2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பதா? அல்லது நிராகரிப்பதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குறித்த வரவு செலவுத் திட்டத்தினை நிராகரிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் தனது அதிகார பலத்தைப் பிரயோகிக்கும் தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும், ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குமிடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பினையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு இரண்டு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் தொடர்பில் இரா.சம்பந்தனுடன் முரண்பட்டமை காரணமாக அவருக்கு இந்நிதி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தாம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லையென முடிவெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அபிவிருத்திக்கென இரண்டு கோடி ரூபா நிதி அவர்கள் அங்கம் வகிக்கும் மாவட்டச் செயலகங்களினூடாக அனுப்பிவைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
அபிவிருத்திக்காக இந்நிதி ஒதுக்கப்படுவதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், இந்நிதியானது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்டதேவைக்கேயன்றி, அபிவிருத்திக்கல்ல எனவும் தெரியவந்துள்ளது.
விதிவிலக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததுடன், இந்நிதியைப் பெற்றுக்கொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் ஆளுமைக்கு உட்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனால் பாதுகாக்கப்படும் தமிழ் சிங்கள அதிகார வர்க்கமும், இலங்கை அரசோடும் அதன் பேரினவாத அதிகார வர்க்கத்தோடும் வரலாறு முழுவதும் சமரசம் செய்வதையே தனது கடமையாகக் கொண்டு செயற்படுகின்றது. இன்று புதிய மக்கள் எழுச்சிக்கான அவசியத் தேவை ஒன்றும், வாக்குக் கட்சிகளை நிராகரித்து புதிய அரசியலை முன்வைக்கும் அவசியம் ஒன்றும் மக்களால் உணரப்படுகின்றன.