மோடி அரசு அமல் செய்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் தீவிரம் பெற்று வருகிறது. இந்த போராட்டம் பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 60 பேர் வரை கடுங்குளிரால் இறந்து விட்ட நிலையிலும் போராட்டம் தீவிரம் பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (10-01-2021) அன்று ஹரியானா மாநில பாஜக முதல்வர் கட்டார் :கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவாசாயிகள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இது போன்ற கூட்டங்களை இந்தியா முழுக்க பாஜக திட்டமிட்டிருந்தது. தமிழகத்திலும் சில கூட்டங்களை நடத்தி விட்டு எதிர்ப்பு காரணமாக கைவிட்டு விட்டது பாஜக அரசு.
இந்நிலையில், ஏராளமான விவசாயிகளை திரட்டியிருந்த ஹரியானா மாநில பாஜக இப்பகுதிக்கு போராடும் விவசாயிகள் வருவதை தடை செய்திருந்தது, சாலைகள் மறிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்ட நிலையில், முதல்வர் கட்டார் பொதுக்கூட்ட மேடையின் அருகிலேயே ஹெலிகாப்டரில் வந்திறங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விவசாயிகள் ஹரியானா மாநிலத்தில் பாஜக நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் சென்று போராட்டம் நடத்துவோம். விவசாயச் சட்டங்களை ரத்து செய்யாமல் அதனால் விவசாயிகளுக்கு ஆதாயம் உள்ளது என்று பொய்யான பிரச்சாரம் செய்தால் அதை முறியடிப்போம் என்று அறிவித்துள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்திலும் ஏன் தமிழகத்திலும் கூட பாஜகவினரின் விவசாய மசோதா ஆதரவுக் கூட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.