இதன் பின்னர் நடைபெற்ற சம்ப்வங்கள் வடக்கில் பேரினவாத அச்சுறுத்தல் செயற்பாட்டுத் தளத்தில் விரிவடைந்துள்ளமையை போன்ற தோற்றப்பட்டைத் தருகின்றன. ஒரு சிங்கள வர்த்தகர் சிங்கள பேரினவாத உணர்வால் உந்தப்பட்டு தனது பணபலத்தால் வடக்கை ஆக்கிரமிக்கிறார் என்றும் இதற்கு அரசு துணை செல்கிறது என்ற தோற்றப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருபகுதி உண்மை இருந்தாலும், நிலைமை இதைவிட ஆழமான தரவுகளைக் கொண்டது.
வடபகுதிக் கடல் என்பது தெற்காசியாவில் அதிக மீன் வளத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இலங்கையின் மீன் தேவையின் பெரும்பகுதி வடபகுதி மீனவர்களால் 90 முற்பட்ட காலம் வரை நிரப்ப்பப்பட்டுவந்தது.
90 களின் பின்னான அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு வட பகுதி மீன் வளத்தைப் சூறையாட தென்னிலங்கை சிங்கள மீனவர்களும், தென்னிந்திய மீனவர்களும் போட்டி போட்டார்கள்.
பாரம்பரிய மீன்ப்டிக் கருவிகளோடு தொழில் நடத்திவந்த வடபகுதி மீனவர்கள், மீன் வளத்தைப் பறிகொடுக்க மீன் பிடித் தொழில் கேள்விக்கு உள்ளானது. சிங்கள மீனவர்கள் யுத்தத்தைப் பயன்படுத்தி நவீன தடை செய்யப்பட்ட கருவிகளுடன் கடல்வள ஆக்கிரமிப்பைத் தொடர, தென்னிந்திய மீனவர்களும் தமது வருகையை நிறுத்தவில்லை. சிங்கள – தமிழ் நாட்டு ஆக்கிரமிபால் பாதிப்படைந்தவர்கள் வடபகுதி மீனவர்களே.
இன்று வடபகுதியின் மீன் வளத்தைக் கொள்ளையிட முல்லைத் தீவில் சிங்களப் பெரு வர்த்தகர்கள் இலாப வெறியுடன் ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது நேரடியான பேரினவாத ஆக்கிரமிப்பு என்பதற்கு அப்பால் இலாப வெறி பேரினவாதத்தால் மெருகூட்டப்படுகிறது என்பதே உண்மை.
இதே பெரு வர்த்தகர்கள் சிங்களக் கடற்பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது அது பேரினவாதமாகத் உருவகப்படுத்தப்படுவதில்லை என்பது ஒரு புறமிருக்க, வர்த்தகர்களும் அதனைப் பேரினவாதமாக மாற்ற முடியாத நிலையிலிருந்தனர்.
தமிழ்ப் பகுதிகளில் இலாப வெறிகொண்ட வர்த்தகர் ஒருவருக்கு எதிரான மக்களின் எதிர்பு என்பதனை சிங்களவர்களுக்கு எதிரான எதிர்ப்பாக காட்ட முயலும் சிங்கள வர்த்தகர், தனது எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மீனவர்களின் உடமைகளை அழித்துள்ளார்.
முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இங்கு முதலாவது பிரச்சனை மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பானது. வெறுமனே பேரினவாதத்தின் தாக்குதலாக இதனைச் சுருக்காமல், இலாப வெறிக்காக பேரினவாதம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டாலே ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள் முடியும்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து உணர்ச்சிவசப்படுத்தும் முழக்கங்களால் திசை திருப்பப்படாமல், முல்லைத் தீவை மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் ஆக்கிரமிப்பையும் தடுப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பல் தேசிய நிறுவனங்கள் தமது இலாப வெறிக்கு பேரினவாத முலாம் பூசுகின்றன என்பதைத் தவிர சிங்கள அப்பாவி மீனவர்களும் இதே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஆக, சிங்கள மீனவர்களுக்கு மட்டுமல்ல அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் பேரினவாதத்தின் பின் புலத்திலுள்ள இலாப வெறியை வெளிப்படுத்துவதன் ஊடாகவே இப் பெரு முதலாளிகளை மட்டுமன்றி அவர்களின் பின்னாலுள்ள சிங்கள பௌத்த இலங்கை அரசையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.
தவிர, மக்களை உணர்ச்சிவசப்படுத்தும்முழக்கங்கள் ஆப்பத்தான அரசியல் சூழலை மட்டுமே ஏற்படுத்தும்.