Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

15 மணி நேரமாக தொடரும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் இன்று மாலை சென்னை அருகில் கரையைக் கடப்பதால் கடந்த 15 மணி நேரமாக சென்னையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டதால் அதிலிருந்து பல்லாயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அத்தோடு மழை நீரும் சேர்ந்துள்ளது. பல கால்வாய்கள் பராமரிப்பு இன்றி  விடப்பட்டதால் சென்னை நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் ரியல் எஸ்டேட் என்னும் பெயரில் முறையான வெள்ள வடிகால் திட்டங்கள் அமைக்காமல் கட்டடங்கள் உருவாக்கப்பட்டதே இந்த மழை வெள்ளச் சேதத்திற்கு காரணம்.

தற்போது மரக்காணம் கூணிமேடு பகுதியில் காற்று வீச துவங்கி உள்ளது. சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் பிற இடங்களில் பதிவாகியுள்ள மழை மி.மீ அளவில்;-

* தாம்பரம் – 232.9

* சோழவரம் – 220.0

* எண்ணூர் – 205.0

* கும்மிடிப்பூண்டி- 184.0

* செங்குன்றம் -180.0

* மீனம்பாக்கம் -158.5

* விமான நிலையம் -116.0

சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள இந்த புள்ளிவிபரங்கள் இயல்பான மழைப்பொழிவை விட அதிக அளவைக் குறிக்கிறது.

Exit mobile version