அதில ஒரு சாரார் யாரென்றால் ஜெசிக்கா ஈழத்தமிழ் எண்டபடியால் அந்தப்பிள்ளைய வெல்ல வைக்கோணும் எண்டும் (மனிதாபிமான அடிப்படையில் அல்லாமல்) வெறுமனே மயூரன் தமிழன் எண்டபடியால் அவருக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது எண்டும் அதை வழங்க நினைக்கிற அரசு காண்டுமிராண்டி அரசு என்று விமர்சித்த அந்த சாராரும் இந்த தீபன் திரைப்பட விருதினை வரவேற்றிச்சினம்! ‘‘கமலகாசனே கான்ஸ்சுக்குப் போகேல எங்கட ஆள் போயிட்டு வந்திட்டான் எல்லே’’ எண்ட மாதிரி, அதிலையும் இப்ப குழப்பம் வந்திட்டு, காரணம் அன்ரனி அண்ணையிண்ட அரசியல் நிலைப்பாடு தொிய முன் ஆதரிச்ச ஈழத்தமிழர்கள் இப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருக்கிறார்கள்.
அது ஒருபக்கமிருக்க சில வாரங்களுக்கு முன்னர் சல்மான்கானுக்கு 5 வருடச் சிறைத்தண்டனை வழங்கினதோட ஒருத்தர் எனக்கு தொலைபேசிக் கேக்கிறார் ‘சல்மான் கானிண்ட அடி, தமிழாம் எண்டு கதை கிழப்பி விடுவமே? எங்கட ஆக்கள் பேஸ்புக்கில பிரிப்பாங்கள்’’ எண்டு. இப்ப இருக்கிறதில பொிய சாரார் கடைசியா மேல சொல்லப்பட்ட ஆக்கள்தான்!
சர்வதேச அரங்கில அன்ரனி அண்ணை அறியப்பட்டிருக்கிறார். இதனால அவரின்ட அரசியல் பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அவரை ஆதரிக்கோணும் எண்டு ஒரு சில ஈழக்கலைஞர்களும், இல்லை நாங்கள் ஆதரிக்கத்தேவையில்லை எண்டு சில ஈழக்கலைஞர்களும் நிக்கிறார்களாம். அதைவிட படம் வரட்டும் பார்ப்போம் விமர்சிப்போம் என்கிற ஒரு சிறிய சாராரும் இருக்கிறார்கள்.
என்ர பிரச்சனை என்னவெண்டா, அன்ரனி அண்ணைய அந்தப்படத்துக்கு அவங்கள் பாவிக்காமல் பிரான்சில இருக்கிற வேற தமிழீழ ஆதரவு கொண்ட கலைஞர் ஒருத்தரை அவங்கள் பாவிச்சிருந்தா, என்ன நடந்திருக்கும்? அன்ரனி அண்ணைய இப்ப தூக்கிப்பிடிக்கிற ஆக்கள் அப்பவும் படத்தையும் நடித்தவரையும் தூக்கிப்பிடிச்சிருப்பினமா? மற்றது இப்ப எதிர்க்கிற புலி ஆதரவாளர்கள் அப்பவும் படம் வரமுன்னரே விமர்சித்திருப்பினமா? எண்டதுதான்.
தீபன் படத்தில நடிக்கிறதுக்கு அந்தப்படக் குழுவினர் இந்தியா, ஐரோப்பா, கனடா எண்டு எல்லா இடத்திலயும் தேர்வு வைச்சவங்கள். Casting போயிட்டு வந்த பெடியங்கள், மனிசன் மாதிரி ஒராளைத் தேடுறாங்கள் என்று வெளியே வந்து சொல்லியிருக்கிறாங்கள்.
விஜய் சேதுபதியும் Casting போயிருக்கிறார். முதல் இந்தியாவில இருந்துதான் நாயகனும் நாயகியும் தொிவாகியிருந்தார்கள், பிரான்சிலுள்ள ஈழத்தமிழ்க் கலைஞர்கள் அந்தப்படத்தில் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்கள். இடைவெளியில் நாயகனை மாற்றவேண்டி வந்தவிடத்து பாத்திரப் பொருத்தம் அன்ரனி அண்ணைக்கு சரியாய் வர அப்பவே அன்ரனி அண்ணைக்கு செங்கம்பளம் தயாராகிட்டுது!
அந்தப்படத்தில அன்ரனி அண்ணை மட்டும் நடிக்கேல, தமிழ்நாட்டு காளி அக்காவும் பிரான்ஸ் நாட்டில இருக்கிற கிளவ்டின் எண்ட ஈழத்தமிழ்ப் பிள்ளை ஒண்டும் நடிச்சிருந்தது. ஆனால் எல்லாரும் அன்ரனி அண்ணையத்தாண்டி போயினமே இல்லை. அது ஏன் நாயகனைத் தவிர வேறு யாரையும் நாங்கள் தமிழ் படங்களில கணக்கெடுக்கிறேல எண்டபடியாலா? அல்லது காளி அக்கா இந்தியா எண்டபடியாலா? கிளவ்டின் எண்ட ஈழத்துப்பிள்ளை வெறுமனே சின்னப்பிள்ளை என்பதாலா? அன்ரனி அண்ணையோ அல்லது காளி அக்காவோ நடிக்காமல் கிளவ்டின் எண்ட அந்தப்பிள்ளை மட்டும் நடித்திருந்தால் இப்ப சமூகவலைத்தளம் முழுவதும் ஜெசிக்காவை மிஞ்சி அந்தப்பிள்ளையிண்ட பேச்சாகவே இருந்திருக்குமோ?
ஆக மொத்தில இண்டைக்கு தமிழ் மக்களிட்ட இன்னும் வெளிவராத தீபன் பேசப்படுகிறதுக்கு முக்கியமா மூண்டு காரணம் இருக்கு ஒண்டு வெள்ளக்காரன் எங்களயும் மதிச்சு படமெடுத்திட்டான் எங்கள அவன்ட படத்தில பாவிச்சிட்டான் எண்ட தாழ்வு மனப்பான்மை ரெண்டு அன்ரனி அண்ணையிண்ட அரசியல் நிலைப்பாடு மற்றது எங்கட மக்களின்ட விளக்கமில்லாத தமிழ் உணர்ச்சி!
நல்லா வருவீங்கடா!
Kathir97@ymail.com