இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தியும் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற வாலிபர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனியைச் சேர்ந்தவர் ஜோதி என்ற தமிழ்வேந்தன் (28). இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற ஒன்றை வயது மகனும் உள்ளனர். கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார்.
ஈழத் தமிழர்களிடம் மிகுந்த பற்று கொண்டவராக இருந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார். இந்த போராட்டத்தினால் உந்தப்பட்ட அவர், இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம். இந்த நிலையில் அவர் தீக்குளிப்பதற்காக நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணை கேனுடன் கடலூர் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு உடலில் தீ வைத்துக்கொண்டார்.
உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
தீக்குளித்த ஜோதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்பட அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஈழத் தமிழர்களுக்காக சென்னையை சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னையை சேர்ந்த அமரேசன், இலங்கை தமிழர்கள் ராஜா, முருகதாசன் ஆகியோர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளனர். தற்போது கடலூரை சேர்ந்த தமிழ்வேந்தன் மரணம் அடைந்துள்ளார்.