முதலாளித்துவப் பொருளாதாரம் சரிவடையும் போதெல்லாம், தேசிய முழக்கங்களுடன் நாஸிக் கட்சிகள் ஏகாதிபத்திய நாடுகளில் வளர்ச்சி பெறுவது வழமை. தேர்தல் காலங்களில் மட்டும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் ஆங்காங்கே இடம்பிடித்துக்கொண்டிருந்த இந்த நிறவாதக் கட்சிகள், இப்போது பல நாடுகளில் முன்னணிக் கட்சிகளாகிவிட்டன. அதிகாரவர்க்கம் இக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்புகிறது. முதலாளித்துவ நெருக்கடியைத் தற்காலிகமாகப் பின்போட இக் கட்சிகளை அதிகாரவர்க்கம் பயன்படுத்திக் கொள்கின்றது. மக்கள் மத்தியில் வர்க்கம் சாராத சமூக முரண்பாடுகளைக் ஆழப்படுதுவதன் ஊடாக உழைக்கும் மக்களைப் பிரித்து ஆட்சி செலுத்தும் முறைமை ஐரோப்பிய எஜமானர்களாலேயே இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
வெள்ளை நிறத்தவர்களின் தனித்துவம் அழிந்து போவதாகவும், கலாச்சாரம் சிதைக்கப்படுவதாகாவும் கூச்சலிடும் இக் கட்சிகளை ஐரோப்பிய அதிகாரவர்க்கம் ஜனநாயகம் என்ற பெயரில் அனுமதிக்கிறது. உழைக்கும் மக்களின் வறுமைக்கு வெளி நாட்டுக் குடியேறிகளே காரணம் என்று கூறும் இக் கட்சிகள் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சுரண்டலைக் கண்டுகொள்வதில்லை.
ஐரோப்பாவிலுள்ள முக்கிய நாசி ‘தேசியவாதக்’ கட்சிகள்:
1. பிரான்ஸ் – தேசிய முன்னணி -Front National
தேசிய முன்னணி என்ற கட்சி ஜோன் மரி லு பென் என்பவரால் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு ‘தேசிய இயக்கங்களின்’ கூட்டாகவே முன்ன்ணி ஆரம்பிக்கப்பட்டது. பிரான்சில் ஆபிரிக்க அகதிகள் பிரச்சனையை எபோலா நோக் தீர்த்துவைக்கும் என்று அண்மையில் கருத்துத் தெரிவித்த லூ பென் இன் மகள் மரீன் லூ பென் இப்போது கட்சியின் தலைவர்.
ஹிட்லரின் நச்சுவாயு கொலைகள் என்பன புறக்கணிக்கத்தக்க விபரங்கள் என லூ பென் தெரிவித்தமை பலத்த எதிர்வலைகளை ஏற்படுத்திற்று.
கடந்த தேர்தலில் லூ பென் இன் கட்சி பிரான்ஸ் மக்களின் நான்கில் ஒரு பகுதி வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.
2. ஜேர்மனி – தேசிய ஜனநாயகக் கட்சி -National Democratic Party
ஜேர்மனியில் ஹிட்லரின் அழிவிற்குப் பின்னர் தோன்றிய நவ நாசிக் கட்சிகளில் தேசிய ஜனநாயகக் கட்சியே வாக்குப் பலம்மிக்கது. ஐரோப்பா வெள்ளை நிறத்தவருக்கானது ஏனையவர்கள் அங்கு நிரந்தரமாக வாழ முடியாது என்று தொலைக்காட்சி நேர்காணலில் கட்சியில் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். வெளி நாட்டவர்களுக்கு எதிரான ஆர்ப்பட்டங்கள் நடத்தும் இக் கட்சியின் வன்முறைகளும் பல தடவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.`
1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி இன்று ஜேர்மனி முழுவதும் வியாபித்துள்ளது. 1945 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாசிக் கட்சியின் அழிவின் பின்னர் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ள முதளாளித்துவக் கட்சியான தேசிய ஜனநாயக முன்னணி, கட்சியின் தலைவரான ஊடோ வைக்ட் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
3. டென்மார்க் – டெனிஷ் மக்கள் கட்சி – Danish People’s Party
1995 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட டெனிஷ் மக்கள் கட்சி, இஸ்லாமியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிரான நிறவாத முழக்கங்களை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டது. தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘மத்திய கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளரும், இந்தியரான டெனிஸ் அமைச்சரும் டென்மார்க்கைப் பற்றிக் கலந்துரையாடியது, அன்னிய உணர்வை ஏற்படுத்தியது’ என்று கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோகென் கம்ர் சமூக வலைத் தளம் ஒன்றில் தெரிவித்திருந்தார். வெளி நாட்டவர்கள் எமது கலாச்சாரத்தை ஏற்கனவே சீரழித்துவிட்டனர் என கட்சியை ஆரம்பித்த பியா கிஜாஸ்கார்ட் தெரிவித்திர்ந்தார். கடந்த தேர்தலில் கட்சி 27 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.
4. ஓஸ்ரியா : ஒஸ்ரிய சுதந்திரம் – Austrian Freedom
‘ஒஸ்ரிய சுதந்திரம் என்ற கட்சி, ஐரோப்பாவின் முக்கிய முதலாளித்துவ நாஸிக் கட்சிகளில் ஒன்று. 1956 ஆம் ஆண்டிலேயே ஹிட்லரின் செல்வாக்குக்கு உட்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி வெளி நாட்டவர்களுக்கும், வெள்ளை நிறமற்றவர்களுக்கும் எதிரான நாசிக் கருத்துக்களை அதன் ஆரம்பம் முதலே முன்வைத்துவருகிறது. பிரான்ஸ் நாட்டின் தேசிய முன்னணியுடன் ஐக்கியத்திற்கு வர வேண்டும் என்ற கருத்து கட்சியின் பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆர்ப்பாட்டங்களில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்ற முழக்கம் முன்வைத்து வெளி நாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது.ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
5. நெதர்லாந்து – நெதர்லாந்து சுதந்திரத்திற்கான கட்சி, -Party for Freedom
கட்சியின் தலைவரான கிரீட் வில்டேர்ஸ் தான் முஸ்லீம்களை வெறுக்கவில்லை ஆனால் இஸ்லாம் மதத்தை வெறுக்கிறேன் என வெளிப்படையாகத் தனது வெறுப்புணர்வைக் உமிழ்ந்தார். இஸ்லாமியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை நேரடியாகவே தெரிவிக்கும் இக் கட்சி ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நான்கு ஆசனங்களை வெற்றிபெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி நெதர்லாந்தில் பல பகுதிகளிலும் வியாபித்துள்ளது.
பிர்த்தானியா போன்ற நாடுகளில், பிரித்தானிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு குழுக்கள் தோன்றினாலும், ஏற்கனவே ஆட்சியிலுள்ள ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் தீவிர தேசிய வாதத்தையும் நாசிக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டுள்ளதால் புதிய கட்சிகள் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தவிர தொழிற் புரட்சியின் ஊடாக மிக நீண்டகாலமாகப் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளில் வலதுசாரிகளின் தீவிரவாதம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
எல்லா நாசிக் கட்சிகளும் ஒன்றிணையும் பொதுவான புள்ளிகளின் இடதுசாரிய எதிர்ப்பும் ஒன்றாகும்.
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை
வெறுப்புணர்வுடன் கூடிய நாசிகளின் இனவாதப் போராட்டமாக மாற்றிச் சிதைப்பதில் ஐரோப்பிய நாடுகள் பெரும் பங்கு வகித்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழ்த் தலைமைகளின் இனவாதம் பல சந்தர்ப்பங்களின் நாசிகளின் கருத்துக்களுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. அப்பாவி சிங்கள உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம்களுக்கும் எதிரான வெறுப்புணர்வை விதைப்பதிலிருந்தே புலம்பெயர் பிழைப்புவாதிகள் தமது அரசியல் தளத்தைக் கட்டியெழுப்பினர்.
தவிர உலகில் மக்களை அழிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் முகவர்கள் போன்று செயற்பட்ட இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை உலக மக்களிலிருந்து அன்னியப்படுத்தின. தாமும் நாசிகளைப் போன்றவர்கள் என்ற உணர்வை தமிழர்கள் அல்லாதவர்கள் மத்தியில் வளர்த்த இக் குழுக்கள் போராட்டத்தின் இறுதி மூச்சு நிற்கும் வரை ஓயப்போவதில்லை.
-நிவேதா நேசன்