Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹெரால்ட் பின்ட்டருடன் ஆன்னி மேரி க்யூசக் கருத்தாட்டம்: தமிழில் ரா. பாலகிருஷ்ணன்

கேள்வி : நீங்கள் உங்களது நாடகங்களில் அரசியல் நெடி காரணமாக அவற்றைப் பற்றிப் பேசாமல் தவிர்த்து வந்தீர்கள். ஆனால் தற்போது அவற்றைப்பற்றி பேசிவருகிறீர்கள். ஏன்?

பதில் : ஆமாம். அவை அரசியல் சார்ந்தவைதான். எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அக்கால கட்டத்தில், எனது இருபதுகளில் நான் அரசியலில் அவ்வளவு பெரிய பங்கெடுப்பாளனாக இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் மனசாட்சியுடன் சில விசயங்களில் எதிர்ப்புக் காட்டுவதுதான். பதினெட்டு வயதிலிருந்து இதனை நான் ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நான் ஒரு வசீகரமான இளைஞன். எனினும் ஒரு பிரத்யேக அடையாளத்தைத் தேடித்தரும் விளம்பரத்தை நான் பெற விரும்பவில்லை. எனது நாடகங்கள் எனக்காகப் பேசட்டும் என்று அனுமதித்தேன். மக்கள் இதனைச் சென்றடைந்திருக்க வேண்டும். என்ன செய்வது?

கே: அப்படியானால் உங்களுக்கு ஒரு விளம்பர ரீதியான அடையாளம் கிடைத்துவிட்டால் உங்களது கலை நலிந்துவிடும் என்ற ஐயம் இருந்திருக்கிறது?

ப: ஆம் நிச்சயமாக, நான் கூறியபடி எனது நாடகங்கள் எனக்காகப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை.

கே : ஒரு மனசாட்சியாளன் என்ற அளவில் உங்கள் ஆட்சேபணைகள் என்னென்ன?

ப : நான் ஒரு எதிர்ப்பாளன்தான். 1948ல் நான் இதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன், இம்மியளவு கூட ராணுவத்தில் சேர எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், நிச்சயமாக நான் அறிவேன்,வெளிநாட்டு யுத்தம் முடிந்தபிறகு உள்நாட்டு யுத்தம் துவங்கக்கூடுமென்று. அணுகுண்டு சோவியத் யூனியனுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே பிரயோகிக்கப்பட்டது. இரண்டு விசாரணைகள் மற்றும் இரண்டு வழக்குகளுக்கு நான் உள்ளானேன். எனக்கு அப்போது வயது பதினெட்டு. நான் சிறை செல்லத் தயாராயிருந்தேன். என்னுடைய தந்தை, எனக்குச் சிறைவாசத்திற்கு பதிலாக பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டபோது மிகக் கஷ்டப்பட்டு அதனைக் கட்டினார். ஆனால், சிறை செல்வதற்கு நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். எனது டூத் பிரஷ்ஷை விசாரணைகளின்போது நான் எடுத்துச் சென்றிருந்தேன். நான் இன்னும் மாறிவிடவில்லை.

கே: உங்கள் குடும்பத்தின் எதிர்வினை எப்படி

இருந்தது ?

ப: அவர்கள் மிகவும் ஸ்தம்பித்துப் போய்விட்டார்கள். கடவுளே! இது ஒரு பெருத்த அவமானம். ஆனால் அவர்கள் எனக்கு ஆதரவாகவே இருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை நீங்கள் செய்தாகவேண்டும். அது தேச சேவை. தேச சேவை என்பது எழுதப்பட்ட ஒரு வேதம். அவ்வளவுதான். நீங்கள் இராணுவத்துக்குச் சேவை செய்தாகவேண்டும்.

கே: எது உங்களது நாடகம்

பற்றிய பார்வையை மாற்றியது ?

ப: நானாகவே மாற்றிக் கொண்டேன். நான் என்ன உணர்கிறேன் என்று பேசுவதைக் குறைத்துக் கொண்டு எனது நாடகங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தேன். ஆனால் 1973ல் சிலியில் பினோஷே கும்பல், அலெண்டே அரசைத் தூக்கி எறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். நிச்சயமாக எனக்கு நன்றாகத் தெரியும். எவ்வாறு சி.ஐ.ஏவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதற்குப் பின்னணியில் இருந்தனவென்று. பாருங்கள் இப்போது ஆச்சர்யமாக எல்லா ஆவணங்களும் இதை உறுதி செய்ய வெளிவந்துவிட்டன. 1973ல் நான் அரசியலில் எனது அடையாளங்களைத் தேட இந்நிகழ்ச்சி ஒரு முக்கியக் காரணமாகிவிட்டது. எனது நாடகங்களுக்கு என்னவாயிற்று? நான் அறியேன். எழுபதுகளில் நான் ஒன்றிரண்டு நாடகங்கள் கூட அரசியல் வாடையுடன் எழுதவில்லை. நான் கட்சி அரசியலை அடிப்படையாக வைத்து நாடகம் எழுதுபவனல்ல. இது எப்படி ஏற்பட்டதென்று நீங்களாவது பேராசிரியர்களைக் கேட்டு

அறிந்துகொள்ளுங்கள்.

கே: ஆனால், நீங்கள் அதிகாரம், அதிகாரமின்மை குறித்து அப்போதும் கவனப்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியலில்லையா இது?

ப: ஆம், நிச்சயமாக அதிகாரத்துவத்தைத் தேடுவது அரசியல்தான். எனக்கு முரண்பட்ட கருத்துக்கள் இல்லை.

கே: நாடகங்கள் பற்றிச் சொல்லுங்கள். அவை அதிகாரம், அதிகாரமின்மை குறித்து விவாதிக்கின்றனவே.

ப: இவை இரண்டும் முழுக்க அரசியல் சார்ந்தவை என்று நான் கருதவில்லை. ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். டெரன்ஸ் ரேட்டிகன் ஒரு பிரபலமான ஆங்கில நாடகாசிரியர். அவர் என்னிடம் கூறியது. வுhந ஊயசநவயமநச நாடகம் எதைப் பற்றியது தெரியுமா? அது, கடவுள், புனித ஆன்மா மற்றும் மனிதனைப் பற்றியது. நான், இல்லை, அது இரண்டு சகோதரர்களும் அவர்களுடைய புரவலரையும் பற்றியது என்றேன். இதில் நிச்சயமாக. ஒரு புரவலர் எங்கும் இடமில்லாதவர்தான். அவர் தங்குமிடம் ஏதுமற்றவர். ஆகவே இந்நாடகம் எங்கும் செல்ல இயலாத ஒரு மனிதரைப் பற்றியது. ஆனால் உண்மையில் மூன்று ஆதரவற்ற ஜீவன்களைப் பற்றியது இக்கதை. இது எவ்வாறு அரசியல் சார்ந்ததாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

கே: இப்பிரச்சினையின் பொருளாதார முகத்தைக் கவனியுங்கள். ஒருவேளை அவர்

தனது வீட்டை இழந்திருந்தால் ?

ப: இழந்தால்.. ஆம், அவர் ஒரு நாடோடியாக ஆகியிருந்திருப்பார். அது சரிதான். இருப்பினும் ஒரு குடும்பம் பற்றிய நாடகம் என்று நான் கருதுகின்றேன். அது பிரம்மச்சர்யம் பற்றியதுதான். குறிப்பாக காஸடி பிரான்ஸ்வாவின் ஒரு தயாரிப்பை நான் கண்டிருக்கிறேன். ஒரு வெற்றிகரமான நாடகம் அது. அதன் இரண்டாம் காட்சியின் துவக்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு உள்ளது. அக்காட்சியில் அனைவரும் உணவருந்தி முடித்தபிறகு. அக்கணவன் அவளை அனைவர் முன்னிலையிலும் ‘உன் வேலையைப் பாத்துட்டுப் போ’ என்று அவமானப்படுத்திய பின், ஆண்கள் அறைக்கு வெளியே அமர்ந்து ஆசுவாசமாகப் புகைக்கின்றார்கள். சிறிய சகோதரனுடன் அவள் வருகிறாள். காபியை எடுத்துவரும் அவள் அதை அனைவருக்கும் பரிமாறுகிறாள். இது அனைத்தும் மௌனத்தில் நிகழ்கிறது. இது தெளிவாக இருக்கிறது எனினும் இறுதியில் நடப்பதென்ன? எல்லோரையும் அவள் எதிர்க்கிறாள். ரூத், நாடகத்தின் இறுதியில் விடுதலையாகப் போகின்ற ஒரு பெண், அவளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது யாருக்கும் தெரியாமற்போகிறது. அனைவருமே வீசியெறியப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இது நிச்சயமாக ஒரு பெண்ணியவாத நாடகம். போனமுறை நேஷனல் தியேட்டரில் மூன்று வருடத்திற்கு முன் இங்கே நடிக்கப்பட்டபோது இது ஒரு அவ்வளவாக வெற்றி பெறாத நாடகம். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் ஒரு இறுதிக்கணம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஜோயேவுடன் அவள் அமர்ந்திருக்கிறாள். அவனது தலை அவள் மடியில். வயதான அக்கிழவன் அவள் முன் மண்டியிட்டுக் கேட்கிறான். என்னை முத்தமிடு லென்னி, அவளது சகோதரன் பின்புலத்தில் நின்றுகொண்டிருக்கிறான். நான் கூறுகிறேன் லென்னி இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று. லென்னியாக நடித்தவன் ஒரு சிறந்த நடிகன், அக்காட்சியில் அவன் ரூத்தை அனுதாபத்துடன் பார்ப்பதை மட்டும் செய்ய நான் விரும்பினேன். அவனோ அத்துடன் கதவுவரை சென்று மறுபடியும் இக்காட்சியைத் திரும்பிக் கண்ணுற்றான். பின்கதவு வழியாக வெளியேறிச் சென்றான். இது அவனுடைய அதிகாரமின்மையை வெளிப் படுத்துவதாக அமைந்துவிட்டது. ஆனால் நான்கு வருடங்கட்கு முன் இதன் பிரெஞ்ச் வடிவத்தில் லென்னி, ரூத்தின் தோள்களில் கைவைத்து அனுதாபத்தைக் காட்டுவதாக அவளுடைய உடமை என்பதை வெளிப்படுத்துவதாக அமைத்திருந்தார்கள். நான் கடுமையாக இதனை எதிர்த்தேன்.

கே: நீங்கள் தங்களது பார்வையாளர்களுடன் ஒரு விரோதப் போக்கைக் கொண்டிருந்தீர்கள். அவர்களை வெறுத்தீர்கள். கேடுகெட்ட பார்வையாளர்கள் என்று குறிப்பிட்டீர்கள். இந்தப் போக்கு ஒரு எழுத்தாளர் என்றவரையில் ஏதேனும் விடுதலை

அளித்துள்ளதா?

ப: ஆம் இவ்வாறு நினைத்துப் பார்க்க நான் தூண்டப்படுகிறேன். எனது நாடகச் செயல்பாடுகளின் ஒரு இரவில் நாடகம் நியூயார்க்கில் நடக்க இருந்தது. அப்போது பார்வையாளர்கள் குழுமியிருந்தார்கள். இது 1967ல். அவர்கள் முற்றிலும் மாறிவிட்டார்கள் என்று கருதமாட்டேன். அவர்களை எங்களிடம் ஆகரசித்தது நவநாகரீக உடைகள்தாம். செல்வந்தர்களும் கூட திரை உயர்ந்து நாடகம் துவங்கியதும் அவர்கள் கேட்டுக்கொண்ட ஒரேகேள்வி. கடவுளே, நாம் எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்பதுதான், அந்நாடகத்தின் மீது அவர்களுக்கிருந்த வெறுப்பின் அதிர்வு அவ்விடத்தில் சூழ்ந்திருந்தது. நான் அதனைக் கண்ணுற்றேன். இன்னும் மோசமாகச் சொன்னால் நடிகர்களும் பார்வையாளர்களும் மிகவும் வெறுத்தனர். அதனாலேயே அவர்கள் மிகச் சிறப்பாக நடித்தார்கள். இறுதியில் பார்வையாளர்கள் தோற்றுப்போனார்கள். இரவு விருந்து உடையணிந்திருந்த ஆண்களும் பெண்களும் பயத்தில் வெளியேறிப் போனார்கள். ஏனென்றால் நடிகர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார்கள். (ஒரு வெடி வெடிப்பதைப் போன்ற சப்தத்தை உண்டாக்குகிறார்). அது ஒரு பிரமாதமான இரவு. இதுதான் பார்வையாளருக்கும் நாடகத்திற்கும் நடுவே ஒரு சவாலான வெளியீடு. அங்கே நாடகம் வென்றதென்றே சொல்லவேண்டும். எப்போதும் இவ்வாறு நடப்பதில்லை. இதன்மேலும் இட்டுக்கட்ட நான் விரும்பவில்லை. நிச்சயமாகப் பார்வையாளர்கள் கூர்மையாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்தால் நான் அவர்களை விரும்புவேன்.

கே: நாடகங்கள் என்னை வியப்பிலாழ்த்துகின்றன…

ப: அவை அதிக அளவு அரசியல் நெடியுடன் காணப்பட்டவை என்று நினைக்கிறேன்.

கே: ஆகவே அவற்றில் கற்பனை மிகக் குறைவாகக் கலந்திருந்ததா?

ப: இல்லை, இல்லை. நான் எழுதத் துவங்குவதே கற்பனை சிறகடிக்கும்போதுதான். ஆனால் மேற்குறிப்பிட்ட நாடகங்கள் மற்றும Pயசவல வுiஅந இல் கூட அவற்றில் காணப்படும் கதாபாத்திரங்கள் மீதுள்ள ஒருவித பயங்கர நறுமணம் தவிர்க்க இயலாத சித்தரிப்பாக அமைந்துவிட்டது. ஆனால் நறுமணம் என்று நான் கூறும்போது சில பொருட்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவற்றின் ஈர்ப்பால் நான் சித்தரிப்புக்களை உருவாக்குகின்றேன். அவற்றை அவர்கள் காட்டும் பரிமாணத்துடன் முழுதும் வெளியிடுவேன். இந்நாடகத்தில் அக்கதாபாத்திரங்கள் மிருகங்களைப் போன்ற முரடர்கள். அவர்களை முரடர்களாகவே சித்தரித்தேன். எந்தத் தங்கு தடையுமின்றி. இப்போது நீங்கள் இங்கே கற்பனை தடைப்பட்டிருக்கிறது என்று சொன்னால். இல்லை என்றே கூறுவேன். இந்தக் கொடுர பாவனையாளர்களை நான் வழிநடத்த விரும்புகிறேன். இதை நான் எப்போதும் செய்துவந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு கோல்ட் பார்க் எனும் ஒருவனை நான் அறிவேன். அவன் ஒரு அடிப்படைவாதி. அவனை நான் எழுதத் தூண்டப்பட்டேன்.

கே: இந்தக் கதாபாத்திரங்களில் நீங்கள் அனுபவித்ததென்ன?

ப: நல்லது. அவர்களை உண்மையுடன் அறிந்துகொள்ளும்போது, அப்பட்டமாக எவ்வித அனுதாபமுமின்றி அப்படியே சித்தரிப்பதையே நான் விரும்பினேன். அவர்கள் எவ்வளவு ஆண்மையற்றவர்கள் என்றும் நீங்கள் அறியலாம். இதோ அடுத்த ஜுலையில் லிங்கன் சதுக்கத்தில் எனது நாடகங்கள் சில நடிக்கப்படப் போகின்றன. ஒரு நடிகனாக நான் அதனை அனுபவித்துச் செய்வேன் எனக்கு இந்தக் கதாபாத்திரம் பிடிக்காதபோதும்… அவன் ஒரு கொலைகாரன் ஆனால் அவனது பெருமைமிகுந்த முரட்டுத்தனத்தை முழுப்பரிமாணத்துடன் வெளியிடவும் செய்வேன்.

கே: நீங்கள் ஏற்கனவே உங்களுடைய கதாபாத்திரங்களுடனான முரண்பாடுகளை ஒரு எழுத்தாளர் என்ற அளவில் வெளியிட்டுள்ளீர்கள். இதன் பொருள் என்ன?

ப: நான் இதனைக் கூறியபோது, நான் அவர்களைத் தடுக்க நினைத்திருந்தால் அவர்கள் என்னை மீறிச் செயல்படுவார்கள். ஆனால் இப்படிச் சொல்வது ஒன்றும் கிறுக்குத்தனமாக இருக்காது என்று நினைக்கிறேன். கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்.

கே: நீங்கள் எப்போதாவது உங்கள் கதாபாத்திரம் அமைகின்ற வழியைத் தவிர்த்துச் சித்தரிக்க விரும்பியதுண்டா?

ப: இல்லை. எப்போதும் கதாசிரியர் என்ற முறையில் ஒரு வகையில் கயிற்றின் நுனி உங்கள் கையில்தான். எனினும் அவசியமான கட்டத்தில் நாயை அவிழ்த்து விட்டாக வேண்டும். இறுதியில் இழுத்தாக வேண்டும். நான் சுயக் கட்டுப்பாட்டுடனே இருப்பேன். எனினும் அனைத்தையும் விடுதலை செய்யும்போது மேலெழும் எழுச்சியைக் கண்டு நீங்கள் பிரமிக்க வேண்டும். நாய் இப்போது ஓடித்திரிய விரும்பினால், அனைவரையும் கடித்தால், மரங்களின் மீது தாவினால், ஏரிகளில் விழுந்தால், நனைந்தால் எல்லாவற்றையும் அனுமதியுங்கள். இவ்வாறுதான் ஒரு நாடகம் வடிக்கப்படுகிறது எல்லாவற்றையும் கட்டவிழ்த்துவிட்டு, எனினும் நுகத்தடி உங்கள் கையில்.

கே: கீழ்க்காணும் செய்தி உங்கள் இணையதளத்தில் காணப்பட்டது.

1958ல் நான் இதனை எழுதினேன். யதார்த்தத்திற்கும், யதார்த்தமின்மைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை. அதே போன்றுதான் உண்மையும் பொய்யும். ஒரு பொருள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கத் தேவையில்லை. அது உண்மையாகவும் பொய்யாகவும் ஒரே நேரத்தில் இருக்கக்கூடும். மேலும் ஒரு குறிப்பையும் விட்டுள்ளீர்கள். இவ்வித அணுகுமுறைக்கு இன்னும் இடமிருக்கிறது. இதன் மூலம் கலையின் உண்மைகள் குறித்த ஆய்வுகளை நிகழ்த்த முடியும். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் இதன்புறம் நான் நிற்பேன். ஆனால், ஒரு குடிமகன் என்ற அளவில் அல்ல. இவ்வித இருண்மை நிலை உங்களுக்குள் உருவாக்கும் முரண்கள் குறித்து?

ப: நான் அப்படி நினைக்கவில்லை. இது சற்றே வியப்பூட்டுவது. நாம் ஒரு புனைவு சார்ந்த நூலை அமைக்கும்போது முற்றிலும் புதியதோர் உலகில் வாழ்கின்றோம். அது ஒரு வேறு உலகம். அது கற்பனைகளின் தொகுதி, கலையின் பரிபூரணப் புனைவொன்றில் மெய், பொய் குறித்த தர்க்கங்களை நாம் தொடர்ந்து நிகழ்த்துவது அரிது. நீங்கள் திறந்த மனதுடையவராயிருத்தல் அவசியம். தேடுதல் அவசியம். அவ்வுலகம் தன்னைத் தானே தேடியடையட்டும். தனக்காகப் பேசட்டும். ஆனால் புறவுலகில் நான் மெய், பொய்யை வேறுபடுத்துதல் எளிது. நமக்குச் சொல்லப்பட்டவற்றில் பெரும்பகுதி பொய்களாக இருக்கும். ஆனால் மெய் என்பது தேடிச் சலிப்படைந்து காணப்படுவது. மறைந்திருப்பது. அகழ்ந்தெடுத்து நேருக்கு நேராக தரிசிக்க இயலவல்லது. நான் இப்போது கூறுவதுகூடத் திட்டவட்ட மாகத்தான். நிஜத்தில் கலைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு பெரும் சம்பாஷணை நிகழ்ந்து வருகிறது. ஆம், நிச்சயமாக இவ்வாறு இருந்தாக வேண்டும். என்றால் கலை என்பது யாது? அது சிக்கலானது. கற்பனையினாலானது. நமது நிகழ் வாழ்வோ இன்னும் சிக்கலானது. ஆனால் அரசியல் நிகழ்வு இத்தனை சிக்கலானதல்ல.

கே: பெரும்பாலும் நமக்குச் சொல்லப்பட்டவை தவறானவை என்று நீங்கள் எதனைக்

குறிப்பிடுகிறீர்கள்?

ப: ஜனநாயக நாடுகள் என்றழைக்கப்படுகின்ற அத்தனை நாடுகளிலும் புழக்கத்திலிருக்கின்ற ஜனநாயகம் என்ற வார்த்தை அர்த்தமற்றது என்று நான் நினைக்கிறேன்.

கே: அதாவது அது காணப்படுகின்ற அளவில் அர்த்தமற்றது?

ப: ஆம், அப்படித்தான்

கே: அது ஒரு கருத்து என்ற அளவிலுமா?

ப: இல்லை, இல்லை (நகைப்புடன்) இது ஒரு வியப்பூட்டுளநவிற்கு நல்ல கருத்து. ஆனால் நாம் நிறையப் பொய்களால் சூழப்பட்டிருக்கிறோம். அப்படிப் பொய் நமக்குத் தரப்படவில்லையென்றால். நமக்குத் தரப்படுவது எச்சமும் குப்பையும்தான். யாரை அவர்கள் ஏமாற்றுகிறார்கள், ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் திசை திருப்ப முடியுமென்றால் அது ஒரு கடுமையான விஷயம். தொன்னூற்றைந்து வயது முதியவரான என் தந்தை, ‘இவ்வாறு கூறப்படுகிறது, ஏனென்றால் அது செய்தித்தாள்களில் அவ்வாறு காணப்படுகிறது’ என்பார். அரசு, வணிகம், ஊடகம் இவற்றுக்கிடையிலான தொடர்பு மிக முக்கியமானது. உண்மையில் இவை சராசரி மனிதனை வெறுக்கின்றன. அவனைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றன. ஆனால், இவ்விஷயத்திற்கு எதிராக எப்போதும் பேசி வருகின்றன.

‘நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம்’ என்று கூறுகின்றன. ஆர்வெல்லியக் காற்றுபோல ‘இதோ நாங்கள் உங்களுக்கு மேலான கவனிப்பை அளிக்கிறோம்’ என்று நம்மைச் சித்திரவதை செய்யும்போதும் கூறத் தவறுவதில்லை. எங்களை நம்புங்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். டி.எஸ்.எலியட் கூறுவார், வயோதிகர்களிடமிருந்து நிச்சயம் அது கிட்டாது. ஏனென்றால், என்னால் எதையும் தர இயலுமென்ற பொய்யால் நான் தளர்ந்துவிட்டேன்.

கே: எம்மாதிரிச் சித்திரவதை குறித்து நீங்கள் சொல்கிறீர்கள்?

ப: எல்லாவிதச் சித்திரவதைகளும்தான். நீங்கள் எழுதி வருவதும்கூட, அமெரிக்கச் சிறைகள் குறித்து, இதனால் அமெரிக்க அரசாங்கம் சிறை சார்ந்த இரண்டு மில்லியன் மக்களது நல்வாழ்வைக் குறித்து, இனி அக்கறை கொள்ளும் என்பதாகச் சொல்லவில்லை. அவர்கள் சமூக நலன் பற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறீர்கள், அவர்கள் செய்வதெல்லாம் வேறு. அவர்கள் சின்னஞ்சிறு போதைக் குற்றம் போன்றவற்றுக்காகப் பலரைக் கடுமையாகத் தண்டிக்கத் தவறுவதில்லை. கறுப்பு சிறைக் கைதிகளினுடைய பிரச்சினை கவனிக்கத் தகுந்தது. மேலும் பளோரிடாவில் கணிசமான கறுப்பு வாக்காளர்கள் வாக்களிக்க இயலாமல் புறக்கணிக்கப்பட்டனர். இது பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். உங்கள் நாட்டில் நடப்பதுதான் என் நாட்டிலும் நடக்கிறது. எந்த வித்தியாசமும் இதிலில்லை.

அமெரிக்கா உலகம் அனைத்திற்கும் பஞ்சாயத்துப் பேசி வரும் இன்றைய காலகட்டத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

கே: நாம் இப்போது உங்கள் தேசத்தைப் பற்றியே பேசுவோம். உங்களைப் போன்ற ஒருவர் பிரிட்டனில் இருந்து கொண்டு. ‘தி நியூ இன்டர் நேஷனலிஸ்ட்’ பத்திரிகையில் அமெரிக்கச் சிறை பற்றி எழுதுவது அதன் வாசகர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சனையில் நீங்கள் எப்படிச்

சம்பந்தப்பட்டீர்கள் ?

ப: சிறிது சிறிதாக நான் ஆய்வு செய்தபோது இவை எனக்குக் கிட்டின. அமெரிக்காவிலிருந்து சில நண்பர்களும் எனக்கு அவசியமான தகவல்களைத் தந்த வண்ணம் இருந்தனர். அவர்களது பங்களிப்பு முக்கியமானது.

கே: இடதுசாரிகள்?

ப: ஆம். அவர்கள் சற்று எதிர்ப்பாளர்கள். அவர்களது இருத்தல் அவ்விடத்தில் அவசியமானது. கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக அமெரிக்கச் சிறைகள் குறித்து நான் நிறையப் படித்தும் ஆய்ந்தும் வருகின்றேன். அவை குறித்து இங்கே நான் நிறையப் பேசி வந்தேன். இது வெறும் அமெரிக்காவின் பிரச்சினை மட்டுமல்ல. அமெரிக்கா உலகம் அனைத்திற்கும் பஞ்சாயத்துப் பேசி வரும் இன்றைய காலகட்டத்தில் இது ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவிடம் நீங்கள் இதனைக் காணுங்கள் என்று உலகிடம் கூற முயற்சிக்கிறேன்.

கே: அமெரிக்காவிடம் ஏன் இவ்வளவு வெறுப்பு?

ப: அதில் ஏதுமில்லை. பொதுமக்களுக்கும்கூட (இங்கிலாந்து) யாருக்கும் இவ்வாறு பேசுவது பிடிக்கவில்லை.

கே: உண்மையாக?

ப. ஓ! நான் சற்று எல்லை மீறுகிறேன்.

கே. இங்கே இவ்வாறு பேசுவது பிடிக்கவில்லை?

ப. இல்லை, இல்லை. நான் சற்று எல்லை மீறுகிறேன் என்று சொன்னேன். நான் சொல்வது என்னவென்றால், நான் கற்பனையில் மூழ்கிவிடக்கூடாது. நான் ஒன்றும் அவ்வளவு பிரபலமானவனுமல்ல. ஏனென்றால் பிரிட்டிஷ் அமெரிக்காவிற்கிடையிலுள்ள பிரத்யேக உறவை நீங்கள் உணரவேண்டும். அமெரிக்கா செய்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும். அந்தப் பார்வை தான் விரும்பத்தகுந்தது. வளைகுடாப் போர் எனபது ஒரு கேவலம். நேட்டோ செர்பியாவிலிருந்து குண்டு மழை பொழிந்தது ஒரு மானுட இழிவு. யங்கின் தொடர்பாளர்களாகிய உளவியல் நிபுணர்களிடையே செர்பிய குண்டுகள் வீழ்ந்து வருவது குறித்த உரை ஒன்றை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நிறுவனத்தின் தலைவரிடம் நான் கேட்டேன். ‘எதற்கு என்னை இங்கே அழைத்தீர்கள்?’ அவர் கூறினார், ‘இங்கே அனைவரும் விரும்பக்கூடும்’ அவருக்கு என் நிலை தெரியும். நான் ஒரு உணர்வை எழுதினேன். அதில் அங்கே நிகழ்ந்தவை, நிகழ்ந்து கொண்டிருப்பவை ஆகியவற்றைக் குறித்தவை மற்றும் ‘மனித இடையீடு’ என்ற வார்த்தைகளின் முழுப்பொருள் ‘மனித மதிப்பீடுகள்’ மற்றும் ‘நாகரிக மதிப்பீடுகள்’ என்ற வார்த்தையின் முழுப்பொருட்களும் அடங்கியது அவ்வுரை. பிறகு தான் எனது உரையில் அமெரிக்கத் தண்டனைகள் குறித்த நீண்ட பட்டியலையும் இணைத்தேன் தண்டனை நாற்காலிகள், இடுப்பைச் சுற்றி அணியும் தளைகள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் மரண தண்டனை சுமார் இருநூற்றைம்பது பேர் நிறைந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு கணைகள் என்மீது வீசப்பட்டன என்றாலும் முற்றிலும் ஆதாரமான கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. நீங்கள் ‘மனிதாபிமான இடையீடு’ என்ற அளவில் மற்ற நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுகிறீர்கள். இந்தச் சொல்லலங்காரம் ஒரு பெரிய பிதற்றல். இதனால்தான் நான் மொழிக்கும் செயலுக்குமிடையிலான பெரும் பிளவை உணர்கிறேன். இதனில்தான் நான் தொடர்ந்து ஆர்வத்திற்கும் சலிப்புக்குமான ஒரு நூலிழையையும் கண்டெடுக்கிறேன்.

கே : இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி அதனுடைய கலக வீரியத்தை இழந்துவிட்டது

குறித்து…

ப : நிச்சயமாக நான் நன்றாக இதனை உணரவே செய்கிறேன். இந்த நாடு ரகசியமாக விற்கப்பட்டுவிட்டது. அது அயல் நாட்டுக் கொள்கை என்று வர்ணிப்பதற்கு விரோதமாக.

கே : தாங்கள் என்ன கூறுகிறீர்கள் ?

ப : தனியார் மயமாக்கல் என்பது பொறுத்துக்கொள்ள இயலாதது. நமது ரயில்வே தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது. கடந்த பதினெட்டு மாதங்களில் இரண்டு பெரிய விபத்துக்கள் நடந்துள்ளன. இரண்டு விபத்துக்களில் அறுபது பேர் இறந்துள்ளனர். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் இது நிகழ்ந்திருக்காது. ஆனால், அதனைச் செய்ய அவர்களுக்கு வசதியில்லை. யார் இதனைக் கேட்க இயலும்? நமது ரயில்வே படு மோசமான நிலையிலுள்ளது. தண்ணீர்கூடத் தனியார் மயமாகிவிட்டது. நாட்டின் பல பாகங்களில் வறட்சி தாண்டவமாடும்போது நாம் தண்ணீரைப் பெற மிகவும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தண்ணீரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தண்ணீர் சொட்டு சொட்டாக விழுகின்றது. தண்ணீரை விநியோகிக்க இங்கே முறையான அமைப்பு இல்லை. இந்த நிறுவனங்களின் அதிபர்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்கள். இதேதான் தண்டவாளங்கள் இடுவதற்கும் பொருந்தும். இந்த அதிபர்கள் ஒட்டுமொத்த அமைப்பையும் சூறையாடிய பிறகு சுமார் இருபத்தேழு மில்லியன் பவுண்டுகள் வரை லாபம் ஈட்டியிருக்கிறார்கள். பிறகு கோல்ஃப் விளையாடப் போய் விடுகிறார்கள். இதுதான் தாட்சர் காலத்திலிருந்து இங்கு நடந்து வருகின்றது. அரசாங்கத்திற்குக் கொழுத்த வியாபாரத்தில்தான் ஈடுபாடு உள்ளது. அரசாங்கம் தன்னுடைய செலவுகளைப் பற்றி வாய்கிழியப் பேசுகின்றது. எல்லாப் பொது நிறுவனங்களும் தளர்ந்து போய்விட்டன. அரசியல் இங்கே ஊமையின் பேச்சைப் போன்றதுதான்.

கே : ஏதாவது ஒரு நிகழ்வு உங்கள் வாழ்க்கையைக் குறிப்பாக மாற்றியுள்ளதா?

ப : எனக்குத் தெரியவில்லை. எனக்கு நிச்சயமாகத் தெரியாது. எது என் வாழ்க்கையை மாற்றியதென்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை நான் பதிமூன்று வயதில் காதலில் வீழ்ந்து தழதழத்து எரிந்ததைச் சொல்லக்கூடும். சீரான நடவடிக்கைகளையுடைய நான் எனது தெருவில் குடியிருந்த ஒருத்தியின் மீது காதல் வயப்பட்டேன். அவளிடம் எந்தக் குற்றமுமில்லை என்ற போது இருவருக்குமிடையே ஒரு உறவு நிலவி வந்தது. அதில் எனக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை. ஏனெனில், அவள் என்றாவது ஒருநாள் வேறு கைக்குச் சொந்தமாகி விடக்கூடும் என்ற உணர்வு என்னை வருத்திக் கொண்டேயிருந்தது. என்றுமே எனக்கு அவள் கிடைக்கப் போவதில்லை. இந்தத் தவிப்பினால் நான் நிறையக் கவிதைகள் எழுதி வந்தேன். எனது தந்தை ஒரு தையல்காரர். அதிகாலையில் எழுந்து பணிகளைத் துவக்குபவர். ஒரு நாள் காலை 6.30 மணியளவில் என்னை அவர் காண வந்தார். நான் சமையலறை அருகே டேபிளில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். என் கண்களில் கண்ணீர் மல்கியிருந்தது. அவர் சற்றே கனத்த குரலில், ‘நீ இங்கே என்ன பண்றே?’ என்று கேட்டார். ‘எனக்கே தெரியவில்லை. நான் என்ன பண்றேன்னு’… நான் எழுதியிருந்தவற்றை எடுத்து அவர் பார்த்தார். பிறகு என்னை ஆதரவாகத் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனைக் குறித்து அவர் என்றும் பேசியதில்லை. ‘இந்தச் சனியைத் தூக்கியெறி’ என்றும் அவர் என்றும் கூறியதில்லை. அவர் நான் காதலின் வெந்தழலில் எரிந்து கொண்டிருக்கிறேன் என்று புரிந்துகொண்டார். நான் இத்தகு தன்மை ஒன்றுக்காகவே அவரை விரும்புகிறேன்.

கே : உங்களுடைய ஆதர்சம்?

ப : (சிரிப்புடன்) ஜேம்ஸ் ஜாய்ஸ். ஆம் நான் ‘யுலிஸிசை’ மிகவும் நேசிக்கிறேன். ‘ஜொனாதன் செபாஸ்டியன் பா’ வையும் எனக்குப் பிடிக்கும். தவிரவும் ஒன்றிரண்டு பேரை.

கே : இது அவர்களுடைய கலைக்காகவா?

ப : ஆம் அவர்களுடைய விடுதலைக்காகவும். பலருக்கு ‘பா’ வைத் தெரியாது. இசையில் அவர் செய்ததை இங்கு சாதித்தார். இது மற்றவர்களிலிருந்து வேறுபட்டது.

 

Exit mobile version