1
2009 மே மாதம் 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, நோர்வேயில் வாழும் இருபத்தி ஐந்து வயது ஈழத்தமிழ் இளைஞரான தமிழியம் சுபாஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் பத்து நிமிடக் குறும்படம் ‘வன்னி எலிகள்’. இருபத்தி நான்கு வயதை எட்டியிருக்கும் சுபாஷ் தனது பதிமூன்றாம் வயதில் வன்னியிலிருந்து நோர்வே நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். சுபாஷின் பிறிதொரு குறும்படம் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ எனும் எட்டு நிமிடத் திரைப்படம். வன்னி எலிகள் வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் பதினோறு நாட்கள் நடைபெற்ற குறும்படம் மற்றும் சுயாதீனத் திரைப்படங்களுக்கான உலகத் திரைப்படவிழாவில் சிறந்த குறும்படக் கதைக்கான விருதைப் பெற்றிருக்கிறது. உலகத் திரைப்பட விழாவொன்றில் விருதுபெற்ற முதல் ஈழத் திரைப்படம் என நிச்சயமாக நாம் வன்னி எலிகள் குறும்படத்தைக் குறிப்பிடலாம்.
முள்ளிவாய்கால் பேரழிவின் போது ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழ் பொதுமக்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பில் செயல்பட்ட அதனது ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எந்தவிதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகள் நேருக்கு நேர் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதான ஒளிப்பதிவுகளும் வெளியாகி, அதனது நிஜத்தன்மையும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. டப்ளின் மனித உரிமை விசாரணைகள் இலங்கை அரசின் மனித உரிமை உரிமை மீறலையும் போர்க்குற்றங்களையும் பட்டியல் இட்டிருக்கிறது.
ஈழத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதான ஊடகச் செய்திகளும் பதியப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுமியொருவர் இலங்கை அரச படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் படையினர் மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்னி நிலப்பரப்பில் முகாமிலுள்ள இலங்கை அரசபடையினருக்கும் அகதிகளுக்கும் இடையிலான மோதலில் இலங்கை ராணுவத்தினர் அகதிகளைத் தாக்குதலுக்குட்படுத்திய சம்பவமும் நடந்திருக்கிறது. பத்திரிக்கையாளர் லசந்த கொல்லப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதனை இலங்கையின் சிங்களத்தரப்பு இடதுசாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஓரு புறம் இலங்கையில் நடந்து வருகிற பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் கொண்ட தேர்தல்கள் அரசியல் யதார்த்தமெனில், மறுபுறம் அதே அரசினது மனித உரிமை மீறல்களும், சிறுபான்மையின அழிப்பும், மாற்றுக் கருத்தாளர்கள் அழிப்பும் பிறிதொரு அரசியல் யதார்த்தமாக இருக்கிறது. இந்தப் பிறிதொரு அரசியல் யதார்த்தத்தில் வேர்கொண்ட குறும்படம்தான் வன்னி எலிகள் எனும் திரைப்படம்.
2
நோர்வே நாட்டிலுள்ள ஒரு நகரத்தின் அடிக்குமாடிக் குடியிருப்பில் அமர்ந்தபடி, பனிவெளியில் விளையாடும் குழந்தைகளை ஜன்னலினூடே நோட்டமிட்டபடி, தனது தமிழ் அப்பியாசப் புத்தகத்தில் தமிழ் சொற்களை உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. சதுரமான இரும்புக் கம்பிகளை இணைக்கும் கயிறுகளில் தொங்கியபடி ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். அப்பியாசப் புத்தகத்தில் எழுதிமுடித்த சிறுமி புத்தகத்தின் வலது கீழ்க்கோடியில் கோட்டுருவத்தில் இரண்டு நீள் சடைகள் கொண்ட சிறுமியைக் கீறுகிறாள். வீட்டின் மீது ஆகாயவிமானம் பறக்கிற அல்லது திடுக்கிடும்படியான ஓசையைக் கேட்டு வீட்டுக் கூரையை நோக்கி முகம் உயர்த்துகிறாள் சிறுமி. வானத்தில் இரண்டு காகங்கள் கரைந்தபடி வானத்தின் குறுக்கே பறந்து போகிறது. இப்போது படத்தின் வெண்திரை வெற்றுக் காகிதமாகப் பிரதியீடாகிறது.
திரையின் வலது கீழ் மூலையில் நீள் சடை கொண்ட சிறுமியின் உருவம் உயிர்பெறுவதற்கு முன்னால், இரண்டு வீடுகளின் கூரைகள் மட்டும் தோன்றுகிறது. கூரைகளுக்கு மேலாக வலப்புறத்தில் வரையப்பெறும் சூரியன் அழிக்கப்பட்டு திரையின் இடது மூலையில் வீடுகளுக்கு மேலாகச் சூரியன் தோன்றுகிறது. திரையின் வலது மூலையில் அசையும் சிறுமியின் கோட்டுச் சித்திரத்தைத் தொடர்ந்து ஒரு சிறுவனும் அவர்களது தந்தையும் கோட்டுச் சித்திரமாகத் தோன்றுகிறார்கள். திரையில் விளையாடக் கட்டம் வரைகிறார்கள். தந்தை தெல்லு விளையாட கல்லைத் தேடி எடுத்து வருகிறார். சிறுவனும் சிறுமியும் மாற்றி மாற்றி நொண்டிக் கொண்டு கட்டங்களைத் தாண்டுகிறார்கள். விளையாட்டின் போக்கில் ஒரு கட்டத்தை நோக்கி கல் எழும்போது தலைக்கு மேல் பறந்துபோகும் ஆகாய விமானத்திலிருந்து வீழும் வெடிகுண்டு மண்ணில் விழுந்து வெடிக்க சிறுவனும் தந்தையும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போகிறார்கள். கோட்டுச் சித்திரச் சிறுமி ஒற்றைக் கால் இழந்து சரிகிறாள்.
ஆகாய விமானமும் குண்டுவீச்சும் ஈழக் குழந்தைகளின் கிலியும், இந்தியக் குழந்தைகளின் குதூகலமும் குறித்து ஒப்பீட்டு ரீதியில் பேசிய தமிழக இயக்குனரான சகாதேவனின் சிலோன் குறும்படம் ஞாபகத்தில் வந்துபோகிறது.
தாய் சிறுமியின் சக்கரநற்காலியின் கீழ் அமரும்போது இலட்சோப இலட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் நடக்கிற போர்களில் அவயவங்களை இழக்கிறார்கள் எனும் செய்தியும், அவர்களது தொகை நோர்வே மக்கள் தொகையைப் போல ஆறுமடங்கு அதிகமானது என்கிற செய்தியும் எழுத்துக்களாக எழுகிறது. இது ஈழக் குழந்தைகளின் அவலம் என்பதையும் தாண்டிய, முழு மனுக்குலம் தழுவிய துயரமாக ஒரு பிரபஞ்ச மயமான குறியீடாக ஆகிறது. மார்டின் லூதர் கிங்குக்கு இருந்த கனவு கறுப்பு வெள்ளையாக இருக்க, சிறுமியின் கனவு ஏழு நிறங்களில் மலரும் வானவில்லின் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது. இந்தக் கனவின் வடிவம்தான் நான் ஒரு கனவு காணலாமா? எனும் குறும்படம்.
3
ஓரு ஜோடி எலிகள் ஒன்றையொன்று தொடர்ந்தபடி, சில வேளைகளில் தொடரமுடியாது இருளில் தொலைந்தபடி, வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்ம் முகாமின் கூடாரங்களுக்கு வெளியில் அலைந்து திரிகிறது. முள்கம்பி வேலிகளில் பட்டுத்தெறித்து வறண்ட சருகுகளுக்குள் நுழைந்து துளாவி, எலிகள் ஒன்றையொன்று தமது இணையைத் தேடி அலைந்தபடி இருக்கின்றன.
கூடாரங்களை எலிகள் தாண்டிச் செல்லும்போது மானிக்பார்ம் முகாமில் வதியுறும் அகதிமக்களின் வாழ்வு அவர்களது கூக்குரலாக, அழுகுரலாக, வீறிடலாக இருளிலிருந்து சாவின் ஓலமென எம்மை எட்டுகிறது. தனது தாயிடம் தனது பசியை வெளியிடும் சிறுமி, மாதாவிடம் இறைஞ்சும் கடவுள் பக்தி கொண்ட சிறுமி, அடிமைப்பட்ட மனிதரின் மீட்சிக்கென மனுஷகுமாரனிடம் முறையிடும் மனிதன் என அன்றாட வாழ்வின் அழுகுரல்களை எலிகள் கடந்து போகின்றன.
நாய்கள் தூரத்தில் குரைக்கின்றன. முகாமின் மங்கிய வெளிச்சத்தில் மனித உடல்கள் கிடையாகப் படுத்திருப்பது தெரிகிறது. தொடரும் அழுகுரல் இப்போது ஓலமெனக் கேட்கத் துவங்குகிறது. ‘கொட்டியா, கொட்டியா’ எனச் சொன்னபடி இலங்கைப் படையினர் முகாமிலுள்ள இளைஞர்களை சித்திரவதை செய்கிறார்கள். அலையும் சப்பாத்துக் கால்களும் ஆற்றாமையில் துடிக்கும் கைகால்களும் நிழல்களாகி மறைகின்றன. அடுத்த கூடாரத்தில் தன்னை விட்டுவிட மன்றாடும் பெண்ணின் தீனக்கதறல் உரத்து ஒலிக்க ஒலிக்க, படையினரின் உடல்கள் கும்பலாக பெண் உடலின் மீது வெறிகொண்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுகின்றன.
தனது கைத்துப்பாக்கியால் பெண்ணின் குரலை நிரந்தரமாக முடித்துவைக்கிறான் ஒரு படையினன்.
எலிகள் எல்லாவற்றினதும் சாட்சியாக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது. அன்று நாள் 2009 ஆம் ஆண்டு ஜூலை மதம் 03 ஆம் திகதி. நேரம் இரவு 10.29 மணி எனும் செய்தி முகாமின் கூடாரங்களின் மீது விழுகிறது.
முகாமுக்கு மனிதர்கள் பதியப்படும்போது அவர்களின் பெயர்களின் மீதான அரச முத்திரை பதிவது போலவே, வன்னி எலிகள் என திரைத் தலைப்பு போடப்படும்போதும் அரச முத்திரை பதிகிறது. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள். எலிகளுக்கும் மனிதர்களுக்ளும் இடையிலான நிரந்தர யுத்தத்தில் எலிகள் போலவே மனிதர்களும் சில வேளைகளில் வேட்டையாடி அழிக்கப்படலாம். எலிகளை அழிக்க நினைப்போருக்கும் எலிக்குமான பகைமை என்பது அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. எலிகள் ஒழிந்த உலகம் என்பது சத்தியமேயில்லை.
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘எலிப்பத்தாயம்’ திரைப்படமும், உம வரதராஜனின் ‘எலியம்’ சிறுகதையும் மனிதனுக்கு எலிகள் எலுப்பும் கிலி வன்னி எலிகளைப் பார்க்க ஞாபகம் வந்து போகிறது.
4
சுபாஷின் இரண்டு குறும்படங்களும் மிகுந்த தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள். பெரும்பாலுமான ஈழக் குறும்படங்களில் பொதுவாகத் தவறுகிற இசைக்காலமும் ( மியூசிக் டைம்) கால உணர்வும் (டைம் சென்ஸ்) குறித்த புரிதலுடன் எடுக்கப்பட்ட குறும்படங்கள் இவை. கதைக் கருவுக்கு இயைந்த வகையிலான கதைசொல்லும் லயமிக்க நெறி இந்தக் குறும்படங்களில் இருக்கிறது.
ஒரு குழந்தையின் மனோ நிலையுடன், அவர்தம் அலைவுறும் மனதின் கற்பனையாற்றலுடன் நான் ஒரு கனவு காண முடியுமா? குறும்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பை ஒரு குழந்தைதான் கீறுகிறது. நிற நிறமான பென்சில்களில், ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ (ஐ ஹேவ் எ ட்ரீம்) என ஆங்கிலத்தில் தொடங்கும் தலைப்பு, பிற்பாடாக ‘முடியுமா?’ (கேன்) என அர்த்தம் தரும் சொல்லுடன் புதிய வாக்கியம் அல்லது கேள்வியுடன் (கேன் ஐ ஹேவ் எ ட்ரீம்?) முடிகிறது.
சொற்களை உருவாக்குவதிலுள்ள இந்த நிச்சயமின்மையும் கற்பனையும் குழந்தைகளுக்கு மட்டுமே உரியது. இந்த நிச்சயமின்மையும், நிச்சயங்களை நோக்கிய குழந்தையின் ஏக்கமும் படமெங்கிலும் நிறைந்து கிடக்கிறது. படத்தின் கரு வேறு வேறு விதங்களில் பல்வேறு தமிழக மற்றும் ஈழக் குறும்படங்களில் முன்பே பாவிக்கப்பட்டிருப்பினும், சுபாஷின் இக்குறும்படத்தை மிகச் சிறந்த திரையனுபவமாக மாற்றுவது படத்தின் கச்சிதமான மற்றும் பொருத்தமான குழந்தை மனம் தோய்ந்த கதை சொல்லல் தான்.
வால்ட் டிஸ்னியின் டோம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்களில் மனதைப் பறிகெடுக்காத மனிதர்களே இருக்கமுடியாது. குழந்தைகளின் களங்கமற்ற குறும்புகளையும் வன்முறையையும் நாச வேலைகளையும் அழிவையும் குரூர அழகுடன் செல்லும் படங்கள் பூனையும் எலியும் குறித்த அப்படங்கள். பூனைக்கும் எலிக்கும் மட்டுமல்ல, எலிக்கும் மனிதனுக்குமான போராட்டம் அல்லது யுத்தம் கூட காலம் கடந்து நிகழ்வது, அனாதி காலம் தொட்டு இனியும் தொடர்ந்து செல்வது.
மனிதனும் எலிகளும் எதிர்கொண்டே தீர வேண்டிய ஒரு இருத்தலியல் நெருக்கடி இது. ஹாலிவுட் படமான ‘மௌஸ் ஹன்ட்’ அல்லது எலி வேட்டை இதனால்தான் என்றும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. எலிக்கும் மனிதனுக்குமான சிறைவாழ்வுப் பதட்டம் பற்றிய அடூர் கோபாலகிருஷ்ணனின் சாகாவரம் பெற்ற ‘எலிப்பத்தாயம்’ இதனால்தான் உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. எலிகள் ஒரே சமயத்தில் எம்மிடம் குதூகலத்தையும், அறுவறுப்பையும், கிலியையும் உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் தமது அறைக்குள்ளாவது எலிவேட்டையை நடத்தியிருப்பவர்கள் இந்த மனநிலையைத் உணர முடியும்.
எலிகள் குறித்த இந்தச் சுவாரஷ்யம் சுபாஷிடம் முற்றிலும் வேறுவிதமான அனுபவத்துக்கு மடைமாற்றப் பட்டிருக்கிறது.
படம் துவங்கும்போது திரைமுழுக்கவும் தெரியும் இரும்பு முள்வேலியின் பின்புறம் சருகுகளும், பிளாஸ்டிக் பைகளும் மரக்கொப்புகளும் இரைந்துகிடக்கும் அகதிமக்களின் கூடாரங்களுக்கு வெளியில் குறுகுறுவென நம்மை ஈரக்கும் எலிகள், இறுதியில் பயங்கரமான நினைவுகளை, கையறுநிலையிலான மனநிலையை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விடுகிறது…
சுபாஷின் இந்த இரண்டு குறும்படங்களும் குறிப்பாக புகலிட தமிழ் சினிமா வரலாற்றிலும், பொதுவாக ஈழச் சினிமா வரலாற்றிலும் பல்வேறு விதங்களில் முக்கியமான குறும்படங்களாக இருக்கின்றன. 2009 மே 18 பேரழிவின் பின் வந்திருக்கும் குறும்படங்கள் மட்டுமல்ல, இரு படங்களில் ஒன்றான வன்னி எலிகள் குறும்படம் மே 18 பேரழிவுக்குப் பின்னான ஈழத் தமிழர் பாடுகளை முதன்முதலாகப் பதிவு செய்திருக்கிறது.
ஈழத் தமிழர்கள் பல்வேறு உலகக் குறும்பட விழாக்களை லண்டனிலும் கனடாவிலும் நடத்தி வந்தபோதிலும், ஈழத் தமிழர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்கா உலகத் திரைப்பட விழாவில் இப்படம் விருது பெற்றிருப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே பதிவுபெறத்தக்கது.
அருந்ததி, ஜீவன், புதியவன் போன்ற புகலிட தமிழ் சினிமா முன்னோடிகளுடனும், காலஞ்சென்ற ஈழ இயக்குனர் ஞானரதன் போன்ற மண்சார்ந்தவர்களுடனும் ஒப்பிடும் போது, சுபாஷ் இவர்களது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி எனச் சொல்லவேண்டும். ஈழத் தமிழர் பாடுகளையும் அடையாளத்தையும் ஞாபகம் கொள்ளும் வகையிலான அடுத்த தலைமுறைப் படைப்பாளி வரிசை, சுபாஷின் வழி, எதிர்கால ஈழத் தமிழர் திரைப்பட வெளியில் படைப்பு சார்ந்த நம்பிக்கை தரும் ஒரு சமிக்ஞையாகத் தோன்றியிருக்கிறது.