Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: பறை விடுதலைக்கான குரல்

PVFenglishதமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு வேலைக்குச் சென்ற 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர போலிஸ் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தங்களை தாக்க முனைந்ததாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர்கள் இறந்ததாகவும் கதையளக்கிறது ஆந்திர போலீசு. என்கவுண்டருக்காக இந்திய போலீசு கூறும் அரதப்பழசான பச்சைப் பொய் இது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆய்வின் படி ஒரே ஒரு கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை. அதாவது ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே!

சுட்டுக் கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ருயா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகளோ நடந்தது அப்பட்டமான போலி மோதல் கொலைகள் என்று நமக்கு உணர்த்துகின்றது. கொல்லப்பட்ட உடல்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களைப் பரிசோதித்த போது, அவை மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் ஏற்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டாக்கள் மிகச் சரியாக உயிராதாரமான பகுதிகளான மார்பு, கழுத்து, தலை போன்ற உறுப்புகளைத் தாக்கியுள்ளன. குண்டு காயம் பட்ட பல தொழிலாளர்களின் உடல்கள் அழுகிக் காணப்பட்டதாகவும், அவர்கள் திங்கட்கிழமையே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. நடந்தது கொடூரமான கொலைகள் தான் என்பதற்கு வேறு சில சாட்சியங்களும் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் செம்மரக் கட்டைகளைக் கடத்தி உள்ளூர்ச் சந்தையிலும் சீனாவிலும் விற்பனை செய்யும் மாபியக் குழுக்களிடையேயான மோதலில் ஆந்திராவில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்த்தரப்புக்கள் செம்மரக் கட்டைகளைக் கடத்தும் மாபியாக் குழுக்கள் பல உள்ளன. இவற்றிற்கு இடையேயான மோதலில் தமிழகத்திலிருந்து கூலிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர்.

கையாலாகாத அப்பாவித் தொழிலாளர்களே அதிகாரவர்கத்தின் பலிகடாக்களாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவது நடைபெறும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது. தமிழகத்தில் பரமக்குடியில் நடந்த படுகொலைகளும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கது.

இந்திய அரசின் கொலைவெறி ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் அழிப்பதில் பிரதான பாத்திரம் வகித்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் தேசிய இனத்தின் அங்கம் என்ற வகையில் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்க லண்டன் இந்தியத் தூதரகத்கின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்ட்டுள்ளது.

கொலைகார போலிசை தண்டிக்கக் கோரியும், கொலைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களைத் தண்டிக்கக் கோரியும், இந்திய மத்திய அரசின் மௌனத்தைக் கண்டித்தும், மாநில அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Exit mobile version