பேரினவாதிகளின் வரலாற்றுத் திரிபை எதிர்கொள்வோம் : மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்
இனியொரு...
Barandiya Kovil Sitavaka சீதாவாக்கை பைரவர் கோவில் தமிழர் பகுதியில் தொல்பொருளியல் ஆய்வு என்ற பெயரில் பௌத்த சின்னங்களை பரப்பும் செயல் இடம் பெற்று வரும் இந்த சூழ்நிலையில் அதற்கு பதிலாக தென்பகுதியில் உள்ள தொன்மையான சைவக் கோவில்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சைவர்கள் முன்வரவேண்டும். அந்த வகையில் போத்துக்கீசரை முல்லேரியாவில் தோற்கடித்து அவர்களின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த சீதாவாக்கை ராஜசிங்க மன்னனால் அவருடைய தலைநகரில் (தற்போதைய அவிஸ்ஸாவளை ) கட்டப்பட்ட பைரவர் கோவில் பற்றிய உண்மைகளை பார்க்கலாம். போத்துக்கீசர் இலங்கையில் நுழைந்தபோது 4 இராச்சியங்கள் (யாழ்ப்பாணம், கோட்டை , சீதவாக்கை மற்றும் ரைகம் -பிற்கால கண்டி ) இலங்கையில் காணப்பட்டதுடன் அனைத்து இராச்சியங்களிலும் சைவமும் முருகவழிபாடும் சிறந்து விளங்கி இருந்தது. சீதாவாக்கை மன்னன் ராஜசிங்கன் பௌத்தத்தை விடுத்து சைவத்துக்கு முன்னுரிமை கொடுத்து அரச வழிபாட்டுத்தலமாக அரண்மனையை அண்டிய பகுதியில் இந்தக் கோவிலை அமைத்தார் . கோவிலை அண்டிய காணிகள் இன்றும் கண்டி விஷ்ணு தேவாலயத்தின் அதிகாரத்தின் கீழ் இருப்பது தென்பகுதியில் சைவத்தின் தொன்மைக்கு சான்று பார்க்கிறது. சைவத்துக்கு முன்னுரிமை கொடுத்ததால்
பௌத்தர்களினால் எழுதப்பட்ட மகாவம்சத்திலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட ஏனைய சிங்கள நூல்களிலும் பெருவீரனாகவும் நாட்டுப்பற்றுடனும் திகழந்த ராஜசிங்க மன்னன் கொடியவனாக சித்தரிக்கப்பட்டு வருகிறார். (https://www.lanka-excursions-holidays.com/barandiya-kovil.html ). மேலும் தொல்லியல் திணைக்களம் அதன் பெயர்பலகையில் தமிழில் பத்திரகாளி கோவில் என்று குறிப்பிடும் அதேவேளை ஆங்கிலத்தில் (kaali she-devil ) காளிமாதாவை பெண்பிசாசு என்று குறிப்பிட்டு சைவத்துக்கு எதிரான தனது குரோதத்தை வெளிப்படுத்தியுள்ளது (படம் இணைக்கப்பட்டுள்ளது ) போர்த்துக்கீசர் இலங்கைக்கு வரும்போது தொன்மையான இராவணன் காலத்திலேயே கட்டப்பட்ட பஞ்சஈஸ்வரங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D). இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சைவர்கள் துறைசார்நிபுணர்களின் உதவியுடன் முன்வரவேண்டும். உரிய ஆய்வுகளின் மூலமாகவே தொல்லியல் செயலணி என்ற பெயரில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வரலாற்றை திரிபு படுத்தும் முயற்சியை முறியடிக்க முடியும். மேலும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சைவசமய நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். குறிப்பாக முருக வழிபாடு, காளிமாதா வழிபாடு பத்தினி தெய்வ வழிபாடு தென்பகுதியில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
காளிமாதா மீதான ஆழமான நம்பிக்கையே தென்பகுதியில் 5000 க்கும் மேற்பட்டோரை ஒரேநாளில் 4000 ரூபாய்கள் செலவழித்து கொரோனா போலிமருந்தை வாங்க தூண்டியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தமிழ் தலைவர்கள் பொதுஜன எழுச்சி போராட்டங்களுக்கு மேலதிகமாக உரிய ஆய்வுகளை மேற்கொள்ள துறைசார் நிபுணர்களைக் கொண்ட செயலணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என்று விநயமாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி