Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

12 years a slave : ரதன்

MANDELA: LONG WALK TO FREEDOM28 வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் (Mirabel) விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கிய போது  காலை 10 மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்த போது மாலை 4 மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கிய போது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை என பேரூந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்த குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது 2 கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் எனது அரைகுறை ஆங்கிலத்தில் விலாசத்தை காட்டி வினவி மற்றொரு பேரூந்தில் ஏறிக் கொண்டேன். புதிய இடம், கடும் குளிர், புதிய மொழி நான் அணிந்திருந்த ஆடைகளோ உஸ்ணப் பிரதேசத்துக்குரிய உடைகள். அறிவித்தல் விளம்பரப் பலகைகளில் பெரிதாக பிரென்ச் மொழியே இடம் பெற்றிருந்தது.

எனக்குள் ஒரு ஏக்கம், தாகம், எதிர்பார்ப்பு என பலவகை உணர்வுகளுடன் பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எனக்கருகில் ஒரு வயோதிக கறுப்பினத் தம்பதிகள் அமாந்திருந்தனர். எனது உடையைப் பார்த்தவுடன் நான் ஊருக்கு புதிது என்பதை இலகுவாக கண்டு கொண்டார்கள். முதலில் ஆங்கிலத்திலேயே உரையாடலைத் தொடங்கினர். நான் இறங்கவேண்டிய இடம் வந்தபோது தங்களிடமிருந்த குளிருக்கு அணியும் நீல நிற தொப்பி ஒன்றை எனது தலையில் மாட்டி விட்டனர். என்ன நினைத்தார்களோ தெரியாது என்னுடன் இறங்கிவிட்டார்கள். நான் இடம் தவறிவந்துவிட்டேன் என்பதை நான் அறிய சில நிமிடங்கள் பிடித்து விட்டது. ஆனால் அவர்கள் எனக்கு முதலே அறிந்து ஒரு டாக்சி ஒன்றை பிடித்து என்னை எனது நண்பனின் முகவரியில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டர்கள். டாக்சி சாரதி ஒரு கிழக்கு ஐரோப்பியர். அவர்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார். நண்பன் அங்கில்லாவிட்டால் தங்களது முகவரியைக் கொடுத்து அங்கு அழைத்து வரவும் என சாரதிக்கு கூறினார்கள். அதன் பின்னர் கடந்த முப்பது வருடத்தில் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் எனக்களித்த குளிர்த் தொப்பி இன்றும் என்னிடமிருக்கின்றது. அவர்களது முகம் இப்பொழுதும் தெளிவாக எனது மனதில் பதிந்துள்ளது.

கால ஓட்டத்தில் பல கறுப்பினத்தவர்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். பலர் என்னுடன் வேலை பார்த்தார்கள். பெரும்பாலான தடவைகள் நானும் அவர்களில் ஒருவன் என்பதை வெள்ளை இனத்தவர்கள் நினைவு படுத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு மற்றுமொரு பட்டப் பெயரும் உண்டு. அது “பாக்கி”. இவ்வாறு அழைத்தவர்களுக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பகை உணர்வு தெரியாது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித் தொடர்பெதுவும் இல்லை என்பதும் தெரியாது. ஆனாலும் தென்கிழக்காசியர்கள் அனைவரையும் அப் பெயரிலேயே அழைத்தனர். காலப்போக்கில் ரொரண்ரோவில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிக்க இவ்வாறான பட்டப் பெயரழைப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நாங்கள் இப்பொழுதும் எங்களுக்குள் சீனர்களை “சப்பட்டைகள்” என அன்புடன் அழைக்கின்றோம். இதற்கு சீனர்களின் மூக்கு தட்டையானது என்பது உயிரியல் விளக்கம் வேறு. இதை விட மற்றொரு காரணத்தையும் கூறுவதுண்டு.

சில வருடங்களுக்கு முன்னர் ஒகாயோ மாநிலத்தின்; தலைநகரான கொலம்பசில் உள்ள அரும்பொருட் காட்சியகத்தில் கறுப்பினத்தவர்கள் பற்றிய காட்சியறையில் வீடொன்றில் கறுப்பின பெண்கள் மேலாடையின்றியிருப்பது பற்றி ஒரு பத்து வயது வெள்ளை இனச் சிறுவன் தனது தந்தையிடம் வினவினான். அதற்குத் தந்தை “அவர்கள் அப்போது நாகரீகமற்றிருந்தார்கள். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்கள்” என பதிலளிக்கின்றார். இது தான் இன்றைய அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பற்றிய கருத்தியலாக சிறார்கள் மத்தியில் படிந்துள்ளது.

இவ் வருடம் ரொரண்ரோ சர்வதேசத் திரைப்படவிழாவில் 12 years A slave என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சில அடிமைகள் பற்றிய படங்களை பார்த்துள்ளேன். மிகக் குறிப்பாக ஸ்ரீபன் ஸ்பில்பேர்க்கின் (Steven Spielberg ) Amistad என்ற படம் அடிமை வியாபாரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான Sierra Leone நெ ல் இருந்து அடிமைகள் கியுபாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். La Amistad கப்பலில் பயணிக்கும் இவர்கள் ஆறு வாரங்களின் பின்னர் குடி, நீர் போதிய உணவின்றி அவதிப்படுகின்றார்கள். கரையொன்று தென்படுகின்றது. அப்பொழுது இக் கப்பலை அமெரிக்க இராணுவக கப்பல் கைப்பற்றி கரைக்கு கொண்டு செல்கின்றது. அதன் பின்னர் இவ் அடிமைகள் எவ்வாறு கொடூரமாக நடாத்தப்படுகின்றார்கள் என்பதைனையே இப் படம் பதிவு செய்துள்ளது. இவர்களை பொருட்களாகவே கருதினார்கள்.. அப்போதைய ஸ்பானிய அரசி இரண்டாம் ஸ்பெல்லா அமெரிக்க ஜனாதிபதியிடம் (Martin Van Buren ) கப்பலுக்கும் அடிமைகளின் சந்தை விலைக்கும் )market value of the slaves) நட்ட ஈடு கோரியிருந்தார். இப் படத்தை மீண்டும் பார்த்த போது இலங்கைப் போரால் அகதியாக பல நாடுகளுக்கு கப்பலில் செல்லும் தமிழர்கள் நினைவுக்கு வந்தார்கள். இவர்களும் பல் வேறு நாட்டு அரசுகளால் மிக மோசமாகவே நடாத்தப்படுகின்றார்கள்.

1800களின் ஆரம்பத்தில் இளம் வயது (20) ஆரோக்கியமான இளைஞனின் விலை 333இல் இருந்து 500 டொலர்களாக இருந்தது. இது பின்னர் 1849ல் 700-800 டொலர்கள் வரை உயர்ந்திருந்தது. பெண்களுக்கும், தொழிற்திறன் உள்ளோருக்கும், சிறுவர்களுக்கும் என தனித் தனி விலைகள் இருந்தன. இவ் அடிமை வியாபாரம் அன்று அமெரிக்காவில் முக்கிய வியாபாரமாக திகழ்ந்ததுஅடிமை வாழ்வை பதிவு செய்த வேறு சில படங்கள் இவை. Beloved (1998) Manderlay (2005) Django Unchained (2012) Tula (2013) Mandingo (1975) ,Sankofa (1993) ,Glory (1989) இவற்றுடன் கடந்த வருடம் வெளியான லிங்கனையும் உள்ளடக்கலாம்.

இவ் வரிசையில் வெளிவந்துள்ள மற்றொரு படமே 12 Years A Slave. இப் படம் உலகின் மிக முக்கிய திரைப்பட விழாக்கள் வரிசையில் உள்ள ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் மக்கள் தேர்வு சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. இவ் விருதைப் பெற்ற The King’s Speech, Slumdog Millionaire ஆகிய படங்கள் ஒஸ்காரின் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றன. எனவே இப் படமும் ஒஸ்காரின் சிறந்த பட விருதைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Solomon Northup ன் 12 Years A Slave என்ற வாழ்க்கை வரலாறே இப் படம். சொலமனின் சுயசரிதத்தை இவர் கூற எழுதியவர் Glen Falls – நியுயோர்க்கைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்ற வெள்ளை இன வழக்கறிஞர். இதனால் இதன் உள்ளடக்கம் பற்றிய விமர்சகர்களின் கருத்துக்கள் இதன் நம்பகத்தன்மையை ஏற்றுக் கொண்டபோதும் முற்று முழுதாக சொலமனின் கருத்துக்கள் பிரதிபலிக்கப்படவில்லை என கருதுகின்றன. இச் சுயசரிதம் ஏற்கனவே 1984ல் Solomon Northup’s Odyssey என்ற பெயரில் திரைப் படமாக வெளிவந்தது. இதனை இயக்கியவர் Gordon Parks இதில் சொலமான நடித்திருப்பவர் Avery Brooks. இப் படம் மிகப் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.

இம் முறை இப் படத்தை இயக்கியிருப்பவர்Steve McQueen. இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். அடிமைகளைப் பற்றிய படங்களில் பெரும்பாலானவற்றை வெள்ளை இன இயக்குனர்களே இயக்கியுள்ளார்கள். விதிவிலக்காக 12 Years A Slave சுயசரிதத்தின் இரு படங்களையும் கறுப்பின இயக்குனர்களே இயக்கியுள்ளார்கள்.

1619ல் முதல் கறுப்பின அடிமை அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டார். 188 வருடங்களின் பின்னரே அமெரிக்கா அடிமைகளை இறக்குமதி செய்வதை தடைசெய்தது. முதல் அடிமை வந்து 246 வருடங்களின் பின்னர் 1865ல் அடிமை முறை ஒளிப்பு சட்டமாக்கப்பட்டது. 1868ல் முன்னால் அடிமைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. சுமார் 250 வருடங்கள் கறுப்பின அடிமைகள் பல்வேறு சித்திரவதைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த வரலாற்றின் ஒரு சிறு கல்லே 12வருட அடிமை என்ற இப் படம்.

சொலமன் நோத்யப் 1808ல் ஒரு சுதந்திர பிரசையாகவே அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு முன்னால் அடிமை. இளம் வயதில் தந்தைக்கு உதவியாக தோட்டங்களில் வேலை பார்த்தார். 1829 கிறிஸ்மஸ் அன்று அனி ஹம்படனை திருமணம் செய்து கொண்;டார். அனி ஹம்படன் கறுப்பு, வெள்ளை, ப+ர்விக இந்தியக் கலப்பைக் கொண்டிருந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர் பின்னாளில் சிறந்த பிடில் இசைக் கருவி வாசிக்கக் கூடியவராக தேர்ச்சி பெற்றிருந்தார். (திரைப்படத்தில் வயலின் வாசிப்பவராக காட்டப்படுகின்றார்) 1841ல் இருவர் இவருக்கு வோசிங்கடனில் உள்ள இசைக் குழுவில் கலைஞராக இருப்பதற்கு அதிக பணம் கொடுப்பதாக கூறி வோசிங்டன் அழைத்துச் செல்கின்றனர்.

அங்கு இவரை அடிமையாக விற்றுவிடுகின்றனர். அதன் பின்னர் ஒரு ஏலத்தில் நியு ஒர்லன்ஸ்ல் உள்ள ஒரு முதலாளி இவரை வாங்குகின்றார். இதன் பின்னர் பல முதலாளிகளிடம் இவர் வேலை செய்கின்றார். இக் காலகட்டத்தில் இங்கு வேலைக்கு வரும் ஒரு வெள்ளை இன கனடியர் இவரது இருப்பையும் இடத்தையும் இவரது குடும்பத்துக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துகின்றார். இதன் பின்னர் அதிகாரிகள் இவரை மீட்கின்றனர். இவர் தன்னை கடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இவரால் வெற்றி பெற முடியவில்லை. இவர் 1863ல் இறந்ததாக நம்பப்படுகின்றது. இப் படம் இவர் கடத்தப்பட்டதில் இருந்து விடுதலையடைந்தவரையிலான காலகட்டத்தை பதிவு செய்துள்ளது. இக் காலகட்டத்தில் இவருடன் இருந்த அடிமைகளை முதலாளிகள் செய்த சித்திரவதைகளை வலியுடன் வெளிப்படுத்தியுள்ளது. தாயிடமிருந்து பிள்ளையைப் பறித்து வேறு முதலாளிகளுக்கு விற்றல், பெண்களுடன் வன்புணர்வு கொள்ளல், கயிற்றில் கட்டி தூக்கிலிடுதல் போன்ற பயங்கரங்;களையும் பதிவு செய்துள்ளது. சக அடிமையாக இருந்த பெண் தப்பி ஓட முயற்சித்தாக கூறி அப் பெண்ணை நிர்வாணமாக்கி சவுக்கால் அடிக்கச் சொல்வார் முதலாளியம்மா.

அப் பெண் நிர்வாணமாக்கப்பட்டு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அப் பெண் மீது சவுக்கால் அடிக்குமாறு சொலமன் பணிக்கப்படுகின்றார். என்ன செய்வது? அடிக்கத்தானே செய்ய வேண்டும்.; சொலமனுக்கு ஒரு தடவை தண்டனை வழங்கப்பட்டு மரத்தில் கட்டி தூக்கப்படுகின்றார். கால்கள் நிலத்தை தொடாவிட்டால் உயிர் போய்விடும். அந் நிலையில் இப் பெண் சொலமனுக்கு தண்ணீர் வழங்குகின்றார். அதே பெண்ணை சொலமனே அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். சொலமன் வேலை செய்த இடங்களில் தனது திறமையால் முதலாளிகளுக்கு லாபம் அதிகமாகவும் வழிவகைகள் செய்துள்ளார். பருத்தித் தோட்;டங்களில் வேலை செய்த காலங்களில் கடுமையாக வேலை வாங்கப்பட்டார்.

இப் படத்தை இயக்கிய Steve McQueen இதற்கு முன்பு 2008ல் ; Hunger படத்தை இயக்கியுள்ளார். இது வட அயர்லாந்தில் உண்ணாவிரதமிருந்து இறந்த Bobby Sands ன் போராட்டத்தை மையமாகக் கொண்டது. அரசியல் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்துவதில் திறமை கொண்ட இவரின் திரைமொழி இப் படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் மூன்று வேறு நிலைகளில் அடிமை வாழ்வியலை வெளிப்படுத்தியுள்ளார். முதலாவது அடிமை வாழ்வின் துன்பியல். இங்கு முதலாளிகளின் அக மனப் பிறழ்வை ஒரு மனநோய்க்கு ஒப்பானதாக வெனிப்படுத்துகின்றார். இரண்டாவது அடிமைகளாக வாழ்வும் கறுப்பினத்தவரின் இயல்பான மனோநிலை அன்றாட அக புறத் தேவைகள் அதனை அவர்கள் எவ்வாறு ப+ர்த்தி செய்தார்கள் என்பதனை பதிவு செய்து;ள்ளார். மூன்றாவது புறம் சார்ந்தது. சமூகம், அரசு, மதம் அடிமைத்தனத்தின் மீது கொண்டுள்ள கருத்தியல் மீதான தனது கருத்தை முன் வைக்கின்றார்.

முதல் இரண்டு நிலைகளையும் பின்வரும் காட்சிகளுக் கூடாக விளங்கிக் கொள்ளலாம். நூலாசிரியரின் நோக்கம் அடிமை ஒழிப்பு. இதனை கருத்தில் கொண்டு அடிமைகளின் நாளாந்த வாழ்வியலில் அவர்கள் சந்திக்கும் இயல்பான உள்மன உழைச்சல்களையும் தேவைகளையும் கூட அழகாக இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார். சொலமன் அடிமையாக்கபட்ட ஆரம்ப நாட்களில் பல அடிமைகளுடன் இரவில் தூங்குகின்றார். அப்பொழுது இவருக்கு அருகில் உறங்கும் பெண் இவருடன் உறவு கொள்கின்றாள். இவ் விடத்தில் இப் பெண்ணின் முகம் காட்டப்படவில்லை. உடல் அசைவுகள் மூலமே இயக்குனர் காட்சியை பதிவு செய்கின்றார். அடிமையாக இருந்த போதும் தனது உடலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளாள் என இயக்குனர் இக் காட்சிக்கான விளக்கத்தை நியு யோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கான பேட்டியில் கூறுகின்றார்.

புணர்ந்து முடிந்தவுடன் வழமையான தனது நரக வாழ்வை நினைத்து அழுகின்றாள். சொலமனுக்கும் இரு பெண்களுடன் இக் காலகட்டத்தில் உறவுகள் ஏற்படுகின்றன. அடிமையாக வாழ்வோரின் அக வாழ்வியலையும் இங்கு இயக்குனர் வெளிப்படுத்தத் தவறவில்லை. (ஹரிசன் ஆன் ஜேக்கப் எழுதிய Incidents in the Life of a Slave Girl” நூல் பெண்களின் அவலங்களை வலிகளை கூறுகின்றது.)

அநேகமான ஹொலிவட் படங்களில் கறுப்பின ஆண்களை முரட்டுத் தனம் நிறைந்தவர்களாக காட்டப்படுவார்கள்;. இப் படத்தில் சொலமன் ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தையாக கணவனாக அறிமுகப்படுத்தப்படுகின்றார். பின்னரும் இவர் ஒரு இரக்கமுள்ள, உணர்ச்சியான, துணிச்சலான மனிதனாக காட்டப்படுகின்றார். சொலமான இயல்பாக Chiwetel Ejiofor நடித்துள்ளார்.
இப் படத்தில் வரும் ஒவ்வொரு அடிமைப் பாத்திரங்களும் தனித் தன்மை கொண்டவையாக உள்ளன. இது கறுப்பின மக்களின் ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது. படத்தில் ஒரு சில இரக்கமுள்ள முதலாளிகளும் காட்டப்பட்ட போதும், அடிமைகள் கொடுமைப் படுத்தப்படும் பொழுது அங்கு நிற்கும் வெள்ளை இனத்தவர் அக் காட்சிகளை இரசிப்பவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் வெளிப்படுத்தப்படுகின்றனர்.

மூன்றாவது நிலை இயக்குனரின் விமர்சனமாகவே வெளிப்படுகின்றது. இதே காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு வட அமெரிக்காவின் எல்லைப் புறங்களை நோக்கி தள்ளப்பட்ட முதன்மைக் குடிகளும், ப+ர்விக மக்களுமான செவ்விந்தியர் இப் படத்தில் ஒரு காட்சியில் வருகின்றனர்.. ஒரு காட்சியில் கறுப்பின அடிமைகளுடன் செவ்விந்தியர் நடனமாடுகின்றனர். அக் காட்சியே அவர்களும் கறுப்பினத்தவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்;பதனை வெளிப்படுத்துகின்றது. அரசு கறுப்பினத்தவரையும் செவ்விந்தியரையும் அடிமைப் படுத்தியே வைத்துள்ளது. அரசு அடிமைகளுக்கெதிராகவே இக் காலகட்டத்தில் இயங்கிவந்துள்ளது. அடிமைகளை வைத்திருந்தோர் மீது அரசு எவ்வித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. கிறிஸ்தவ மதத்துக்கும் முதலாளித்துவத்துக்குமான நெருக்கத்தையும் இப் படம் வெளிப்படுத்தியுள்ளது. இதனை பொதுவாக மதத்துக்கும் அடிமைத்தனத்துக்குமான நெருக்கமாகவே பார்க்க வேண்டும். இத் திரைப்படம் கடும் கோடை காலத்தில் படமாக்கப்பட்ட போதும் பெரும்பாலும் ஒளி குறைந்தே காணப்படுகின்றது. இயக்குனரின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவே இது வெளிப்படுகின்றது. அவரின் ஒரு விமர்சனமாகவும் ஒளிக்கின்றது. பெரும்பாலான கறுப்பின அடிமை பற்றிய படங்களில் ஒரு வெள்ளை இனத்தவரே வந்து கறுப்பினத்தவர்களை காப்பாற்றுவார். இப் படம் உண்மை சுயசரிதத்தை மையமாகக் கொண்டிருந்த போதிலும் இங்கும் அதுவே வெளிப்படுகின்றது.

இப் படம் இக் காலகட்டத்தில் மிக முக்கியமான படம். அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பினத்தவர் இருக்கின்ற போதும் இன்றும் கூட கறுப்பின மக்கள் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர். சிறைகளில் உள்ளோரில் 60 வீதமானோர் கறுப்பின மக்கள். அண்மைக் காலங்களில் கறுப்பின மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்றைய அமெரிக்காவை கட்டியெழுப்பியவர்களில் கறுப்பின மக்களின் பங்கு கணிசமானது. மீண்டும் ஒரு தடவை தாங்கள் வந்த பாதையை மீளப் பார்த்து மீண்டும் புத்துயிர்ச்சி பெற வேண்டும். இளம் சந்ததியினருக்கு இது ஒரு பாடமாகவும் அமையும். திரையரங்கில் எனக்கருகில் இருந்த வெள்ளை இனத்தவர்கள் சித்திரவதைக் காட்சிகளின் போது காணச்சகிக்காது கீழே பார்த்தவண்ணமிருந்தனர்.

ஆமேனியர்களை படுகொலை செய்த துருக்கியர் இன்று வரை ஆமேனியர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. இலங்கை அரசு தமிழ் மக்களிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. அமெரிக்கா ஒன்று மட்டும் செய்யும் ஒஸ்காரில் பல விருதுகளைக் கொடுக்கும்.

  1.  வலி நிறைந்த இவ் வரலாற்றை நாம் அனைவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் ஒரு தடவை பார்க்கவேண்டும்.

மார்கழி மாத காலச்சுவடு இதழில் வெளிவந்த இக் கட்டுரை சில மாற்றங்களுடன் இங்கு பிரசுரமாகின்றது.

Exit mobile version