Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்லாமிய வெறுப்புவாதத்தை வளர்க்கும் ‘தீபன்’ : வாசுதேவன்

எழுத்தாளரும், கவிஞரும் ,மொழி பெயர்ப்பாளருமான வாசுதேவன் அவர்களின் ‘தீபன்’ திரைப்படம் பற்றிய பார்வை

அசோக், நீங்கள் கேட்டதற்கிணங்க, இதோ என் தற்போதைய அபிப்பிராயம்.

இவ்வருடமும் கடந்த வருடமும் புத்தகச் சந்தையில் விற்பனையில்வெற்றிவாகையைச்சூடிக்கொண்டவை அரபு-இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை பச்சையாகக் கக்கிய படைப்புகள் என்பது சாதாரணமான அவதானிகளுக்குக் கூடத்தெரிந்த ஒரு விடயம்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஒரு தேசத்தில் பொதுவாக அந்நியர்களையும் குறிப்பாக அரபு-இஸ்லாமியர்களையும் எதிரிகளாகவும், அவர்களே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொறுப்பாளவர்கள் என்பதாகவும் சுட்டிக்காட்டுவதன் மூலம் தம்மைத் தக்க வைத் துக்கொள்ளும் பெருநிதியக்கும்பல்களும், அவற்றின் கைப்பொம்மைகளான ஊடகங்களும் மக்களை உண்மைகளிலிருந்து திசை திருப்புவதில் வெற்றி கண்டுள்ளன என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பிரான்சில் வாழும் அரபு-இஸ்லாமியர்களைப் பற்றிய பிரஞ்சுப் பொதுகுடிமக்களுக்கு ஊடகங்கள் ஊட்டிய விட(ய)ங்களைச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்:

அவர்கள் திருடர்கள், சோம்பேறிகள், அதிகம் பிள்ளைகளைப்பெற்று அரச மானிய உதவிகளில் மட்டும் வாழுபவர்கள், அரபு-இஸ்லாமிய இளைஞர்கள் போதை வஸ்து விற்பவர்கள், அவர்கள் மதத் தீவிரவாதிகள். மேலும், மேலும்… இவ்வாறான கருத்துகளை வெளிப்படையகவே பிரஞ்சுக்காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

இவ்வாறான கருத்துகள் பிரான்சில்வாழும் பல தமிழர்களிடமும் உண்டு.

திட்டமிட்ட வகையில் அரபுலகின் மீதான பிரஞ்சு காலணித்துவக்கால பின்ணணிகளை வசதிகருதி மறைத்துவிடுவதும், திட்டமிட்ட வகையிலான அரபு-இஸ்லாமிய எதிரப்பு, வெறுப்பு, குரோதக் கோசங்களை அள்ளி விதைப்பதும் இன்று பிரான்சில் நவீன பாணியாகிவிட்டது.

இவ்வகையில் பல பிரஞ்சு புத்திஜீவிகளின் பட்டியலைப் போட்டுக்கொண்டு செல்லலாம். இவ்விடயத்தைச் சுருக்கிக்கொள்கிறேன் (வேலைப் பழு).

ஈழத்தமிழர் பிரச்சினையைப் பின்புலமாக்கொண்டு, வெளிநாட்டவர்கள் செறிந்து வாழும் பிரான்சின் புறநகரொன்றின் நிலையைத் “தீபன்” படத்தினூக வெளிக்கொணர்ந்திருக்கும் ஜக் ஓடியார் அவர்களும் இந்த அலையில்தான் நீந்தியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆரம்பத்தில் இப்படம் ஒரு முக்கியமான அரசியல் படமாக அமையவிருக்கிறது என்று தொடங்கி இன்று இது ஒரு காதல் கதை என்றளவில் வந்தடைந்திருக்கிறது.

மோந்தெஸ்கியோவின் “பாரசீகக் கடிதங்கள்” போல் பிரஞ்சுச் சமூகத்தின் மீதான ஒரு விமர்சனமாக இப்படம் வரும் என்று எதிர் பாரத்தவர்களுக்குப் பலத்த ஏமாற்றத்யே இப்படம் கொடுத்திருக்கிறது.

“Le bât blesse dans la dernière partie, quand le gardien, sans crier gare, déclare la guerre aux malfrats de la cité. D’un côté, le processus qui amène le concierge à nettoyer la cité manque de développement. De l’autre, la peinture de cette zone de non droit manque cruellement de nuance et, du coup, verse dans le cliché à base de guerre de gangs et de fusillades, sans un personnage pour rattraper l’autre. On est loin des antagonismes et dilemmes moraux et humains d’Un prophète. Et sans spoiler l’épilogue, on a le droit de le trouver expéditif et convenu. “

என ‘எக்ஸ்பிரஸ்” சஞ்சிகை தன் கருத்தை முன்வைத்துள்ளது.

மேலும், படத்தைப்பார்த்த தமிழ் நண்பரின் கருத்துப்படி, இப்படம் எவ்வகையிலும் “ஈழப் பிரச்சனையை ” அணுகவில்லை. அதன் புரிந்துகொள்ளலுக்கு எவ்வித நகர்வும் அங்கு காணப்படவில்லை.

மாறாக, மிகச்சிறந்த இயக்குனரான ஜக் ஓடியார் தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கிறார் எனும் சந்தேகமே வலுத்துள்ளது.

தமிழர்கள் பிரஞ்சுக்காரர்களை மார்ச் (புதன்) கிரகத்திலிருந்து வந்தவரகள் போல் பார்க்கிறார்கள் என்று ஜக் ஓடியார் தனது ஒரு பேட்டியில் கூறியிருப்பதானது அவருக்குப் பிரான்சில் வாழும் தமிழர்களை தெரியாது என்று தீர்மானிக்கவேண்டியுள்ளது.

ஜக் ஓடியார் “ஈழப்பிரச்சனையில்” அக்கறை கொண்டிருப்பார் என்று யாராவது கனவு கண்டால் அதற்கு அவர்களே பொறுப்பு என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்.

மீண்டும் போர்தொடக்கப் பணம் சேர்க்கும் புலிகளினால் கதையின் முக்கிய பாத்திரம் உதைவாங்கும் கட்டம் படத்துள் வலிந்து நுழைத்திருப்பதுபொல் தெரிவதாகவும் கூறப்படுகிறது. இலங்கை ஆட்சியாளர்களுக்கு பிடித்தமான ஒரு சைகையாகவும் இதைக்கருத இடமுண்டு.

அவரவர் தாமே படத்தைப் பார்த்த பின்னராதான் அதைப்புரிந்து கொள்ளமுடியும்.

“கோடுபோட்டு, பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தி” பிரான்சின் புறநகரங்களைச் சுத்தப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாக இப்படம் காட்டியிருப்பதும், அதற்குத் “தீபனைப்’ பயன்படுத்தப்பட்டிருப்பதும், இனக்குரோதங்களை மேலும் வளர்தெடுக்குமோ என்ற அச்சத்தையே வளர்க்கிறது என நண்பர் கூறினார்.

விடுதலைப்புலிகளின் பாசறைப்பாடலை முணுமுணுத்து அரபு-இஸ்லாமியப் போதை வஸ்துக்காரர்களுக்கு எதிராக, தன் “குடும்பத்தைப் பாதுகாக்க” வன்முறையில் இறங்கும் தீபனின் நிலைப்பாடு சற்றுக் “குழந்தைத்” தனமாகவேதான் படுகிறது.

ஜக் ஓடியார் உண்மையில், தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிவற்கு ஒரு வழியும் இல்லாதிருப்பது துரதிஸ்ரவசமானது.

தமிழ் உரையாடல்கள் பிரஞ்சு மொழிக்கு முழுமையாக மாற்றம் செய்யப்படாதிருப்பதையும் நண்பர் சுட்டிக்காட்டினார். படம் வெளியாகும்போது இக்குறை தீர்க்கப்டும் என்பதையும எதிர்பார்கலாம். ஏனெனில், போட்டிக்காக அவசரமாக முடிக்கப்பட்டது இப்படம் என ஜக் ஓடியார் கூறியுள்ளார்.

இப்படத்தைப் பார்த்த பிரஞ்சுப் பெண்மணிஒருவர் தான் படம் பார்க்கச் சென்றபோது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மேலும் தனக்குத் தெளிவேற்படும் என்று எண்ணியிருந்தாகவும் அவ்வாறு எதுவுமே இல்லையென்றும் சலித்துக்கொண்டார்.

வெளிநாட்டவர்களை வைத்து பரிசின் புறநகரங்களைச் “சுத்தம்’ செய்ய எண்ணும் பிரஞ்சுக்காரர்களுக்கு இப்படம் நன்றாகப் பிடிக்கும் என்று கூறினார். பிரான்சில் பொலிஸ் இல்லை, நீதியில்லை எனும்படியும், புறநகர்கள் மனிதர்கள், பிரஞ்சுக்காரர்கள் வாழாத காட்டுமிராண்யிடங்கள் போலவும் ஒரு பிம்பத்தை அங்கு உருவாக்கியதாகவும் மனவருத்தமடைந்தார்.

அவரவர் பார்வை அவரவர்க்கு…. படம் வரும்வரை காத்திருப்போம்.

தற்போதைக்கு நண்பர் சோபா சக்திக்கு “கூரையைப் பிச்சுக்கொண்டு” தெய்வம் கொடுத்த விடயம் மட்டுமே கொண்டாடுவதற்குப் போதுமான காரணமாக இருக்கட்டும். பிரஞ்சுச் சினிமாவில் மாபெரும் இயக்குனரின் வழிகாட்டலில் நடித்திருக்கும் நம்மவர்களின் நடிப்பு நம் பார்வைக்கு எவ்வாறிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

இதற்குமேல் எழுதுவதற்கு நேரம் போதாது அசோக். சந்திப்போம்.

Exit mobile version