வடகிழக்கில் ஆயுதம் தாங்கிப் போராடிய புலிகள் இயக்கத்துடன் செயற்படாத பினாமிகளாலும், கடந்த காலங்களில் உளவு நிறுவனங்களுடன் செயற்பட்ட ஆலோசகர்களாலும் பின்னப்பட்ட புலம்பெயர் தமிழ்த் தேசிய வலையமைப்பை ஏகாதிபத்தியங்கள் கையாள்வது இலகுவானதாக அமைந்தது.இப் பினாமிகளின் தந்திரோபாயமும் அரசியலும் இலகுவானதாகவே அமைந்தது.
1. தம்மைச் சுற்றிவர உள்ள அப்பாவி மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது.
2. புலிகளை அழிக்க முடியாத ஒன்றாகப் பிரச்சாரம் செய்வது.
3. புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காடாமல் தவறுகளை மட்டும் தெரிவு செய்து வளர்த்தெடுப்பது
4. இவர்களிலிருந்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுகளை மேற்கொண்டு துரோகிகள் ஆக்குவது.
5. புலிகளின் தோல்விக்குப் பின்னரும் தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் ஏனைய நாடுகள் மீது மட்டும் பழி போடுவது.
மேற் குறித்த இந்த நடவடிக்கைகளை சூத்திரம் போன்று கையாண்ட புலம்பெயர் பினாமிகள் தம்மைச் சுற்றி இஸ்லாமிய, இந்து மத அடிப்படை வாதிகள் போன்ற கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்.
ஒரு புறத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களில் அடியாட்களான இவர்கள் மறு புறத்தில் இன்றைய இலங்கை அரசிற்கு ஜனநாயக முகமூடியை அணிந்துவிடுவதிலும் தமது பங்கை வகித்தனர்.
இலங்கை என்ற நாட்டை தனது அடிமையாக அமெரிக்கா மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளுள் ஒன்று தான் இன்றைய தீர்மானமும் அமரிக்காவின் ஒட்டுமொத்த அரசியலும். அதனைக் கூட அருவருப்பான அடிப்படைவாதமாக மாற்றும் இக் குழுக்கள், சிங்களவன் அமெரிக்காவை வென்றுவிட்டான் என்றும், தாம் அமெரிக்காவை மேலும் திருப்திப்படுத்த வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறி ISIS போன்ற கருத்துக்களைப் பொது வெளியில் முன்வைக்கும் குழுக்களதும் தனி நபர்களதும் நோக்கம் மக்கள் சார்ந்ததல்ல.
புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளில் பெரும்பாலானவர்கள் இப் பினாமிகளின் அரசியலுக்கு எதிரானவர்களே.
அமெரிக்கத் தீர்மானமும் உள்ளக விசாரணையும் தயவு தாட்சண்யமின்றி எதிர்க்கப்பட வேண்டும் அது அடிப்படைவாதிகளின் நிலையிலிருந்து எதிர்க்கப்படுமானால் பேரினவாதிகளை வலுப்படுத்தும்.