இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் இழைத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வைத்த கோரிக்கைகள் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் வேதானந்தாவுக்கு விலை போனதாக தூத்துக்குடி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அதிமுக பாஜக வேதானந்தாவை ஏற்கனவே ஆதரிக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஒரு போதும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுது கொடுத்த திமுக தங்களுக்கு வரலாற்றுத் துரோகத்தை இழைத்து விட்டதாக தூத்துக்குடி மக்கள் திமுக மீது வெறுப்படைந்துள்ளார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த வழக்கில் நீதிபதி, “நாடு மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. இந்த விஷயத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். இதில் எவ்வித அரசியலும் இருக்கக் கூடாது. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைமை தேசிய நெருக்கடி. எனவே, நாம் தேசத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவை மட்டும் இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த ஆலையில் எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள். அதில் யார், யார் இருப்பார்கள் என்பதை நிபுணர் குழு முடிவு செய்யும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவினையடுத்து ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தும் மத்திய அரசுக்கே சொந்தம். அது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் என்றது. அதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
வேதானந்தா வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே
இதன் பின்னர் வேதானந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே “நாங்கள் ஆக்சிஜன் ஆலையை மட்டுமே திறக்க இருக்கிறோம் கண்காணிப்புக் குழுவில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களோ பொது மக்களோ இருக்கக் கூடாது. அரசு அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் 35 டன் திரவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் ஆனால் 200 டன் திரவ ஆக்சிஜன் வரை நாங்கள் உற்பத்தி செய்வோம். இந்த பணிக்கு 200 ஊழியர்கள் வரை தேவைப்படுகிறார்கள்” என்றார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆஜரான காலின் கன்சால்வேஸ் வாதிட்டார். அவர் ஆலையை திறக்க வேண்டும் என்றால் அதை தமிழக அரசின் மூலம்தான் திறக்க வேண்டும். ஆலையை அவர்களாகவே திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இவைகளை ஏற்க மறுத்த நீதிமன்றம் மருத்துவ தேவைகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலையைத் திறக்கலாம். எத்தனை பணியாளர்களை அமர்த்திக் கொள்வது எனப்தை கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதை கண்காணிப்புக் குழு முடிவு செய்யும்.
மொத்தத்தில் திமுக எம்.பி யும் , திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரியவருமான கனிமொழி முன் வைத்த நிபந்தனைகள் எதனையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த விதமான தடையும் இன்றி முழு சுதந்திரத்தோடு ஸ்டெர்லைட் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட அதிமுகவும் மிக முக்கியமான திமுகவும் அதன் எம்,பி கனிமொழியுமே காரணம்.