Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புது நானூறு(2) : இராமியா

புது நானூறு – முன்னுரை

சோவியத் புரட்சி முடிந்து, தீர்மானகரமான வெற்றி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை துளிர்த்த நேரம். இளங் கம்யூனிஸ்டுகளின் சங்கம், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைத் திட்டம் குறித்து விவாதிக்க 2.10.1920 அன்று ஒரு கூட்டத்தைத் கூட்டி இருந்தது. அக்கூட்டத்தில், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று யாரும் எதிர்பாராத வகையில் லெனின் பேசினார். ‘எதிரிகளை வீழ்த்த வேண்டும்’ என்று போரிடும் மனநிலையிலேயே இருந்த தோழர்களால் லெனின் கூறியதை உடனடியாக உள்வாங்க முடியவில்லை. லெனின் எப்பொழுதும் உறுதியாக இருப்பார். ஆனால் இம்முறை உறுதியோடு மட்டும் அல்லாமல் கண்டிப்புடனும் இருந்தார். அனைவருக்கும் கல்வி என்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று கூறினார்கள். ஆனால் அந்தக் கஷ்டமான காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்று லெனின் கூறி விட்டார். சிறிது நேரம் கழித்து ‘சோவியத் ஒன்றியத்தில் ஆறு இஸ்லாமிய நாடுகள் உள்ளன என்றும் இஸ்லாமியப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்றும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது எங்ஙனம்?’ என்றும் கேட்டனர். ‘அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் நீங்கள் அவர்களுடைய வீட்டிற்குள் சென்று கல்வி கற்பியுங்கள்’ என்று லெனின் கூறினார். உடனே தோழர்கள் வேறொரு காரணத்தைக் கூறினார்கள் ‘அவர்கள் ஆடவர்களைப் பார்க்க மாட்டார்கள்’ என்று. உடனே ‘கட்சியில் உள்ள பெண்கள் முனைந்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்’ என்று லெனின் சொன்னார்.
இச்செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு துண்டுக் காகிதத்தில் படித்தேன். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்றும் ‘கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே.’ என்றும், கற்றலின் சிறப்பு பற்றி மட்டுமே படித்துப் பழகிய மனநிலையில் ‘எப்பாடு பட்டாவது கற்பி’ என்று லெனின் கூறிய சொற்கள் ஒரு அதிர்வைத் தரவே செய்தது. இதன் தாக்கத்தில் புறநானூறின் 183வது பாடலை மனதில் கொண்டு அதை மாற்றிக் கீழ் கண்டவாறு எழுதினேன்.
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்பித்தல் நன்றே
கல்லா மாந்தர் உள்ளனர் என்றால்
நில்லா தொழியும் கற்றவர் மாண்பு
கற்றவர் பெருமை தேர்ந்து தெளிந்திட
மற்றவர் கல்வியே உற்ற உரைகல்
கல்வி நல்காக் கசடர்கள் தம்மைத்
தொல்லியல் காட்சிப் பொருளாய் ஆக்கிடப்
பெருவிரல் பறிகொடா ஏக லைவனாய்
அரும்பெரும் கல்வியை உடைமை கொள்வோம்
இதைப் படித்துப் பார்த்த என் நண்பர்கள் பலர் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். என் மனைவியோ நன்றாக இருக்கிறது என்று கூறியது மட்டும் அல்லாமல், ‘இதே போன்று புறநானூறின் 400 பாடல்களையும் எழுத முடியுமா?’ என்று வினவினார். எனக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை என்று கூறினேன். ஆனால் ‘முடியும்; முயலுங்கள்’ என்று கிட்டத் தட்ட கட்டளை இடுவது போலவே கூறி விட்டார். நானும் முயன்று எழுதி அதற்குப் ‘புது நானூறு’ என்று பெயரும் இட்டு விட்டேன். இப்பாடல்கள், ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலிலும் உள்ள ஏதாவது ஒரு ஒற்றுமையை மையப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன.
அவை ‘இனியொரு’ வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வரலாம் என்று விரும்புகிறேன். இத்துடன் இந்நூல் முழுமையையும் இணைத்து உள்ளேன். இனியொரு இணைய தளத்தில் ஒவ்வொரு பாடலாக வெளியிடும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
-இராமியா

  1. நீங்காக் கடமை

(புறநானூற்றுப் பாடலின் முதல் வரி இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது)

வாள், வலந்தர, மறுப்பட் டதினும் ஆரியர்

மாள் சூதினாலே களம் வென்றனர்

பழங்குடிப் போரில் ஆடவர் மாண்டிட

அழகுயர்ப் பெண்டிரை வென்றவர் கொள்ளும்

மரபினை மாற்றி அடிமை கொண்டனர்

நிரந்தரச் சுரண்டல் நிலைக்கும் வண்ணம்

பண்படு மக்களின் அறிவை முடக்கினர்

வன்கொடு மையினால் கல்வியை மறுத்தே

கல்வித் தாயை யிழந்த அனாதையாய்

அல்லும் பகலும் அரற்றித் திரியும்

சூத்திர மக்கள் பிரிவின்றி கூடி

சாத்திரம் கற்பது முதன்மைக் கடமை

கல்வித் தாயை யீன்ற பின்னர்

பல்வழி களிலும் வலிமை கொண்டு

ஏய்த்துத் திரியும் ஆரியர் ஆட்சியைப்

பாய்ந்து பறிப்பதும் நம்கட னன்றோ

பறித்த விடத்தில் சூத்திரர் ஆட்சியை

நெறியுடன் அமைப்பதும் நீங்காக் கடனே.

(வாள் குருதிக் கறை படிந்து செந்நிறம் அடைந்ததை விட, மாய்க்கும் சூதினாலேயே ஆரியர்கள் போரில் வென்றனர். குழுக் கூட்டமாய் வாழ்ந்த காலத்தில், போரில் வெல்பவர்கள் ஆடவர்களைக் கொன்று விட்டு, பெண்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் ஆரியர்கள் ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக்கினார்கள். தங்கள் சுரண்டல் கொள்ளையை நிரந்தரமாய் வைத்துக் கொள்ளும் பொருட்டு வலுக்கட்டாயமாக (ஆரியர்களினும்) பண்பாட்டுடன் வாழ்ந்த மக்களுக்குக் கல்வியை மறுத்து அறிவு வளர்ச்சியை முடக்கி வைத்தனர். கல்வி மறுக்கப்பட்டதால் தாயற்ற அனாதைகள் போல் திரியும் சூத்திரர்கள் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி அனைத்து அறிவியல்களையும் கற்பது முதல் கடமையாகும். தாய் குழந்தைகளைக் காப்பது போல் காக்கும் கல்வியைப் பெற்ற பின், பல வழிகளிலும் நம் வலிமைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை ஏய்த்துத் திரியும் ஆரியர் ஆட்சியைப் பாய்ந்து பறிப்பதும் நமது கடமையாகும். அவ்வாறு பறித்த இடத்தில் சுரண்டலற்ற சூத்திரர் ஆட்சியை அமைப்பது நம்முடைய நீங்காத கடமையாகும்)

  1. மெய்த் திறனாலே தேயம் செழிப்புறும்

(புறநானூறில் கூறப்பட்டு உள்ள எருமையைப் போன்ற காரிருள் உவமை இங்கு எடுக்கப் பட்டு உள்ளது)

எருமை அன்ன காரிருள் சூழ்ந்த

பெருநிலப் பரப்பாம் இந்திய நாட்டில்

பார்ப்பனர் ஒன்றே திறனாளி எனவும்

சீர்மிகு மக்கள் திறனிலி எனவும்

இயல்புக்கு எதிராய் இயங்கிடும் முறையை

மயங்கிய மதியுடன் ஏற்றிடும் தோழா

ஆரியர் கூறும் சாத்திரம் தன்னிலும்

கூரிய மதியினர் பிறரும் உளரென

வழியின்றி ஒப்பியும் தாமே உயர்வென

பழிக்கஞ்சா கயமையை வலுவிலே பதித்தனர்

தோழா உணர்வாய் நாமே திறனாளி

வாளா விருப்பதில் பயனேதும் இல்லை

திறமை யற்ற பார்ப்பனர் தம்மையும்

மறச் செயலாலே உயர்நிலைக்கு ஏத்தும்

பார்ப்பனர் யாவரும் வஞ்சகர் அல்லவோ

பாராள் வதினால் பாழாகும் அல்லவோ

விழித் தெழு தோழா வஞ்சகர் தம்மை

மழித்தெடுத் தாங்கே மெய்த்திறன் மக்கள்

வருவதி னாலே தேயம் செழிப்புற

பெருவழி அமைக்க ஒன்றாய் இணைவோம்

(எருமையின் கருமையைப் போன்று காரிருள் சூழ்ந்துள்ள இந்திய பெரு நிலப் பகுதியில், பார்ப்பனர்கள் மட்டும் தான் திறமைசாலிகள்  (ஆகவே அவர்கள் பொதுப் போட்டியில் வெல்கிறார்கள்) எனவும், மற்ற பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள் (ஆகவே அவர்கள் பொதுப் போட்டியில் வெல்வதில்லை) எனவும்  இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கை நியதிக்கு ஒவ்வாத கருத்துக்களை, அறிவு மயக்கத்தில் ஒப்புக்கொள்ளும் தோழர்களே! பார்ப்பனர்கள் அடிப்படையாகக் கொள்ளும் (பகவத் கீதை, மனு நீதி, பராசரஸ்மிருதி மற்றும் பிற) ஆரிய சாத்திரங்களிலும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் (அயோக்கியர்களும்) உண்டு என்றும் சூத்திரர்களில் அறிவுக் கூர்மையுடையவர்கள் (ஒழுக்கமுடையவர்களும்) உண்டு என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில்  இருக்க வேண்டும் என்றும் சூத்திரர்கள் கீழ் நிலைகளில் இருக்க வேண்டும் என்றும் (அறமற்ற மறத்தன்மையான) வன்முறைகளினால் நிலைப்படுத்திக்  கொண்டார்கள். தோழர்களே! நாம் தான் திறமைசாலிகள் (பார்ப்பனர்கள் அல்ல) என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (வஞ்சகத்தால் நம்மை உயர் நிலைகளுக்குச் செல்ல விடாமல் தடுத்து) அயோக்கியத்தனமான தந்திரச் செயல்கள் மூலம் தம் இனத்தவர்களில்  திறமையற்றவர்களையும் உயர்நிலைகளில் ஏற்றி (நிலைப்படுத்தி) வைத்து நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருப்பதால் நாடு பாழாகிக் கொண்டு இருக்கிறது அல்லவா? (இந்நிலையை மாற்ற) வஞ்சகர்களான பார்ப்பனர்களை உயர்நிலைப் பணிகளில் இருந்து முற்றிலுமாகத் துடைத்து எறிந்துவிட்டு அங்கே உண்மையான திறமையுள்ள (சூத்திர) மக்களைக் கொண்டு வந்து நிலை பெறச் செய்வதால் நாடு செழிப்படையும் அல்லவா? ஆகவே (அப்பணியை முடிக்க) அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான பாதையை அமைப்போம்.)

6.அண்ணலின் பாடம்

(புறநானூற்றுப் பாடலின் முதல் நான்கு வரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டு உள்ளன.)

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,

குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்,

நிலமிடை ஆளும் அரசதி காரம்

நிலவெனக் குளிரும் பார்ப்பனர் தமக்கே

புதிதாய்ப் புதிதாய்ப் பலவழி களிலும்

கதிராய் எரிக்கும் உழைப்பவர் தம்மையே

குழைவாய்த் தோன்றும் குலமுறை அநீதியே

இன்றும் உள்ள முதன்மை முரணென

என்று உணர்வதோ சிந்தை தெளிவதோ

சாதியைக் கணக்கில் கொள்ளாப் புரட்சி

ஆதியில் அழியும் பின்னரும் தொடரும்

அண்ணலின் பாடம் கண்ணெனத் தகுமே!

(இமயமே வட எல்லையாகவும், குமரிக்கோடே தென் எல்லையாகவும், கீழ்க் கடலே கிழக்கு எல்லையாகவும், மேற்கடலே மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ள நிலப் பகுதியில் (இந்தியாவில்) நிலவும் அரசதிகாரம் பார்ப்பனர்களுக்கு நிலவைப் போல குளிர்ச்சியைத் (இன்பத்தைத்) தருகிறது. (ஆனால்) உழைக்கும் மக்களைப் புதிது புதிதாகப் பல வழிகளில் வெங்கதிரைப் போல் எரிக்கின்றது. அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளில் மிகவும் சாது போலத் தோற்றமளிக்கும் குலத்திற்கு ஒரு நீதி எனும் கொடுமை தான் அனைத்துக் கொடுமைகளுக்கும் வேர் என என்றைக்குத் தான் உணர்ந்து கொள்ளப் போகிறோமோ! உணர்ந்து சிந்தை தெளியப் போகிறோமோ! சாதி ரீதியாக உள்ள ஒடுக்கல் முறையை (பார்ப்பன ஆதிக்கத்தை) கணக்கில் கொள்ளாமல் புரட்சியை முன்னெடுத்தால் அது தோன்றும் முன்பே அழிந்துவிடும்; அழிவின் பின்னரும் (சாதிய ஒடுக்கலின்) கொடுமைகள் தொடரும் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்ன பாடத்தைக் கண்ணெனக் கொண்டு (வர்க்கப் புரட்சியை முன்னெடுப்பதற்காக) சாதிக் கொடுமைகளை முதலில் களைவோம். (உயர் சாதியினர் உயர்நிலை வேலைகளிலும், மற்றவர்கள் கீழ் நிலை வேலைளிலும் குவிந்துள்ள இன்றைய நிலையை மாற்றி அனைத்து சாதியினரும் அனைத்து நிலை வேலைகளிலும் இருந்தே ஆக வேண்டிய அவசியத்தை ஏற்படுததுவோம்.)

  1. வளநாடும் வற்றிவிடும்

(புறநானூற்றுப் பாடலின் தலைப்பு எடுத்துக் கொள்ளப் பட்டு உள்ளது)

மண்ணே தாயாய் உழைப்பே தந்தையாய்

திண்ணிய நிபந்தனை நிரந்தரம் ஆயினும்

உற்பத்தி முறையின் உயர்கெழு மாற்றம்

பற்பல செல்வம் பெருகி அளித்தது

பொருளீர்ப்பு உயரினும் வளநிலை இருப்பு

அருகுதல் இன்றிப் பெருகியே நிலைத்தது

ஆண்டைச் சமூகம் தொடங்கிய கொடுமையும்

மாண்பிலாப் பண்ணை தொடர்ந்த சுரண்டலும்

உழைப்பவர் தம்மை வதைத்திடச் செய்யினும்

மழைதரு பூமியின் வளம்வற்ற வில்லை

அறிவியல் வளர்ச்சியில் கருக்கொண்ட சமூகம்

பிறிதாய் இன்றிச் சுரண்டலை விடாது

சந்தையின் அடிமையாய் உதித்து எழுந்தது

இன்னுயிர் பூமியின் அளவிலா வளத்தையும்

உவமை யிலியாய் உறிஞ்சிக் குடித்துக்

குவலயம் அழியும் பாதை வகுத்தது

குருட்டுச் சந்தையின் முரட்டதி காரச்

செருக்கைத் தொலைத்துப் பலியிடா விடிலோ

உழைப்பவர் இன்னல் தொடர்வது மன்றி

வளமை குன்றா வளநாடும் வற்றும்

(பூமியைத் தாயாகவும் உழைப்பைத் தந்தையாகவும் கொண்டு, மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதித்துள்ள உறுதியான, நிரந்தர நிபந்தனையாகும். ஆனாலும் உற்பத்தி முறையில் உயர் தன்மையான மாற்றங்கள் ஏற்படும் பொழுது சம அளவு உழைப்பில் அதிக அளவு செல்வங்களைப் படைக்க முடிகிறது. அவ்வாறு அதிகமான பொருட்களை உற்பத்தி செய்ய அதிகமான வளங்களை ஈர்த்துக் கொண்ட போதிலும் (பழைய சமூகங்களில்) பூமியின் வளநிலை இருப்பு, சற்றும் குன்றாமலேயே இருந்தது. அடிமைச் சமூகத்தில்  உழைக்கும் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கும் (பண்டைப் பொதுவுடைமைச் சமூகத்தில் இல்லாத) வழக்கம் தொடங்கியது. (அடிமைச் சமூகத்திற்குப் பின் வந்த) பண்ணைச் சமூகத்திலும் இச்சுரண்டல் தொடர்ந்ததுஇச்சமூகங்களின் உற்பத்தி முறை உழைக்கும் மக்களைக் கொடூரமாக வதைத்தது; ஆனால் மழை பொழிகின்ற இப்பூமியின் வளத்தை வற்றச் செய்யவில்லை.

 

அறிவியல் வளர்ச்சியில் கருக்கொண்ட (முதலாளித்துவ) சமூகம், முந்தைய சமூகங்களைப் போலவே, சுரண்டலைக் கைவிடாததாகவும், சந்தைப் பொருளாதார முறையின் அடிமையாகவும் உதித்தது; (முந்தைய சமூக உற்பத்தி முறையைப் போலல்லாமல்) உவமை கூறுவதற்கும் முடியாதபடி, இன்னுயிரான பூமியின் அளவிலா வளம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்து இப்பூமியை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. (மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாமல்) குருட்டுத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சந்தையின் முரட்டு அதிகாரத் திமிரை விரட்டியும், பலியிடாமலும் (அதாவது ஒரேயடியாக ஒழித்துக் கட்டாமலும்) இருந்தால் உழைப்பவர்களின் இன்னல்கள் தொடர்வது மட்டுமல்லாமல், இதுவரைக்கும் வளமை குன்றாது இருந்த நாடுகள் (வளங்குன்றி) வற்றிவிடும்)

  1. கதிர் நிகர் ஆகாக் காவலன்

(புறநானூற்றுப் பாடலின் தலைப்பு எடுத்துக் கொள்ளப் பட்டு உள்ளது)

கதிரவன் கதிரின் வெப்பந் தன்னை

எதிராய் விரிக்கும் சிறுகுடை தடுக்கும்

எரிதழல் ஆகும் நிலந்தனில் இருந்து

இருதாள் களையும் காலணி காக்கும்

பகலவன் கனலோ வேனிலில் மட்டுமே

அகன்ற ஞாலத்தில் பிறநிலம் உளவே

சந்தையின் இயக்கம் நிலைத்திடும் பொருட்டு

வன்முறை அரசை நடத்திடும் காவலன்

தடங்கல் அறியான் கடக்கவும் விடானே

முடக்கும் எல்லையில் மூக்கை நுழைப்பான்

இத்தகைக் காவலன் கதிர்நிகர் ஆகான்

எத்தனை முறையும் துணிந்து கூறலாம்

(கதிரவனின் கதிர் உமிழும் வெப்பத்தை, அதற்கு எதிராய்ச் சிறு குடையை விரிப்பதன் மூலம் தடுத்து விட முடியும். வெப்பமடைந்த நிலம் கால்களைச் சுடாமல் இருக்க, காலணிகளை அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும். சூரியனின் வெப்பம் வேனில் காலத்தில் மட்டுமே தகிக்கும். மேலும் வெப்பம் தகிக்காத குளிர் நாடுகளும் இப்பூமியில் உள்ளன. (ஆனால்) சந்தையின் இயக்கம் நிலையாக இருக்கும் பொருட்டு (உழைக்கும் மக்களுக்கு எதிரான) வன்முறை அரசை நடத்தி வரும் (முதலாளித்துவ) காவலன் (தன் செயல்களுக்குத்) தடைகள் இல்லாதவன்;  (பழங்குடி மக்கள் போன்று) இவர்களின் தொடர்பே இன்றி வாழ்பவர்களையும் (தங்கள் வழியில்) கடந்து செல்ல விடமாட்டாதவன்; (முதலாளித்துவ அமைப்பு வேண்டாம் என்று முதலாளித்துவ அரசை முடக்கி) சோஷலிசப் பாதையில் செல்லும் நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பவன். இத்தகைய காவலனுக்குக் கதிரவன் நிகராக மாட்டான் என்று எத்தனை தரமும் துணிந்து கூறலாம்)

  1. உழைப்பவர் அரசும் வன்முறை அரசே

(புறநானூற்றுப் பாடலில் அரசின் சார்பு பற்றி கூறப்பட்டு உள்ளது. இப்பாடலில் அரசு பற்றிய மார்க்சிய கருத்து கூறப்பட்டு உள்ளது)

இன்றைய அரசின் தன்மை யறிய

முந்தைய அரசின் தன்மை யறிக

தனியாய் ஆய்ந்து உணர முற்படின்

பனியால் மூடிய பளிங்காய் மறைக்கும்

வர்க்கத்தை ஒடுக்க இன்னொரு வர்க்கம்

உறுதியாய் அமைக்கும் உறுப்பே அரசு

ஆண்டை ஆட்சியில் அடிமை களுக்கும்

பண்ணை அரசில் உழுதூண் உழவர்க்கும்

பணியைச் செய்யவும் பணியாளர் தொடரவும்

தேவையின் அளவே கொடுத்துப் பிறபொருள்

யாவையும் கொண்ட ஆதிக்க வர்க்கம்

இம்முறை நிலைத்துத் தொடரும் பொருட்டு

வன்முறை அரசை மண்மீது திணித்தது

உருவம் மாறினும் குணந்தனில் மாறா

வெருவந்த அரசைக் கையில் கொண்ட

சந்தையைக் காக்கும் இன்றைய ஆண்டான்

இன்முகத் துடனே பொதுவெனக் கதைக்கிறான்

ஒருபாற் கோடும் வன்முறை அரசின்

கருப்பொருள் மாறாது யாவர் கையிலும்

உழைப்பவர் அரசும் வன்முறை அரசே

உழைக்கா தவரை ஒடுக்கவே செய்யுமே

(இன்றைய அரசின் தன்மையை அறிய வேண்டுமானால், முற்காலத்திய அரசுகளின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். (அஃதன்றி) தனியே ஆராய்ந்து பார்த்தால் பனி மூடிய கண்ணாடி (வழியே பார்க்கும் பொழுதுமறைப்பது போல் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு வர்க்கத்தை ஒடுக்க இன்னொரு வர்க்கம் உறுதியாய் அமைக்கும் உறுப்பே அரசு ஆகும். ஆண்டைகள் ஆட்சியில் அடிமைகளுக்கும், நிலப் பிரபுக்களின் ஆட்சியில் உழவர்களுக்கும் தங்கள் வேலையைச் செய்வதற்கும், தொடர்ந்து (தலைமுறை தலைமுறையாக வேலை செய்வதற்கு) சந்ததிகளை உருவாக்குவதற்கும் தேவைப்படும் குறைந்த பட்ச பொருட்களை அளித்துவிட்டு மற்ற விளைபொருட்களைத் தாங்களே சுருட்டிக் கொண்ட ஆதிக்க வர்க்கம் (இச்சுரண்டல்) என்றும் நிலைத்திடும் பொருட்டு வன்முறை உறுப்பான அரசை மக்கள் மீது திணித்தது. (சமூக மாற்றத்தால்) உருவம் மாறினாலும் தன் குணத்தில் மாறாத, கொடுமை செய்யும் அரசை (அதிகாரத்தை)க் கையில் கொண்டுள்ள, சந்தைப் பொருளாதாரத்தைக் காக்கும் இன்றைய (முதலாளித்துவ) அரசு, இது (வர்க்கச் சார்புடையதல்ல) அனைவருக்கும் பொதுவானது என்று இன்முகத்துடன் பொய்யுரை சொல்கிறது. (ஆனால்) அரசு என்பது (என்றும்) ஒரு (வர்க்கச்) சார்புடையதே. அது உழைப்பவர் கைகளில் வரும் பொழுதும் வன்முறை உறுப்பாகத் தான் இருக்கும்; (அப்போது) உழைக்காத சோம்பேறிகளையும் (சுரண்டல் ஆட்சியை மீட்க முற்படுவோரையும்) கடுமையாக ஒடுக்கத் தான் செய்யும்.)

  1. குற்றமும் தண்டனையும்

(புறநானூற்றுப் பாடலின் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது)

வழிபடு வோரோ பிறர்பழிப் போரோ

மொழிதே றாமல் வர்க்கச் சார்புடன்

வினைஞர் மாண்பே மெய்யெனக் கொண்டு

முனைந்து செல்வதே புவியின் விடுதலை

அறிஞர் வாழ்வு மெய்யாய் மலர்வது

முறியா வினைஞர் ஆட்சியில் எனினும்

உறுதி யின்றி ஊசல் ஆடுவார்

புவியின் வெப்பம் உயர்ந்திடும் நாளில்

அவியினும் வாழினும் இலாபம் கைவிடா

சந்தையின் தேர்வு மாசுமிகுத் தொழிலே

இந்நிலை தொடரின் புவியின் அழிவு

ஒறுத்தல் ஆகும் மற்ற உயிர்க்கும்

குற்றம் புரியும் மனிதனின் செயலால்

மற்ற உயிர்களும் மாள்வது சரியோ

சந்தையைக் காக்கும் மனிதரை ஒறுக்க

வினைஞரின் சார்பில் அறிஞரே திரள்வீர்

(முகத்திற்கு முன்னால் புகழ்வோருடைய பேச்சுக்களையும் புறங் கூறுவோருடைய பேச்சுக்களையும் மனதில் கொள்ளாமல், வர்க்கச் சார்புடன் தொழிலாளர்களின் சிறப்பையே உண்மை எனக் கொண்டு செயல்படுவதே அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை அளிக்கும். (அப்படிப்பட்ட) தொழிலாளர்களின் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியில் தான் அறிஞர்களின் வாழ்வு உண்மையாய் மலரும். ஆனால் அறிஞர்களோ (தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்காமல்) ஊசலாடிக் கொண்டு இருக்கிறார்கள். புவி வெப்பம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்நாளிலும், யார் அழிந்தாலும், யார் வாழ்ந்தாலும், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள சந்தைப் பொருளாதாரம் (புவி வெப்பத்தை உயர்த்தக் கூடிய) மாசுமிகுத் தொழில்களை மட்டுமே செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. இந்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிர்களுக்கும் இப்புவியின் அழிவு தண்டனையாக அமையும். மனிதன் செய்யும் குற்றத்திற்கு மற்ற உயிரினங்களும் மாள்வது நியாயமாகுமா? சந்தைப் பொருளாதார முறையைக் (காவு கொடுக்க மறுத்து) காப்பாற்றிக் கொண்டு இருக்கும் மனிதர்களைத் தண்டிக்க தொழிலாளர்களின் சார்பில் அறிஞர்களே ஒன்று திரளுங்கள்.)

  1. பெற்றனர்; பெற்றிலர்.

(புறநானூற்றுப் பாடலின் தலைப்பு சற்று மாறுதலுடன் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.)

கீழைத் திமோரின் மக்கள் விடுதலை

தீமைக்கு அஞ்சா வீரம் செறிந்தது

தெற்குச் சூடான் கருத்துக் கணிப்பும்

எதற்கும் குறைவாய்க் கொள்வதும் இலையே

இருப்பினும் ஈழத் தமிழர் சிந்திய

குருதிக்கு இணையாய் எதுவும் உண்டோ

கீழையும் தெற்கும் விடுதலை பெற்றனர்

ஈழத் தமிழரோ தேவையும் பெற்றிலர்

சூடான் திமோரின் மக்கள் போரில்

மேட்டிமை உணர்வுப் பார்ப்பான் இல்லை

ஈழத் தமிழனும் இலங்கையை வென்றான்

பாழாய்ப் போன பார்ப்பன இந்தியத்

தலையீட் டினாலே வெற்றியும் கவிழ்ந்தது

பார்ப்பன ஆட்சி தொடரும் வரையில்

யார்க்கும் உதவிட முடியா தென்று

அன்றே சொன்னார் அருமைப் பெரியார்                   

இன்றும் உணரேல் புன்மை தொடருமே.

(கிழக்குத் திமோர் மக்கள் விடுதலை அடைந்தது வீரஞ் செறிந்த போராட்டத்தினால் தான். தெற்குச் சூடான், கருத்துக் கணிப்பின் மூலம் விடுதலை அடைந்ததைக் குறைவாக மதிப்பிடவும் முடியாது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு எதுவும் இணையாக முடியாது. (ஆனால்) கிழக்குத் திமோர் மக்களும், தெற்குச் சூடான் மக்களும் சுதந்திரம் பெற்றனர்; ஈழத் தமிழர்களோ அடிப்படை உரிமைகளைக் கூடப் பெறவில்லை. (ஏனெனில்) கிழக்குத் திமோர் மக்கள் போரிலும் தெற்குச் சூடான் மக்கள் போரிலும் (தாங்களே பிறவியில் உயர்ந்தவர்கள் என்ற) திமிர்க் குணம் படைத்த பார்ப்பனர்களின் தலையீடு இல்லை. ஈழத் தமிழர்களும் இலங்கையை (சிங்கள அரசை) வென்றனர். (ஆனால்) பாழாய்ப் போன பார்ப்பன (அதிகார) இந்திய அரசின் தலையீட்டினால் (ஈழத் தமிழர்கள் ஈட்டிய) வெற்றியும் கவிழ்க்கப்பட்டது. (நாம் டெல்லிக்கு அடிமை என்று சொல்ல வைக்கும் படியான) பார்ப்பன அதிகாரம் தொடரும் வரையிலும் நாம் யாருக்கும் உதவிட முடியாது என்று (தமிழீழத் தந்தை செல்வாவிடம்) அன்றே நமது அருமைப் பெரியார் சொன்னார். (இவ்வளவு அழிவு நடந்த பிறகு) இன்னும் (அனைத்துப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு) பார்ப்பன அதிகாரப் பிடிப்பைத் தகர்க்கும் பணி ஒன்றை மட்டுமே மேற்கொள்வது என்று உணராமல் போனால் நம் வாழ்வின் இழிநிலை தொடர்ந்து கொண்டே இருக்கும்)

  1. அறம் இது தானோ?

(புற நானூற்றுப் பாடலின் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது)

ஆட்சித் தலைவரைத் தெரிவு செய்ய

மாட்சிமை மக்களுக்கு இலவசப் பரிசுகள்

பசித்த அலுவலர்க்கு இலஞ்சப் பணமும்

மசியா தவர்க்கு உயர்நிலை மறுத்தலும்

சுரண்டல் ஆட்சியை நிலைத்திட வைக்கும்

மிரளா இந்தியர் அறனிது தானோ?

(ஆட்சித் தலைவர்களைத் தேர்வு செய்வதற்காக மாட்சிமை பொருந்திய மக்களுக்கு இலவசப் பரிசுகள் (அளிக்கப்படுகின்றன). அளவுக்கு அதிகமான ஆசை கொண்ட அரசு அலுவலர்களுக்கு இலஞ்சப் பணம் கிடைப்பதன் மூலமும், (அவ்வாறு இலஞ்சத்திற்கு) மசியாதவர்களுக்கு உயர்நிலைப் பதவிகளை மறுப்பதன் மூலமும், சுரண்டல் ஆட்சியை நிலைத்திட வைக்க (உலகில் எங்கு மாற்றம் நடந்தாலும் புண்ணிய பூமியான பாரதத்தில் மட்டும் மாற்றம் நிகழாது என்று) மிரளாமல் (உறுதியாக) இருக்கும் இந்தியர்களின் அறன் இது தானோ?)

  1. வன்முறை யின்றி வழி விடலாமே?

(புறநானூற்றுப் பாடலின் முதல் வரி எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.)

இவன் யார்?” என்குவை ஆயின், இவனே

அவனியை ஆளும் பெருமுத லாளி

ஆண்டையாய் இருந்து அடிமை கொண்டும்

மாண்புடை உழவரைப் பண்ணையாய் ஆண்டும்

சுரண்டல் அரசை நடத்திச் சென்ற

அரசியல் சூழ்ச்சியின் இறுதிக் காவலன்

பண்ணையும் ஆண்டையும் அறிந்திரா நோயாம்

பண்டப் பெருக்கின் மிகைஉற் பத்தி

மீண்டிடத் திணித்த போரிலும் அழிவிலும்

ஈண்டு பிழைத்தது சுரண்டல் சந்தையும்

புதிதாய்த் தோன்றிய புவிவெப்ப நோயோ

விதியாய் இருந்த பழம்பெரும் போரிலும்

சந்தையின் பாதையில் செய்திடும் எதனிலும்

வளர்வதைத் தடுக்க முடியாது காண்பீர்

உளம்மாற வேண்டும் பெருமுத லாளி

சந்தையை ஒழித்துச் சமதர்மம் நாட்ட

வன்முறை யின்றி வழிவிட லாமே?

(“இவன் யார்?” என்று கேட்டீர்களானால் இவனே (இன்று) உலகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் பெருமுதலாளி. அடிமைச் சமூகத்தில் எசமானாக இருந்தும் பண்ணைச் சமூகத்தில் உழவர்களைச் சுரண்டுவதற்காக பண்ணையாராக இருந்தும் வன்முறை அரசை நடத்திய அரசியல் சூழ்ச்சியின் (இன்றைய காவலனும்) இறுதிக் காவலனும் ஆவான். பண்டைய சமூகங்களில் மிகை உற்பத்தி என்ற நோய் இல்லை. (பண்டைய சமூகங்களில் பொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆனால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி அதிகமானால் விற்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டு மிகப் பலர் வேலையை இழக்க நேரிடும். இதுவே மிகை உற்பத்தி நோய்) ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் (விளையும்) மிகை உற்பத்தி நோயில் இருந்து மீள (மக்கள் மீது) போரைத் திணித்து பெரும் பொருட்களை அழிவுறச் செய்வதன் மூலம், மீண்டும் சந்தை (அதாவது சந்தைப் பொருளாதாரம்) உயிர்ப்பிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. (ஆனால் இப்பொழுது) புதிதாகத் தோன்றியுள்ள புவி வெப்ப நோயையோ, இதுவரைக்கும் (சந்தையைக் காப்பாற்றுவதற்கான) வழியாய் இருந்த பெரும் போர்களினாலும், சந்தைப் பொருளாதார முறையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளினாலும், (குறைப்பது ஒரு புறம் கிடக்கட்டும்) வளராமல் தடுப்பதற்கே முடியாது எனபதைத் தெரிந்து கொள்ளுங்கள். (இந்நிலையில் இவ்வுலகை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால்) பெருமுதலாளிகளும் மனம் மாறி சந்தைப் பொருளாதார முறையை அறவே ஒழித்து சமதர்ம (சோஷலிச) உற்பத்தி முறையை நிலை நாட்ட வன்முறை இன்றியே வழி விடலாமே? (இவ்வுலகம் அழியாமல் இருப்பதற்கு வேறு வழியே இல்லையே!)

 இன்னும் வரும்..

புது நானூறு(1) : இராமியா
Exit mobile version