தண்ணீரின் இறுதி யுத்தம் : விஜி
தொட்டிலில் உறங்கும் சிறுகுழந்தையை போல
கிணற்றினுள் உறங்கி கிடந்தது தண்ணீர்
பட்டாம் பூச்சியை போல
வாய்க்கால் வரப்புகள் அறுகம் புல் தரைகள்
பூக்கும் செடிகொடிகள் சமையல் இடம்
எங்கும் தடையின்றி திரிந்தது தண்ணீர்
கொஞ்சம் உப்புக் கரித்தாலும்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சாய்
மதிப்புடன் ஒளிர்ந்தது தண்ணீர்
குழந்தைகள் எக்காளமிட்டு குதூகலிக்கும்
விளையாட்டு பொருளாகவும் இருந்தது தண்ணீர்
தண்ணீர் தரித்திருக்கும் இடமே
உயிர் வாழ்வின் நிலைப்பு
அது போகும் இடங்களே
வளங்களின் செழிப்பு
பறவைகள் பரிதவிக்கும் – சிறு
எறும்புகள் திகைத்து உயிர் விடும்
கழிவு எண்ணெய் கலந்த நீரால்
தாய்ப்பாலும் நஞ்சாக
மனிதன் எங்கு நிலைத்திருப்பது?
குண்டுகள் வெடித்தது போதாதென்றோ
கொடுஞ் சிறைகளில் அடைத்தது போதாதென்றோ
தரையிலும் கடலிலும் புதைத்தது போதாதென்றோ
கல்வியும் பண்பாடும் அழித்தது போதாதென்றோ
நிர்ஜ் தேவாவும் சகாக்களும்
தண்ணீரின் மீதும் எல்லையற்று வன்முறை புரிந்தனர்
கொடு நோய் பிடித்த குழந்தையாய்
உயிர் விட காத்திருக்கிறது தண்ணீர்
அடிமேல் அடிவாங்கி நைந்து நூலாகி
நம் முகம் பார்த்து
துவண்டு கிடக்கிறது தண்ணீர்
காப்பதா இல்லை கைகழுவி விடுவதா?
யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?