Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்? : சபா நாவலன்

அரசு-புலிகள் இரண்டு பாசிசக் கருத்தியல்களையும் நியாயம்கற்பிக்கும் மனித விரோதிகளே, புலிகளின் அழிவிற்குப் பின்னதான அதிகார சக்திகளாகவும், ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் நேரடியான அல்லது மறைமுகமான ஏவல்களாகவும் அமையப் போகிறவர்கள்.

 

புலம் பெயர் நாடுகளிலும், புலத்திலும் இறுக்கமான அதிகார வலைப்பின்னலைக் கொண்டுள்ள இவர்களின் மக்கள் விரோத செயற்பாடுகளை அடையாளம் காண்பதும் அவற்றுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுப்பதும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும்.

1. புலிகளின் ஆதரவு சக்திகளும் புலிகளின் அழிவின் பின்னதான புலிகளின் பாசிக் கருத்தியலின் தொடர்ச்ச்சியை அரசியலாக வரித்துக்கொள்ளப்போகிறவர்களும்.

 

 

புலிகளின் போராட்டம் எப்போதுமே மக்களை நம்பிய மக்கள் சார்ந்த போராட்டமாக அமைந்திருந்ததில்லை மாறாக மக்கள் விரோதக் கருத்துக்களுடன் கூடிய எதிர்ப்புப் போராட்டமாகவே அமைந்திருந்தது. பெருந்திரளான மக்களின் கண்காணிப்புடன் கூடிய அவர்களின் சமூகப் பொருளாதார நோக்கங்களுக்கான போராட்டமாகவன்றி, மக்களிலிருந்து முற்றிலும் அன்னியப்பட்ட புலிகளின் கண்காணிப்பில் மக்கள் உள்வாங்கப்பட புலிகள் என்ற அமைப்பின் நலனுக்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. இங்கே புலிகள் தேசிய இன அடக்குமுறைக்கெதிரான போராட்டத்தை, சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, தமது கரங்களில் வைத்துக்கொண்டு, மக்களின் பிரதான தேவையாக அமைந்த அப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்து விட்டார்கள்.

 

 

இலங்கை அரச பாசிசத்திற்கும், கொடூரமான தேசிய இன அடக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தி ஏனைய தேசிய சக்திகளையும், சமூக அக்கறையுள்ள சக்திகளின் அரசியலையும் நிர்மூலமாக்கிய போதிலும், புலிகள் தவிர்ந்த எந்த ஆதிக்கம் செலுத்தவல்ல அரசியற் சக்திகளும் 80களின் பின்னதாக உருவாகவில்லை. ஏனைய எத்ர்ப்பு சக்த்கள் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டார்கள். இது ஒருவகையில் அரச புலிகளின் கூட்டு அழிப்பு நடவடிக்கை போன்றதாகவே அமைந்திருந்தது.

 

 

 புலிகளுக்கெதிரான ஜனநாயக சக்திகளை அரசும் அதன் ஆதரவுக்க் குழுக்களும் உள்வாங்கிக் கொண்டதுடன் மட்டுமன்றி, அவ்வாறான உள்வாங்கலுக்கு உட்பட மறுத்த அனைத்து சக்திகளும் அரசாலோ புலிகளாலோ அழிக்கப்பட்டுவிட்டனர். மிகுதியாகி இருந்தவர்களை மேல் நாடுகளை நோக்கி ஏகாதிபத்திய நாடுகள் உள்வாங்கிக் கொள்ள, தெற்காசியவின் புரட்சிக்குரிய ஒரு பகுதி அதிகாரவர்க்கம் எதிர்பார்த்தது போலவே “பாதுகாக்கப்பட்டுவிட்டது”. புலிகளைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களின் ஒரே அரச எதிர்ப்புக் குரலாக அமைந்த நிலையில் மக்களின் மறுதலையான ஆதரவு பெற்ற சக்தியாக உருவாகியிருந்தது.

 

 

இந்த மறுதலையான ஆதரவானது, புலிகள் என்ற அமைப்பின் நலன் மேலோங்கிய நிலையில் மக்கள் ஆதரவு கொண்ட பாசிசமாக வளஎச்சியுற்றது.
தமிழ்த் தேசிய வாததின் மறுபக்கமாக வெளித்தெரிந்த இந்தப் பாசிசமானது, வெறுமனே நடைமுறை சார்ந்த நிகழ்வாகவன்றி கருத்தியல் வடிவிலான அரசியலாகவும் உருவம் பெற்றது. இதன் வெளிப்பாடுதான் புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கான வெறித்தனமான ஆதரவுத் தளத்தின் உருவாக்கமாக அமைகிறது.

 

 

புலிகளின் அழிவிற்குப் பின்னரும் இந்தக் கருத்தியலும் அதன் ஆதரவுத் தளமும் மிக நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தவல்லது. இவ்வாறான ஆதரவுத் தளம் ஒன்று தொடர்ச்சியான தனது இருப்பைக் கொண்டிருக்கும் வரையில் அதற்கான சந்தர்ப்பவாதத் தலைமையும் வழங்கப்படும். புலிகள் பலவீனமடைந்து சேடமிழுக்கும் நிலையிலும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் மிக உறுதியாகவே உள்ளன என்பது இங்கு குறித்துக்காட்டத் தக்கது.

 

 

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமை அமைப்பாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கட்டியெழுப்பப்படும் வரை இந்த ஆதரவுத் தளத்தைத் சரியான திசையை நோக்கி நகர்த்துதல் என்பது சாத்தியமற்றது.

2. இலங்கை அரச பாசிசத்தை நியாயம் கற்பிக்கிறவர்களும் அதன் தொடர்ச்சியான இருப்பை தமது சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களும்.

 

 இன்றைக்கு வரை புலிகளின் தவறுகளை மட்டுமே காரணமாக முன்வைத்து, சிறுபான்மை மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறையையும், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீதான ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறையையும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் இவர்களின் பின்னால் எந்தச் சிக்கலான அரசியல் சமன்பாடுகளும் கிடையாது. புலிகள் மீதன தனிப்பட்ட வெறுப்புணர்வைத் தீர்த்துக் கொள்கிறவர்களும், முன்னை போராட்ட அமைப்புக்களின் குழுவாத மனோபாவத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் தவிர எஞ்சிய பெரும்பான்மை சிறீலங்கா அரச பாசிசத்துடன் தமது அரசியல் வியாபார நலன்களுக்காகவும், அதிகாரப் பங்கிடலுக்காகவும் கைகோர்த்துக் கொள்பவர்கள். முன்னைய சிறீ லங்கா அரசுகளைப் போலன்றி, மகிந்த குடும்ப அரசானது, வெளிப்படையாகவே இனவாதத்தை முன்வைத்து தனது பாசிசத்தை உறுதியாக்கிக் கொண்ட அரசியல் நிகழ்வானது, தமிழ்- சிங்கள் முற்போக்கு சக்திகள் மத்தியில் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்ற நிலையிலும் இவ்வாறான அரச ஆதரவு தமிழர்களின் ஒரே நோக்கம் அரசியல் வியாபாரம் என்பதைத் தவிர வேறெதுமாக இருக்க முடியாது.

3. எந்த அரசியலுமின்றி இந்த இரண்டு போக்குகளுடன் அவ்வப்போது முரண்பட்டும் உடன்பட்டும் நேரடியான ஏகாதிபத்திய உப அமைப்புக்களின் பிரதி நிதிகளாகச் செயற்படுகின்றவர்கள்.

 

 

 

 சாமுவெல் ஹன்ரிங்டன் 1992 இல் கூறிய நாகரீகங்களின் மோதுகை தொடர்பான தத்துவம் தான் உலக மயமாதலைத் துரிதப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்பட்டது. சிவில் சமூகங்களும், அடையாள அரசியலும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைவைத் தடுப்பதிலும், ஏகாதிபத்தியங்களுகெதிரான உணர்வைக் கூறுபோடுவதிலும் கணிசமான பங்காற்றியிருகின்றன. வன்னியில் மக்கள் சாரி சாரியாக கொல்லப்படுகிறார்கள், கிழக்கு தெற்காசியாவின் சோமாலியாகிவிட்டது. வடக்கில் அரச ஆதிக்கதுள் மக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் எதுவேண்டுமானாலும் ஏகாதிபத்திய நிதியில் தங்கியிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டிய பரிதாப நிலை தமிழ் பேசும் மக்களுக்கு! இலங்கை அரசு தமிழ் மக்களைக் கொன்று போடுவதற்கு புலிகளும் காரணம் என்று “ஒன்றுமறியா” அரசை நியாயப்படுத்துகின்ற அரசியல் சொல்லித்தரும் இந்தத் தன்னார்வ அமைப்புக்கள்தான் உலகின் நியாயத்தைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு மூன்றாமுலக நாடுகளை அங்கீகரிக்கப்பட்ட கொலைக்களமாக்கி வருகின்றன.

 

 

அரசியலின்றி மனிதாபிமானத்தை நேசிப்பதாகக் கூறும் இவர்களின் அரசியல் ஆபத்தானது. மனிதர்களின் உயிர்களைப் பற்றிப்பேசும் உரிமையை இவர்களுக்குக் குத்தகைக்கு விற்றுவிட்டு அமைதி நிறைந்த சமூகத்தில் அடிமைகளாக வாழக் கற்றுக்கொடுக்கும் இந்த அமைப்புக்கள் உருவாக்கும் அடையாள அரசியலின் இலங்கைப் பதிப்புத் தான் “கிழக்குத் தனித்துவம்”, “தலித்தியம்”, “பின் நவீனம்”, என்ற குறுக்கப்பட்ட அரசியல். இவர்கள் அரச ஆதரவாளர்களையும், சில சமயங்களில் தமது நலன்களுக்குள்பட்ட அரச எதிர்ப்பாளர்களையும், பெருங்கதையாடல்களுகெதிரான அறிவாளர்களையும், உதிரிகளான கலகக் காரர்களையும் ஒன்றிணைக்கும் கதம்ப்ப கூட்டம். ஏகாதிபத்தியங்களின் புதிய உலக ஒழுங்கமைப்பின் தமிழ்ப் பிரதினிதிகள். இவர்களில் பலர் சேவை என்ற நோக்கத்தோடு இக்கருத்துக்களை நோக்கி உள்வாங்கப்படுகின்றனர். சுய நலமற்ற சேவை என்பதும் அரசியலற்ற அமைப்புக்கள் என்பதும் அழகான வெளிப்பூச்சுக்களாகத் தெரிவதில் சமூக உணர்வுள்ள பலர் இந்த அமைப்புக்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

 

 

தமிழ்ர்களின் போராட்டத்தை முன்வைத்து உருவான இது போன்ற பல அமைப்புக்களின் ஆதிக்கம் புலம் பெயர் நாடுகளைத் தளமாகக் கொண்டு இன்னொரு அபயாகரமான கருத்தியலை ஏகாதிபத்தியங்களின் ஆசியோடு புலிகளின் அழிவிற்குப்பின்னர் உருவாக்கும் என்பது எதிர்வுகூறலல்ல இன்றைய நடைமுறை யதார்த்தம்.

 

 

இவர்கள் அனைவரிடையேயானதுமான வெளிப்படையான பொதுமைப்பாடு என்பது மக்கள் சார்ந்த கருதுக்ளையோ, போராட்டங்களையோ ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அதிகார வர்க்கம் சார்ந்த சலுகைகளை நோக்கிய அரசியலை முன்னிறுத்துவதுமாகும்.

இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்?

ஜீ 20 மாநாட்டு முடிவில் பிரித்தானியப் பிரதமர் பிரவுன் “புதிய உலக ஒழுங்கமைப்பு ஆரம்பமாகிவிட்டது” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். மாநாட்டில் வல்லரசுக்கள் பல துருவங்களாக அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்ளும் என்பது மறைமுகமாக ஒத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே முடிபுகள் மேற்கொள்ளப்பட்டன. உற்பத்தி இந்நாடுகளிடையே ஒருங்குதலைத் துரிதப்படுத்துவதும், விற்பனையின் உலகமயமாதலைத் துரிதப்படுத்துவதுமே இம்முடிபுகளின் சாராம்சம்.

 

 

துருவ வல்லசின் அடிமையாகிக் கொண்டிருக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இந்த வல்லரசுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளின் ஒரு மாதிரி வடிவம். இதன் தீர்வுகளும் கூடத்தான். இலங்கையில் உலக மக்களின் எதிர்ப்பின்றி எவ்வாறு மனிதர்களைக் கொன்றொழிப்பதென்பதும், போராட்டங்களைக் நிர்மூலமாக்குவதென்பதும், அவற்றின் அழிவின் பின்னர் மக்கள் மத்தியில் எவ்வாறு வெறுப்புணர்வை உருவாக்கி அதனை தன்னார்வ நிறுவனங்களினதும் பாசிசக் கருத்துக்களினதும் திசை நோக்கி வழி நடத்துதென்பதும் இலங்கை உலகத்திற்குக் கற்றுக்கொடுக்கும் பாடம். இலங்கை என்பது “புதிய ஒழுங்கமைப்பில்” எதிர்பார்க்கப்படும் எதிர்ப்புக்குரல்களை அடக்குவதற்கான மாதிரி ஒன்றை உருவாக்குவதற்கான பரிசோதனைக்க்கூடமாக ஏகாதிபத்தியங்களுக்கு அமைகிறது.

 

 

லத்தீன அமரிக்க நாடுகளில் இவ்வாறான பரிசோதனைக் கூடங்களை மனித அவலங்களின் மத்தியில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட அமரிக்க அரசியற் பாரம்பரியம் இன்று உலகின் துருவ வல்லரசுக்கள் மத்தியில் பங்கு போடப்பட்டுள்ளது.

 

 

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல்  கார்ல் மார்க்ஸின் “டாஸ் கப்பிரல்” விற்பனையில் சாதனை படைக்கிறது. சிங்கள, தமிழ், மலையக, முஸ்லீம் மக்கள மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகள் இன்னும் முற்றாக அழிந்து போய்விடவில்லை. பாசிசத்திற்கும், கூறு போடும் அடையாள அரசியலுக்கு எதிராகாவும் இவர்களின் இணைவு மட்டுமே எதிர்கால இலங்கையைப் பாசிசத்தின் கரங்களிலிருந்து விடுதலைசெய்யும்.

Exit mobile version