Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னால் உறைந்திருக்கும் உண்மைகள்!

911இந்த மாதம் 11ம் திகதி இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவு நாளை உலகின் பல இடங்களிலும் நினைவு கூர்ந்தனர். இரட்டக் கோபுரத் தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானின் போர் சூழந்த வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு.

ஆப்கானிஸ்தான் வரலாற்று வழிவந்த கலாச்சாரப் பெறுமானம் கொண்ட அழகிய நாடு. இந்துக்கள், கிறீஸ்தவர்கள், பௌத்தர்கள், இஸ்லாமிய மதப்பிரிவினர்கள் எல்லோரும் சமாதானமாக வாழ்ந்த அமைதிப் பூங்கா. மூன்று ரில்லியன் டொலர்களுக்கும் மேல் பெறுமானமுள்ள கனிமங்களைக் கொண்ட செல்வந்த நாடு. அதெல்லாம் அமெரிக்கா தலையிடும் வரையில் தான். என்றைக்கு பெரியண்ணன் அமெரிக்கா ஜனநாயகம் நிலை நாட்டப் போகிறோம் என்று தலையிட்டதோ அன்றைக்கே ஆப்கானிஸ்தானின் அழிவு ஆரம்பமாகிவிட்டது.

தேசிய வாதம் என்ற பெயரில் ஒரு வகையான வெறித்தனத்தையும், இஸ்லாமிய மத வெறியையும் கொண்ட நச்சுக் கலவையாக ஆப்கானிய சமூகத்தை அமெரிக்க அரசு மாற்ற நீண்ட காலம் எடுக்கவில்லை. தமது சொந்த மக்களையே இரத்தாத்தால் குளிப்பாட்டிவிட்டு துப்பாகிகளைத் தூக்கி அல்லாஹு அக்பர் என முழங்கிய ஆப்கானிய தேசியவாதிகளின் பின்னாலும் மத வெறியர்களின் பின்னாலும் அமெரிக்க அரசுதான் இருந்தது என்பதை அவர்களில் பலர் இன்று வரை புரிந்துகொள்ளவில்லை.

ஆப்கானில் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை அவர்கள் வைத்ததுதான் சட்டம். யாரும் திரும்பப் பேச முடியாது. விமர்சனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறிது மனிதாபிமானமுள்ள கெரில்லாக்கள் கூட திரும்பத் திரும்ப ஒன்றையே உச்சரிக்கும் மூளை கழுவப்பட்ட இயந்திரங்களைப் போல காணப்படுவதாக சமீர் அமீன் என்ற ஆய்வாளர் கூறுகிறார். அமெரிக்கா தனக்கு எதிராகப் போராடுபவர்களை தானே வழி நடத்தும் அவலத்தின் ஒரு பகுதிதான் இவையெல்லாம்.

ஆப்கான் சமூகம், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுப்பும், ஜனநாயகமும் மனிதாபிமானமும் கொண்ட சமூகமாக மாறுவதற்கு மிக நீண்டகாலம் எடுக்கும் என சமீர் அமீன் மேலுக் கூறுகிறார்.

இவை அனைத்திற்கும் பின்னால் ஒசாமா பின்லாடன் போன்றவர்கள் இருப்பதாகவே உலகத்தில் ஒரு பகுதியினர் எண்ணுகிறார்கள். ஆனால் ஒசாமா பின்லாடனுக்குப் பின்னால் அமெரிக்காவே செயற்பட்டதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. தனது எதிரியாகவிருப்பதற்கு அமெரிக்கா உருவாக்கிய தனி நபர்தான் ஒசாமா பின்லாடன்.

அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ ஐச் சேர்ந்த மிலிட்டன் பிரட்மன் கூற்றுப்படி ஒசாமா பின்லாடன் சீ.ஐ.ஏ இற்காகவே வேலை செய்கின்றார் என்பதை அவரே அறிந்திருக்கவில்லை என்கிறார்.

அழிவுக்கான ஆரம்பம் ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்திருந்த 1979 இல் ஆரம்பமாகிறது. 1978 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய சோவியத் சார்பு போலி கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பெண்களுக்கு உரிமை, நிலங்களை உரிமையாக வைத்திருப்பதற்கு உச்சவரம்பு, உள்ளூர் பழமைமை வாத நிர்வாகங்களை ஜனநாயகமயப்படுத்தல் போன்ற அடிப்படைச் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்படன.

இதனால் விரக்தியடைந்த இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராட ஆரம்பித்தனர். ஆளும் சோவியத் சார்பு அரசாங்கத்திற்கு உதவி செய்வதற்காக சோவியத் ரஷ்யா படைகளை அனுப்பிற்று. அந்தப் படைகளுகு எதிராகப் போராடுவதற்கு என்று கூறி அமெரிக்கா முஜாகிதீன் அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களையும் பெரும் தொகைப் பணத்தையும் வழங்கிற்று.

முஜாகிதீன் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன்

அவ்வேளையில் அதிபராகவிருந்த ரொனால்ட் ரீகன் முஜாகிதீன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அமெரிக்கவிற்கு அழைத்துப் பேச்சு நடத்தினார். அவர்களை விடுதலைப் போராளிகள் என அழைத்தார். வேண்டிய பண உதவிகளையும் ஆயுதங்களையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

80 களில் அமெரிக்க அரசு நேரடியாகவும், அதன் துணை நாடுகள் ஊடாகவும் சோவியத் படைகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கம் கொண்டவர்களை ஒன்றிணைத்து ஆப்கான் அரேபியர்கள் என்ற சமூகக் குழுவை உருவாக்கிற்று. அப்போது இளம் சவுதி அரபியரான ஒசாமா பின் லாடன் இக் குழுவில் இணைந்துகொண்டார்.

பின்னர் அதுவே அல் கயிதா என்ற பெயரில் அழைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவாக வளர்ச்சிபெற்றது.

ஒசாமா பின் லாடன் குறித்து சீ.ஐ.ஏ பியேட்மன் குறிப்பிடுவதற்கு மாறாக அவர் சீ.ஐ.ஏ உடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தார் என்ற ஆதாரங்களை மைக்கல் மூர் என்பவர் வெளியிட்டிருந்தார். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற அதே நாள் விசேட விமானம் மூலம் ஒசாமா பின்லாடனின் குடும்பத்தினர் அமெரிக்காவிலிருந்து சவுதி அரேபியாவிற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படனர்.

2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லாடன் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

9/11 தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த மணி நேரத்தில் தாக்குதலுக்கு ஒசாமா பிலாடன் உட்பட்ட அல்கைதாவே பொறுப்பு என அவசராவசரமாக அறிவிக்கப்பட்டது. அன்று மாலையே போர் நடத்துவதற்கான கபினட் உருவாக்கப்பட்டது. உடனடியாகவே ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ அறிவிக்கப்பட்டது.
தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்ற ஆதாரமோ விசாரணைகளோ நடத்தப்படாமல் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டது. மறு நாள் அமெரிக்க ஊடகங்கள் ஆப்கானிஸ்தானிய அரசின் துணையுடனேயே அல்கைதாவும் தலிபான்களும் தாக்குதல் நடத்தினர் என்று அறிவிக்கப்பட்டது. சரியாக நான்கு வாரங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டு அமெரிக்கத் துருப்புக்கள் போரை ஆரம்பித்தன.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் விமானங்கள் மோதியதால் நடைபெறவில்லை என்றும் கீழிருந்தே வெடிகுண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டன என்றும் பல்வேறு ஆதாரங்களும், சாட்சிகளும், ஆய்வுகளும் முன்வைக்கப்பட்டன. பல்தேசிய ஊடகங்கள் இவற்றை மறைத்து பொய்யை மக்களின் மனங்களில் பதிய வைத்துள்ளன.

சோசலிசப் புரட்சிக்கான சூழல் எங்கெல்லாம் உருவாகிறது அங்கெல்லாம் அழிப்பு நடத்தவேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாத்தையும் மீறி கம்யூனிசக் கருத்துக்கள் மக்களைப் பற்றிக்க்கொள்ள ஆரம்பித்ததிருந்த வேளையிலேயே அமெரிக்காவின் கண்பார்வை ஆப்கானிஸ்தான் மீது விழ ஆரம்பித்துவிட்டது. பின்னதாக, சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா இன்றுவரை ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்ப்பதற்கான ஈர்ப்பு மையமாகப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கையில் சண்முகதாசனின் மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்றிருந்த வேளையில் சிங்களப் பகுதியில் பேரினவாதமும், தமிழ்ப் பகுதிகளில் இனவாதமும் தூண்டிவிடப்பட்டது. தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெழுந்த போது அதனை இனவாதப் போராட்டமாகவும், அதிகாரவர்க்கம் சார்ந்தாகவும் மாற்றி அழித்துத் துவம்சம் செய்துவிட்டனர்.

இன்று இலங்கையில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்களை அணிதிரட்டத் தவறினால், இன்னொரு ஆப்கான் இலங்கையில் இரத்த ஆறாக மாறலாம்.

Exit mobile version