லால் பெராரா கூறியதையே அழகான தமிழில் வட மாகாண முதமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவரின் அறிக்கை குறிப்பிடுவது கீழே:
“குடாநாட்டின் நிலத்தடி நீர்ப்பரப்பில் எண்ணெய் போன்ற மாசுக்கள் கலந்திருக்கின்றது என்ற செய்தி புதியதல்ல. 2008 ஆம் ஆண்டிலேயே யாழ் மாவட்டத்தின் அப்போதைய அரசாங்க அதிபர் இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை மின்சாரசபைக்கு இது பற்றித் தெரியப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குடாநாட்டின் சில பிரதேசங்களில் எண்ணைக்கசிவு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பில் பூரணமான ஆய்வுகள் செய்யப்பட்டு முழுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.”
எம்.ரி.டி வோக்கஸ் என்ற கிரிமினல் நிறுவனமும் விக்னேஸ்வரனும் சுன்னாகம் நீரில் கலந்திருக்கும் நஞ்சுக்கு நிகரான ஒரே வார்த்தைகளையே குறிப்பிடுகின்றனர். ஆக, இரு பகுதிக்கும் எதோ ஒரு புள்ளியில் இணைப்புக் காணப்படுகின்றது தெளிவாகிறது.
மலேசிய நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் (எம்.ரி.டி வோக்கஸ் இன் தாய் நிறுவனம்) இலங்கையில் தனது மின்னுற்பத்தியை ஆரம்பித்த போது அதற்கு எந்த முன் அனுபவமும் இருந்ததில்லை. தவிர, கழிவு வெளியேற்றும் ஒப்பந்தங்கள் பலவற்றை நிறைவேற்றி வந்தது. 2010 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் கழிவிலிருந்து சக்தி பிறப்பாக்கும் 2.9 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானியாவுடன் கைச்சத்திட்டது.
கழிவு அகற்றுவது எம்.ரி.டி கப்பிடலைப் பொறுத்தவரை மல்ரி பில்லியன் வியாபாரம்.(இணைப்பு)
இங்குதான் தேசிய வியாபாரிகள் ஈட்டி எறிந்து தேசியத்தைக் காப்பாற்ற முயல்வதாக மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். அவர்கள் கூறவருவது வழமை போல ஆழமான ஆய்வுகளற்ற உணர்ச்சிவயப்படுத்தும் இலகுவான சமன்பாடு. விக்னேஸ்வரன் தேசியவாதி; வன்னியில் நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியவர், ஆக, அவரைக் குறை கூறக்கூடாது. இவர்களின் இரண்டவது ஈட்டி இது எறியப்பட்டது அரச துணைக்குழுகளை நோக்கி. விக்னேஸ்வரனைப் பலவீனப்படுத்தினால் தேசியத்திற்கு எதிரானவர்கள் வளர்ச்சியடைந்து விடுவார்கள் அல்லது மக்களை அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்பதாகும்.
அதாவது முள்ளிவாய்க்காலைப் போன்று மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டாலும் தேசியம் என்ற சொல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே இவர்களின் ஈட்டிகள் குத்தும் புள்ளியாகும். தேசியம் என்று இவர்கள் மக்களுக்குப் போலியாகக் கூறி வைத்திருப்பது தேசியவாதமல்ல! பிழைப்புவாதம்!! மக்கள் சாரிசாரியாக அழிக்கப்பட்டாலும், நோயாளிகளாக்கப்பட்டு மடிந்து போனாலும் அவர்கள் தேசிய வாதம் என்று சொல்லித்தரும் பிழைப்புவாதமே பிரதானமானது.
இலங்கையில் பேரினவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களில் அடிப்படை உரிமையை மறுத்து அவர்களை எல்லா வழிகளிலும் அழிக்க முற்படுகிறது. காலத்திற்குக் காலம் தமது வழிமுறைகளை மாற்றிக்கொள்ளும் இலங்கை அரசிற்கு துணை செல்கின்றவர்கள் இப் பிழைப்புவாதிகளே. தேசியம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி படுகுழிக்குள் தள்ளிவிடும் இவர்களைப் பொறுத்தவரை தேசியம் என்பதின் உள்ளர்த்தம் வேறானது. ஒடுகப்படும் மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கான தன்னுரிமை என்பதற்குப் பதிலாக தேசியத்தைக் காசாக்கிக் கொள்வதே இவர்களின் நோக்கம்.
கடைந்தெடுத்த கோழைகளான இவர்கள் அரச ஆதரவுக் கட்சிகள் மக்களை ஏமாற்றிவிடும் என அஞ்சுகிறார்கள். இவர்கள் பேசும் தேசியம் என்ற பிழைப்புவாதம் அவ்வளவு பலவீனமானது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறார்கள். தாமது கருத்து பல்வீனமானது என்பதால் அயோக்கியர்களோடு கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே தேசியம் வாழும் என்கிறார்கள். இவர்கள் சமூகத்திலிருந்து அன்னியபடுத்தப்பட வேண்டிய சமூகவிரோதிகளா இல்லையா?
மக்கள் போலித் தேசியத்தை நிராகரித்தால் மட்டுமே தேசியம் என்பது அதன் உண்மையான உள்ளர்த்தத்துடன் மேலெழும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனையும் இல்லாமல் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால – ரனில் கூட்டை ஆதரித்தவர்கள் என்பதுவே அவர்கள் அரசின் எதிராளிகள் அல்ல என்பது தெளிவாகும்.
சரி ஒரு பேச்சுக்கு, இலங்கை அரசின் இராணுவத் துணைக்குழுக்களாகச் செயற்பட்ட ஈ,பி.டி,பி போன்ற அமைப்புக்கள் இதனால் பலனடையும் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு எதிராக என்ன செய்ய வேண்டும்?
நமது போலித் தேசியவாதிகள் சொல்கிறார்கள், விக்னேஸ்வரனுக்கு விட்டுக்கொடுத்து மக்கள் செத்துப்போய்விட வேண்டும் என்று.
அது எவ்வளவு அபத்தமானது? முள்ளிவாய்க்காலில் மக்களையும் புலிகளையும் மடக்கிவைத்து பாசிச அரசு அழிப்பதற்கு துணை சென்றதற்கு ஈடாகாதா?
இனி, விக்னேஸ்வரன் என்ற வயதானவர் அப்பாவி என்றும் அவரை ஐங்கரநேசன் என்ற மாகாண சபை உறுப்பினர் சுன்னாகம் பிரச்சனையில் கெடுத்துவிட்டார் என்றும் ஒரு பால்குடி விவாதம் முன்வைக்கப்படுகின்றது. விக்னேஸ்வரன் மிகத்தெளிவானவர். அவர் பால்குடியும் அல்ல. கூட்டமைப்புத் தொடர்பான சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விகுப் தெளிவான பதிலை முன்வைத்தார். இதுவரை புலிகளின் பிடிக்குள் இருந்ததால் சுயாதினமாகப் பேச முடியாத நிலையிலிருந்தோம், இப்போது அவர்கள் இல்லாத ஜனநாயகம் இருப்பதால் சுதந்திரமாக அரசியல் செய்கிறோம் என்றார்.
மகிந்தவின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட போது அத்தனை எதிர்ப்புக்களையும் மீறியே அதனச் செய்து முடித்தார். இப்போது வன்னியில் நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் நிறைவேற்றி தன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை அமைத்துக்கொண்ட பின்னர், சுன்னாகம் நீர்ப் பிரச்சனையில் மக்களுக்கு எதிராகத் போலித் தேசியவாதிகளைத் திருப்பியிருக்கிறார்.
சரி ஐங்கரநேசன் தான் விக்னேஸ்வரனைக் கையாள்கிறார் என்றால் அவ்வளவு பலவீனமான அப்பாவி அரசியல்வாதி எப்படி தமிழ்ப் பேசும் மக்களின் உலகளாவிய அரசியல் பிரச்சனையைத் தலைதாங்கப் போகிறார்? அவரை அன்னியப்படுத்திவிட்டு எடுபட்டுப்போகாத உறுதியான ஒருவர் அரசியல்வாதியாக வேண்டாமோ?
ஆக, குடி நீருக்கான மக்களின் போராட்டம் தொடர வேண்டும். விக்னேஸ்வரன் கூறுவதற்கு மாறாக அவர்கள் தெளிவான அரசியலை முன்வைக்க வேண்டும். அந்த அரசியல் இலங்கை அரச பாசிஸ்டுக்களுக்கும் துணைக்குழுக்களுக்கும் எதிரானதாக அமைய வேண்டும். மக்களின் குடியிருப்புக்களையும் குடி நீரையும் அழித்தவர்கள் அவர்களே. தவிர, போலித் தேசியவாதிகளுக்கும் எதிரானதாக அமைய வேண்டும். சுன்னாகத்தில் அழிவுகளை தேசியத்தின் பெயராரால் துரிதப்படுத்துபவர்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.
எம்.ரி.டி வோக்கஸ் போன்ற பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறியும், இலங்கைப் பேரினவாத அரச பாசிசமும், புலம்பெயர் போலித் தேசியவாதமும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப் பொறுக்குபவர்களும் ஒட்டும் புள்ளிக்கு எதிராக உலகில் மக்களை நேசிக்கும் மனித நேயம் மிக்கவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
http://www.bloomberg.com/news/articles/2010-12-22/amcorp-genting-knm-group-mtd-capital-malaysia-equity-preview
http://www.ft.lk/2015/03/23/mtd-walkers-optimistic-further-investigations-will-vindicate-baseless-accusations/
http://www.ft.lk/2015/03/23/mtd-walkers-optimistic-further-investigations-will-vindicate-baseless-accusations/