Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹெரால்ட் பின்ட்டர் அறிமுகம்:யமுனா ராஜேந்திரன்.

 இரண்டுவிதமான மௌனங்கள் இருக்கிறது ஒன்று, எங்கே வார்த்தைகள் பேசப்படவில்லையோ அந்த இடம். பிறிதொரு இடம், உக்கிரமான மழை போலும் வேகத்துடன் மொழி பாவிக்கப்படும் இடம். நிஜமான அமைதி கவிகிறபோது, அப்போதும் நாம் எதிரொலிகளோடு விடப்படுகிறோம், அது முழு அம்மணத்திற்கும் அருகிலானது.

ஹெரால்ட் பின்ட்டர்

கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் மரணத்தின்போது 78 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இலண்டனுக்கு வெளியில் கிராம்வெல் எனும் இடத்தில் பிற சிறுவர்களோடு மூன்று ஆண்டுகள் அவர் வாழ நேர்ந்தது. குடும்பத்திலிருந்த பிரிந்து வாழ நேர்ந்த அந்த சிறுபிள்ளைப் பருவமும் குண்டுவீச்சின் சத்தமும் தன்னால் மறக்கவியலாதவை என்கிறார் பின்ட்டர்.

பின்ட்டர் நாடகமும் நடிப்பும் பயின்றார். பயிலும் போதே அடங்கமறுத்தமைக்காகக் கல்லூரி ஒழுக்கநடவடிக்கைக்கு ஆளானார் பின்ட்டர். பிரித்தானியப் படையில் சேர மறுத்தமைக்காக வழக்குமன்றத்தில் அபராதத் தொகையைக் கட்டியவராகவும், என்றும் போரை வெறுத்தவராகவுமே அவர் இருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலுமான சிந்தனயாளர்கள் போலவே பின்டரும் யூதவழித் தோன்றல் என்பதும் நாவலாசிரியான அன்டோனியோ பிரேசர் இவரது துணiவியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்ட்டர் சமீப ஆண்டுகளாக கான்ஸர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டதாகவும், ஒரு நிமிடம் ‘நான் மரணத்தின் பிடியிலும் மறுநிமிடம் நான் வாழ்வின் மடியிலும் இருந்தேன்’ எனவும் இது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்தில் தனக்குக் கௌரவமளிக்க நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை, டப்ளின் நகரத்துப் பிளாட்பாரத்தில் விழுந்து தனது முகத்தை உடைத்துக் கொண்டார் அவர். நோயினால் உடல் தளர்வுற்ற நிலையில் அவருக்குக் கிடைத்த நோபல் விருது அவரது படைப்பு வாழ்வில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதில் எவருக்கும் முரண்பாடிருக்க நியாயமில்லை.

தான் முழு நேரமும் அரசியலில் ஈடுபாடு காட்டப்போவதாகவும், தான் நாடகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டதாகவும்;; 2004 ஆம் ஆண்டிலேயே பின்ட்டர் அறிவித்துவிட்டார். இருப்பினும்; 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், இறுதியாகத் தனது ஆதர்ஷ நாடகாசிரியான சாமுவேல் பெக்கட்டின் நாடகமொன்றில் நடிப்பதற்;கு இணங்கியிருந்தார் அவர்.

கலைஞன் சகலவிதமான ஒடுக்குமறைகளுக்கும் எதிரானவன், சகல சுதந்திரங்களுக்கும் விடுதலைக்குமாக நிற்பவன் என்பதற்கான நம் காலத்தின் சாட்சியமாக இருப்பவர் ஹெரால்ட் பின்ட்டர். இத்தகைய கலைஞன் இன்று அருகிவரும் ஒரு இனஜீவி. இத்தாலிய மார்க்சியரும் அனார்க்கிஸ்ட்டு நாடகாசிரியரும் ஆன டோரியோபோவுக்கு அடுத்து நோபல் பரிசு பெற்றிருக்கும் நாடகக் கலைஞனான பின்ட்டர் அவரது மனித உரிமை அரசியலுக்காகவும் அவற்றை உரத்துப் பேசிய அவரது படைப்புகளுக்காகவுமே நோபல் விருதினைப் பெற்றிருக்கிறார்.

2005 அக்டோபர் 14 வெள்ளிக் கிழமை, பிரித்தானிய நாடகாசிரியரும் கவிஞருமான ஹெரால்ட் பின்ட்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட அதே நாளில், பிரித்தானியாவின் இரும்புத் தலைவி எனப் பழமைவாதிகளால் அழைக்கப் பெறும் தாட்சர் அம்;மையாருக்கு 80 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலாச்சார பாசிஸ்ட்டான தாட்சருக்கு மாறாக பின்ட்டரின் நோபல் பரிசு அன்றைய தொலைக் காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் முகப்பு இடத்தைப் பிடித்துக் கொண்டது, குறியீட்டளவில் கலாச்சாரவாதிகளுக்கு எதிர்கால உலகின் தார்மீகம் குறித்து நம்பிக்கை தருவதாகவே இருந்தது.

தனது படைப்புக்களையும் அரசியலையும் பிரிக்க முடியாது எனக் குறிப்பிடும் பின்ட்டரின் நாட்கங்களில் ஆரம்ப நாட்களில் பாலுறவு அதிகாரத்திற்கு எதிரான குரல் ஒலித்ததெனவும், பிற்பாடான அவரது நாடகங்களில் அரசியல் அதிகாரத்தின் வக்கிரத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது எனவும் குறிப்பிடுகிறார் அவரது வாழக்கை வரலாற்றாசிரியரும் பின்டரின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் பிலிங்டன்.

முனனாள் நோபல் பரிசாளரான சாமுவேல் பெக்கட்டின் ஆதர்சத்தில் தான் நாடகம் எழுதப் புகுந்ததாகக் குறிப்பிடுகிறார் ஹெரால்ட் பின்ட்டர். பின்ட்டரது பிரவேசம் பிரித்தானிய நாடகமேடையை என்றென்றும் மாற்றியமைத்தது என எழுதுகிறார் மைக்கேல் பிலிங்டன். பின்ட்டரது பாணி, ‘பின்டர்ஸ்க்கு’ எனும் ஒரு சொல்லையே ஆங்கில அகராதிக்கு வழங்கியிருக்கிறது. தத்தமது பிடிக்குள் எதிராளியை வைத்திருக்கும் இரண்டு பாத்தி;ரங்கள். ஒருவர் பேசும் போது பிறரைப் பேச இயலாது மௌனத்திற்குத் தள்ளும் கொடுமையான உளவியல் தன்மை வாய்ந்த வசனங்கள். பிற பாத்திரத்தின் மௌனத்தில் விளையும், ‘மௌன இடைவெளியில்’ பரவும் அர்த்தங்கள் என்பதாக விரிவதுதான் பின்ட்டரின் நாடகபாணி.

அரசியல் ரீதியில் பாசிசத்திற்கும் பாலுறவுக்கும் இருக்கும் உறவை சதா துருவித் தீர்ப்பதாகவே பின்ட்டரது பெரும்பாலான நாடகங்கள் அமைகின்றன என்கிறார் மைக்கேல் பிலிங்டன்.

வெளியெனும் அளவில் ஒரு தனித்த அறையும் ஒவ்வொரு தனிமனிதனும் சதா பதட்டத்திலும் பயத்திலும் பாதுகாப்பின்மையிலும்தான் விட்டுவைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறார் பின்ட்டர். இரண்டு வெளிகளுமே பயங்கரத்தையும் பிறமனிதரின் அத்துமீறலுக்கான சாத்தியத்தையும் கொண்டிருப்பதாகப் பின்ட்டர் கருதுகிறார்.

அறைக்குள் நுழையும் மனிதனும் இன்னொரு மனிதனின் அகத்துள் நுழையும் -மொழிவழியிலோ அல்லது சிந்தனை வகையிலோ நுழையும் மனிதன் – எப்போதுமே வன்முறையையே கொண்டு வருகிறான் என்கிறார் பின்ட்டர்.

ஆண் பெண் பாலுறவு அதிகாரச் சமன்பாடு குறித்த அவரது முன்னைய நாடகங்களிலும், அரசியல் வன்முறையும் மேலாதிக்கமும் குறித்த அவரது பின்னைய நாடகங்களிலும் ‘அறை எனும் வெளி’ ஒரு முக்கியமான உயிரியாக இடம் பெறுகிறது. வன்முறையின் சாட்சியமாக, அத்துமீறலின் சாட்சியமாக அதற்கு எதிரான ஒடுக்கப்படும் மனிதரின் மௌன நம்பிக்கையின் சாட்சியமாக ‘அறை’ என்பது இருக்கிறது.

பின்ட்டரது ‘சிறை எனும் அறை’ சதா விளையும் பயங்கரத்தை, பார்வையாளரின் சிந்தைக்குள் ஆழ்மனதினில் இருத்தி விடுகிறது. சுற்றிலும் இருக்கும் அரசு, அமைப்புகள் போன்ற பயங்கரத்தினுள் பார்வையாளன் இதனால் ஆழ்த்தப்பட்டு விடுகிறான்.

மனிதர்கள் மீதான அவமானப்படுத்தலுக்கும் ஆதிக்கத்திற்கும் பாலுறவு அதிகாரம் ஓரு முக்கியமான காரணியாக பின்ட்டரது நாடகங்களில் இயங்குகிறது.

பாசிசத்தை நேரடியாகவே சில நாடகங்கள் கதைக் கருவாக எடுத்துக் கொண்ட போதிலும், சமகால அரசியலினதும் பாசிசத் தன்மைகளை, குறிப்பாகப் பிசாசு எனப் பின்ட்டர் குறிப்பிடும் அமெரிக்க மேலான்மை அரசியல் அமைப்பிலும், தேசிய அரசு பிற சிறபான்மையினர் மீது திணிக்கும் அதிகார அமைப்பிலும் காண்கிறார் பின்ட்டர்.

பின்ட்டரது நாடகங்களில் அதிகமும் இடம்பெறும் பாலுறவு வசவுகளையும் மட்டுமிறீய சொற்களின் வன்முறையையும், சொற்களின் இடைவெளியில் மௌனம் அழைக்கும் உடலின் அத்துமீறலையும் இந்தப் பிண்ணனியில் ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்;.

ஹெரால்ட் பின்ட்டர் நம் காலத்தின் கோபக்காரக் கலைஞன். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷைக் கொலைகாரன் என அழைக்க அவரால்தான் முடியும். பிரித்தானியப் பிரதமரை அவர் முட்டாள் எனவும் சாடியிருக்கிறார். நோபல் பரிசு பெற்றதற்காக பிரித்தானியப் பிரதமரிடமிருந்து தான் மலர்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக ஏளனமாக அவர் குறிப்பிட்டார்.

பழமைவாதக் கட்சியின் பிரதமர் ஜோன் மேஜரது காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட அரசியாரின் விருதை மறுதலித்தவர் பின்ட்டர். ஈராக்கில் பாரிய அழிவு ஆயுதங்கள் இல்லை எனவும், ஈராக் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா பொய் சொல்கிறது எனவும் வெளிப்படையாக அறிவித்த சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சூழலில், ஈராக் யுத்தத்திற்கு எதிராகக் கடுமையாக் குரல்தந்த பின்ட்டருக்கு இலக்கியதிற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது மிகப் பொருத்தமானதாகும். அதனால்தான் அமெரிக்க எதிர்ப்புக்காகவே பின்ட்டருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது என அங்கலாய்த்திருக்கிறார் அமெரிக்க வலதுசாரி எழுத்தாளரான கிறிஸ்தோபர் கிச்சின்ஸ்.

தனது படைப்புக்களுக்காக மட்டுமல்ல தற்போதைய தனது யுத்த எதிர்ப்பு அரசியலுக்காவும்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் பின்ட்டர்.

பின்ட்டர் நாடகாசிரியர் மட்டுமல்ல, அவர் முதலாவதாகக் கவிஞர். தனது முதல் காதல், கவிதைதான் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

பின்ட்டர் ஆரம்ப காலத்தில் கவிதைகளிலேயே நாட்டம் கொண்டிருந்தார். அவரது கவிதைகள் பழம்பெரும் இலக்கியப் பத்திரிக்கையான ‘இலண்டன் மேகசின்’ இதழ்களில் வெளியாகின. இனம் தெரியாத மனச் சிக்கல்கள், பொறாமை, பாலுறவு நாட்டம், வன்முறை, தனிமை, பிசாசகள், கடவுள் போன்றவை குறித்தனவாகவே அவரது கவிதைகளும் அவரது நாடகங்களும் இருக்கின்றன. அவரது ஆரம்பக் கவிதைகளில் இடம் பெறும் தனிமை அவரது பிற்காலக் கவிதைகளில் மரணத்தின் அவலமும் தனிமையின் பயங்கரமுமாக ஆகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் அனைத்துமே போரில் மரணம் குறித்ததாகவும், எதேச்சாதிகார அரசுகளின் நிறுவனங்களின் கீழ் உடலின் துயரம் குறித்ததாகவும, அவரைப் புற்று நோய் தாக்கிய பின் தனது மரணமும் உடலின் அழிவும் பற்றியதாகவுமே இருப்பதைக் காணமுடிகிறது. மரணத்தின் ஓலமும் இருளின் பயங்கரமும் அவரது கவிதைகளில் சதா நம்மை கலவரப்புடுத்துவதாக இருக்கிறது. அவரது கவிதைகள் போலவே அவரது நாடகங்களும் நேரடித்தன்மையும் வன்மமான உரையாடல் பண்பும் கொண்டதாகவே அமைகிறது.

அவரது ‘மலை மொழி’ நாடகம், முதன்முதலாக 1988 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் புத்தக உருவில் வெளியானது. 1989 ஆம் ஆண்டு அதனது முதல் மேடையேற்றத்தினை ‘ஜூன் 20’ எனும் இடதுசாரி குர்திஸ் விடுதலை ஆதரவாளர்கள் நிகழ்த்தினர். பின்ட்டரே இந்த நாடகத்தின் முதல் மேடையேற்றத்தை நெறிப்படுத்தினார.

நாடகத்தின் ஒத்திகை நடந்துகொண்டிருந்த மண்டபத்தைச் சுற்றிலும் பிரித்தானிய அதிரடிப் படையினர் மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமிட்ட நிலையில் நாடகத்தின் ஒத்திகை நடந்ததாக அன்று அதனது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை பிரித்தானிய நாடக வட்டாரங்களில் ஒரு பிரசித்தமான செய்தி.

மலை மொழி எழுதப்பட்ட காலத்தில் பின்ட்டர் குர்திஸ் மக்கள் விடுதலைக்காக மனித உரிமை அரங்குகளில் உரத்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார்.

துருக்கியில் குர்திஸ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாகச் சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லைலா ஜானா எனும் இளம் பெண் பாராளுமன்றத்தில் தனது தாய்மொழியான குர்திஸ் மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம் அப்போது துருக்கியில் குர்திஸ் மொழி தடை செய்யப்பட்டிருந்ததுதான். குர்திஸ் பிரதேசங்களில் கூட குர்திஸ் மக்கள் தமது சொந்த மொழியில் பேசமுடியாத ஒரு சூழல் அன்று நிலவியது.

மலை மொழி நாடகம் உடனடியாகக் குர்திஸ் மக்களின் ஒடுக்குமுறை சார்ந்ததாகத் தோன்றினாலும், நாடகம் எழுப்பும் அனுபவம் இந்த ஒடுக்குமுறையை இனம், மதம், சாதி என நிகழும் ஒடுக்குமுறையினோடும், தமது நம்பிக்கைகள், கலாச்சாரம் சார்ந்த ஒடுக்குமுறையினோடும் வைத்து ஒருவர் அனுபவம் கொள்ள முடியும்.

அடையாளமற்ற நாட்டிலும், குறிப்பான இடமற்ற சிறையிலும், குறிப்பிட்ட காலமற்ற காலத்திலும் நிகழும் இந்த நாடகத்தினை ஒருவர் தத்தமது பிரதேசத்தின் குறிப்பிட்ட ஒடுக்குமுறை சார்ந்த அனுபவமாக உணர்ந்துகொள்ள முடியும். இந்த நாடகம் தற்போது குண்டானமோ சிறையிலும் நடந்து கொண்டிருக்கும் நாடகம்தான். எந்தச் சிறுபான்மையினச் சமூகமும் ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட திட்டமுள்ள நாட்டிலும் எதிர்கொள்ளும் அனுபவம்தான் பின்ட்டரது மலைமொழி எழுப்பும் அனுபவம். இந்த வகையிலேயே பின்ட்டரது மலைமொழி நாடகம் பிரபஞ்சத்தன்மையை எய்துகிறது.

மலை மொழி நாடகத்தை அமெரிக்காவில் மீள நிகழ்த்திய இயக்குனரான கேரி பெர்லோபின் அனுபவத்தை இங்கு சுட்டுவது பின்ட்டரது நாடகம் மற்ற பிரதேசங்களுக்குப் பெயர்க்கப்படும் போது எதிர்கொள்ளும் சிக்கலை விளக்குவதற்கான ஒரு சான்றாக அமையும். ‘பின்ட்டரது மொழி பிரித்தானிய வயமான ஆங்கில மொழி. ஆங்கில மொழிக்கே உரிய பல விளையாட்டுக்களை, சாதுரியங்களை பின்ட்டர் தமது நாடக மொழியில் பிரயோகிக்கிறார். இவ்வகையில் நாடகம் என்பது பிற பிரதேசவயமாக்கப்படும்போதோ அல்லது மொழியில் சொல்லப்படும்போதோ அந்தந்த நாடுகளுக்கு ஒப்ப கால இடக் குழப்பங்களையும், அர்த்த மயக்கங்களையும் உருவாக்கவல்லது. குறிப்பாக பிரதேச ரீதியிலான மொழி ஒடுக்குமுறை இல்லாத அமெரிக்க சமூகத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தைப் பேசும் நாடகம் எந்த விதமான உணர்வையும் அர்த்தத்தையும் பார்வையாளரிடம் எழுப்பாது போகலாம். ஆனால் ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் எனும் அளவில் பிறமக்களின் மீதான ஆதிக்கத்தை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மொழியை மையான அதிகாரமாக வைத்து நிகழ்த்தி வருகின்றன எனும் பொது உண்மையைக் குறிப்பிட்ட கால இடத்தில் நிகழாத இந்த நாடகம் நிறுவ முடியும்.’

‘ஆகவே நாடகத்தின் மொழியை அமெரிக்கவயப்படுத்துதல் எனும் நிலைப்பாட்டைப் பின்ட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்கிறார்

கேரி பெர்லோப். ஆனால் மொழிசார்ந்த ஒடுக்குமுறை நேரடியாக நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு சமூகத்திற்கு, கால இடமற்ற வகையில் நிகழும் மலை மொழி நாடகம் புரிதலில் எந்தச் சங்கடத்தையும் உருவாக்குவதில்லை.

காலச்சாரத்தில் ஓழுக்கவாத மதிப்பீடுகளையும் படைப்பில் சுத்தத்தையும் வலியுறுத்தும் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பின்ட்டர் பாரதூரமான சங்கடத்தையே உருவாக்குகிறார்.

பின்ட்டரது மொழி நிறையப் பாலுறவுக் கொச்சைகளையும் பாலுறவு நிந்தனைகளையும் வன்முறையையும் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உடலின் மீதான அதிகாரம் செலுத்துவதில் பாலுறவு நிந்தனைகள் முக்கியமான பீதியூட்டும் பாத்திரம் வகிக்கிறது என்பது பின்ட்டரது நிலைபாடு.

மனிதரெனும் அளவில் பாலுறவு நிந்தனைகள் மனித ஆன்மாவின் பெருமிதத்தை முற்றிலும் அழித்துவிடுகிறது என்கிறார் பின்ட்டர். பின்ட்டரது வன்முறையும் பாலுறவுக் கொச்சையும் அடர்ந்த மொழியை நிராகரித்துவிட்டு அவரை மொழியாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லை.

பின்ட்டரது நாடகமொழி மொழிபெயர்ப்பவர்க்கு உண்மையில் ஒரு மிகப் பெரிய சவால். ஆனால் பிரபஞ்சமயமான துயரத்தையும் அழிவிற்கெதிரான நம்பிக்கையின் துளிர்ப்பையும் உணர்ந்துகொள்ளத் திறந்தமனம் மட்டுமே போதும்.

எதிர்காலத்தில் நிகழ்பவை. நிகழ்காலத்தின் மீது கடந்தகாலத்தின் சுமை குறித்துப் பேசும் அவைகளின் நிகழிடம் ராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரான தென் அமெரிக்க நாடாகவும் இருக்கலாம் அல்லது குர்திஸ் மலைகளாகவும் இருக்கலாம் அல்லது குன்டனாமோ சிறைமுகாமாகவும் அல்லது ஈழத்தின் நிலப்பரப்பு ஒன்றாகவும் இருக்கலாம். பின்ட்டரது நாடகங்கள் எப்போதுமே மொழி எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் தன்மை படைத்தவை.

பின்ட்டரது திரைப்படங்களில் வெளிப்படும் வசனங்கள் அவரது நாடகத்தின் வசனங்கள் அனைத்துக்கும் இடையில் எப்போதுமே ஒத்த தன்மைகள் உண்டு. பெரும்பாலும் இருவருக்கிடையில் நடைபெறும் வன்மமான உரையாடலின் விரிவாகவே அவரது வசனநடையும் காட்சிகளும் அமைகின்றன.

ஒரு வாசகனாக ஹெரால்ட் பின்ட்டரது கவிதைகளையும் அவரது பின்னைய அரசியல் சார்ந்த நாடகங்களையும் இலத்தினமெரிக்க நாவலாசிரியரும் கவிஞருமான ஆரியல் டோப்மெனின் படைப்புகளுடன் ஒப்பிட முடிகிறது.

வன்முறையினிடையில் வாழத் தலைப்பட்டிருக்கும் இரண்டு மனிதர்களின் இடையிலான தொடர்பு மொழி எத்துணை வன்முறையும் வக்கிரமும் பழிவாங்கும் உணர்வும் கொண்டிருக்கும் என்பதற்கான நம் காலத்தின் மொழி சார்ந்த சாட்சியங்களாகப் பின்ட்டரின் நாடகத்தையும் டாப்மெனின் நாடகத்தினையும் குறிப்பிட முடியும்.

அது போலவே காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட உடல்களை முன்வைத்துத் தொலைத்தவர்களால் நடத்தப்படும் உரையாடல்களாக வெளிப்படும் கவிதைகள், நிறைய ஆரியல் டாப்மெனிடம் காணக் கிடைக்கும். பின்ட்டரது போர் பற்றிய கவிதைகளும் அவரது இறுதிக்காலக் கவிதைகளும் அதிகமும் மரணித்த உடல்கள் பற்றியதாகவும், மரணத்தின் கோரமுகம் பற்றியதாகவுமே இருப்பதை அவரது வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்

அவரது நோபல் பரிசு உரையின் பின்னணியில் அவரது இளமைக் காலப்படம். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பின்ட்டர் தளர்ந்து காணப்பட்டாலும், அது அப்படியே மெய்மை இல்லை என்பதைத்தான் அவரது இளமை தளும்பும் படம் காண்பிக்கிறது. பின்ட்டர் முதலில் ஒரு நடிகர். அவருக்கு ஜார்ஜ் புஷ்ஷைப் போலவும் மாறிப் பேசமுடியும். நடப்பையும் நடவாமையையும் ஒருவராகவே வேறுபடுத்திக் காட்ட அவரால் முடியும். நக்கலும் நையாண்டியும் சோகமும் கோபமும் துயரும் நம்பி;க்கையும் என அவரது குரல் வேறு வேறு தளங்களில் சஞ்சரிக்கின்றன. தன்னளவிலேயே ஒரு கலை அனுபவமாக அமையக் கூடியது அவரது நோபல் பரிசு உரை. ஒரு உக்கிரமான அரசியல் நாடகமாகவே அது அர்த்தம் கொள்கிறது.

2002 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் இலண்டனில் நடந்த யுத்த எதிர்ப்புப் பேரணியில் பின்ட்டரும் தாரிக் அலியும் பேசிய கோபமான பேச்சுக்கள் இன்னமும் எனது மனதில் நிழலாடுகின்றன. பயங்கரமான குளிரும் பனியும் நிறைந்த நாளொன்றில நடந்த அந்தப் பேரணியில் 25 இலட்சம் மக்கள் பங்கு கொண்டனர். உறையும் குளிரோடு அடர்ந்த மழை பெய்தாலும் மக்கள் ஆவேசமான மனநிலையில் பின்ட்டரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நானும் நண்பர் மு. புஷ்பராஜனும் இலண்டன் ஹைட்பார்க் மைதானத்தின் மழைச் சேற்றில் அமர்ந்தபடிப் பின்ட்டரின் ஆவேசமான பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அமெரிக்காவை அவர் அரக்கன் என்றார். பிசாசு என்றார். மனித குலத்தை அழிக்க வந்த நஞ்சு என்றார். அமெரிக்கா குறித்த பின்ட்டரின் வெறுப்பு வெறுமனே உணரச்சிவசமானது அல்ல. அறிவுபூர்வமானது. மனித சுதந்திரத்திற்கும், மாற்றுக் கருத்திற்கும் அமெரிக்க சமூகம் ஒரு அச்சுறுத்தலாகவே எழுந்து நிற்கிறது என்பதனை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சோவியத் எதிர்ப்பு எனும் பெயரில் உலகில் அமெரிக்கா விளைவித்திருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அவர் தனது நோபல் உரையில் ஆவணப்படுத்துகிறார்.

கலையில் மொழி, மெய்மை நோக்கிய தேடலில் சதா திளைக்கும் கூடார்த்தமான பயன்பாட்டையும், அரசியலில் அதிகார மொழியின் பயன்பாட்டையும் கறாராக வித்தியாசப்படுத்த வேண்டியதை ஒரு படைப்பாளியாகவும் ஒரு குடிமகனாகவும் அவர் பொறுப்புடன் நின்று பேசுகிறார்.

சோவியத் யூனியன் புவிப்பரப்பிலிருந்து மறைந்து 18 ஆண்டுகளாகின பின்னும், இன்றும் நோபல் பரிசு குறித்த கம்யூனிஸ்டுகளின் விமர்சனங்களை

கிளிப் பிள்ளை போல அழகியல் மட்டும் பேசும் எழுத்தாளர்கள் மலினப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், சோவியத் எதிர்ப்பின் பெயரில் உலகெங்கிலும் அமெரிக்கா ஆடிய மனித வேட்டையை பின்ட்டர் நியாயமாகவே ஞாபகமூட்டுகிறார்.

பின்ட்டருக்கு அளிக்கப்பட்ட நோபல் விருது அமெரிக்க எதிர்ப்புக்காகவே வழங்கப்பட்டது என அமெரிக்க எழுத்தாளர்களும் அமெரிக்க பகாசுரப் பத்திரிகைகளும் எழதி வரும் சூழலில், அதனை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு; ஒலிக்கும் தார்மீகக் குரலை பின்ட்டரது நோபல் உரை முன்வைக்கிறது. பின்ட்டர் பொஸ்னியாவில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்க்கிறார். துருக்கியில் எழுத்தாளர்கள் வேட்டையாடப் படுகிறபோது, குர்திஸ் மக்களை ஆதரிப்பது போலவே அவர் துருக்கிக்குப் பயணம் செய்து ஒரான் பாமிக் போன்ற எழுத்தாளர்களுக்கு தார்மீக ஆதரவு வழங்குகிறார்.

காலஞ்சென்ற மிலசாவிச் மீதான சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை சர்வதேசியச் சட்டங்களுக்கு முரணானது என்கிறார். பின்ட்டருக்கு பிரபஞ்சமயமான நீதியில்தான் நம்பிக்கையேயொழிய, ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான அமெரிக்க பிரித்தானியச் சட்ட அத்துமீறல்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்தக் காரணத்தினால்தான் அவர் புஷ்ஷையும் பிளேரையும் யுத்தக் குற்றவாளிகள் எனக் கூண்டிலேற்றவேண்டும் என்கிறார்.

கலைஞன் தார்மீக நெறிகளினதும், பிரபஞ்ச மதிப்பீடுகளினதும், மனித உரிமைகளினதும், மனிதனது பெருமிதத்தினதும் காவலன் எனும் பிம்பம் சமீப ஆண்டுகளில் தகர்ந்து வருகிறது. இத்தகைய உலகச் சூழுலில், அரசியல் மெய்மைகளை நோக்கிய நமது தேடலைக் கோரும் பின்ட்டரின் குரல் நம் காலத்தின் தார்மீகத்தின் குரல். மனிதப் பெருமிதத்தின் அழிவைக் கண்டு கலங்கும் சத்திய ஆவேசத்தின் குரல்.

அந்தக்குரல் அவரது நோபல் பரிசு உரையில் மிகத் தெளிவாகவும் தீரத்துடனும் கேட்கிறது.

‘நிலவுகிற பெரூமளவிலான சிரமங்கள் இருந்தபோதிலும் நான் நம்புகிறேன் : அச்சமற்ற, நெறி திறம்பாத, உக்கிரமான அறிவுசார் கடப்பாட்டுடன், ஒரு குடிமகனாக, நமது சமூகங்களினதும் எமது வாழ்வினதும் மெய்மைகளை நாம் வரையறுக்க வேண்டியது நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள, நமக்கு முன்னுள்ள கடமையாகும். உண்மையில் இது நமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளையாகும்.

நமது அரசியல் தரிசனத்தில் இந்தக் கடப்பாட்டுணர்வை நாம் வரித்துக் கொள்ள வில்லையானால், மனிதர்களாக நமக்கு மிகவும் நெருக்கமான, நாம் இழந்த மனிதனது பெருமிதத்தை, நாம் மீள அடைவதென்பதற்கான நம்பிக்கை எமக்கு இல்லாது போகும்…’

Exit mobile version