Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

13 – ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசிக்கு அனுமதி!

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் கால்பதித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனிக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த மருந்திற்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதே போன்று இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்ஸின்’ என்ற தடுப்பூசிக்கும் இந்தியா  அவசர கால  அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அமெரிக்கா  ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்துகளுக்கு இந்தியாவில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த இரு தடுப்பூசிகளையும் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் பரிந்துரைத்திருந்த நிலையில், 13-ம் தேதி முதல் தடுப்பூசி  விநியோகம் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுக்க மத ரீதியான சர்ச்சைகள் இந்த தடுப்பூசிகள் தொடர்பாக பரவி விவாதங்களும் நடந்தன, பன்றியின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரவிய தகவலை அடுத்து அரபு நாடுகளிலும், மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பரவிய தகவலையடுத்து இந்தியாவிலும் மத ரீதியான எதிர்ப்புகள் உருவானது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை குறைபாடு  உருவாவதாக வதந்திகள் பரவின. மருத்துவ ரீதியாக இது எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இது போன்ற வதந்திகள் காட்டுத் தீ போல மக்களிடம் பரவின.

கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் அரசுக்கு இந்திய விலையில் ரூபாய் 219-292  ரூபாய்க்கு கொடுக்கும் என அறிவித்துள்ளது. கோடிக்கணக்கான டோஸேஜுகளை வாங்குவதால் மலிவு விலைக்குக் கொடுப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் இந்தியாவுக்கும், பின்னர் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் பின்னர் தனியார் சந்தைகளுக்கும் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது.

தடுப்பூசி தொடர்பாக பல வதந்திகள் பரவி வருவதால் மக்கள் இதனை போட்டுக் கொள்வதில் ஆர்வம் கட்டுவார்களா என்பது கேள்விக்குறிதான்.

Exit mobile version