக் கொண்டிருக்கிறார்.

200 வருடங்களுக்கு முன்னான கார்ல் மார்க்சின் அவதானிப்பை எதிர்கொள்வதற்கான, புதிய நவீன சமூகத்தை உருவாக்குவதற்கான கோட்பாடாக நடை முறை சார்ந்து ஜெயரஞ்சனுக்கு முன்னதாக எந்தப் பொருளாதார வல்லுனர்களும் முன்வைத்ததில்லை. திராவிட ஆட்சி எவ்வாறு நிலப் பிரபுக்களின் முதுகெலும்மை முறித்தது என்ற ஜெயரஞ்சனின் அவதானிப்பும் விளக்கமும் தமிழ் நாட்டில் தேசியப் பொருளாதாரம் எப்படி இயல்பாக வளர்ச்சி பெற ஆரம்பித்தது என்பதை படம் போட்டுக் காட்டுகிறது.

தமிழ் நாட்டின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்களிப்புத் தொடர்பாக தனது முதுகலைப் பட்டத்திற்கு UCL பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவர் ஒருவர் குறிப்பிடும் போது, தனது ஆய்வுகளுக்கு ஜெயரஞ்சனின் ஆய்வுகளைத் தவிர வேறு எதையும் ஆங்கிலத்தில் திரட்டமுடியாமல் இருந்தது என்கிறார்.

ஒரு தனிப்பட்ட உரையாடலில், சமூக நல அரசுகளும், கீனேசியன் கோட்பாடும் 60 களின் பின்னர் ஐரோப்பாவில் புரட்சியை அழிப்பதற்கே பயன்பட்டது எனக் குறிப்பிட்ட ஜெரா டுமினில் என்ற பொருளாதார அறிஞர், அமேர்தியா சென் மற்றும் ஜெயரஞ்சனின் கருத்துக்கள் இந்தியாவில் இதே கோட்பாடுகள் நிலப்பிரபுத்துவ பின் தங்கிய உற்பத்திய அழிக்கப் பயன்பட வாய்ப்புண்டு என்றார். ஜெயர்சஞ்சனின் திராவிட பொருளாதாரம் தொடர்பான கருத்துக்களின் பின்னரே ஆசிய பொருளுற்பத்தி தொடர்பான கார்ல் மார்க்சின் கருத்துக்களில் பொதிந்துள்ள நியாயத்தை உணர முடிவதாகக் கூறினார்.

இவ்வளவையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு சாமானிய மனிதனிதனை போன்றே காட்சிதரும் முனைவர் ஜே.ஜெயரஞசனின் கைகளில் இன்று கடிவாளம் வழங்கப்பட்டிருக்கிற்து. மானில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். உலக அளவில் அறியப்பட்ட ஜெயரஞ்சனின் கருத்துக்கள் இப்போது நடைமுறைக்கு உட்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது வெறுமனே அரசுப் பதவிக்கான நியமனம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு. தமிழ் நாடு இந்தியாவிற்கு மட்டுமன்றி தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக முன்னேற முடியும். ஜெயரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்.

Exit mobile version