Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஒப்புதல்- ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கு துரோகம்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறியதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு காட்டி வரும் தூத்துக்குடி மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தூத்துக்குடியில் வேதானந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் நச்சு ஆலை செயல்படுகிறது. இந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடிய நிலையில் அதன் நூறாவது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். இந்த கொலைகளுக்காக இதுவரை எவர் ஒருவரும் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.ஆனால், போராடிய மக்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன. அவர்கள் இன்றுவரை அந்த வழக்குகளுக்காக கோர்ட்டுக்கும் கேஸுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் கொரொனா சூழலை பயன்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என்றது. மத்திய அரசும் இதையே ஆதரித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தமிழக அரசே ஆலையை ஏற்று நடத்தலாம் என்றது. ஆனால், இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஸ்டெர்லைட் நிர்வாகம் “அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாது என்றும் எங்களிடம் ஆக்சிஜன் தயாரிக்கும் திறனும் உள்ளது. எனவே நாங்களே தயாரித்து அரசுக்கு அளிப்போம்” என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே அதிமுக அரசு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த முடிவை அமல் படுத்த ஆக்சிஜனின் பெயரால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இக்கூட்டத்திற்கு திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதியும், தூத்துக்குடி எம்.பி கனிமொழியும் சென்றார்கள். இதில் உள்ள ஆபத்துகள் புரியாமல் சென்றார்களா அல்லது தெரிந்தே சென்றாரகளா என்பது தெரியவில்லை.திமுக சம்மதித்தாலும் சம்மாதிக்கா விட்டாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பார்கள் என்பது முடிவான விஷயம். ஆனால் அந்த முடிவை திமுகவின் வாயில் இருந்து பெற வேண்டும் என முடிவெடுத்த அதிமுக நுட்பமான இந்த விளையாட்டில் திமுகவை சிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் ஆக்சிஜன் தான் பிரச்சனை என்றால் அதை உற்பத்தி செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது. ஏராளமான எண்ணெய் நிறுவங்களால் சில நாட்களிலேயே நாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து விட முடியும். மேலும் சில கோடி ரூபாய்களில் ஆக்சிஜன் நிறுவனங்களையும் உருவாக்கி விட முடியும். இதை எல்லாம் தெரிந்திருந்தும் ஆக்சிஜன் என்ற பொய்யைச் சொல்லி ஸ்டெர்லைட்டை திறக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.இந்நிலையில், இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி “ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம். ஆனால் வேறு செயல்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் கொடுக்காலாம்” என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றது. ஆனால் இப்போது ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்கிறது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஊடகங்களும் அரசும் திமுக ஸ்டெர்லைட்டை திறக்க சம்மதம் என்று செய்தி வெளியிட்டு விட்டார்கள்.அனைத்துக் கட்சிகளும் ஸ்டெர்லைட்டை திறக்க ஆதரித்திருந்தாலும் கூட திமுகவின் ஆதரவு மட்டுமே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக அரசும் இதையே எதிர்பார்த்து இருந்ததால் ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஆதரவு என பிளேட்டை திருப்பி திமுக மீது போட்டு விட்டுச் ஆலையை திறக்க அனுமதியளித்து விட்டது.இப்போது சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் என அனைவருமே ஸ்டெர்லைட்டை திறக்க திமுக ஆதரவு என்று பிரதானமாகப் பேசுகிறார்கள்.

உண்மையில் ஸ்டெர்லைட்டை திறக்க முன்கூட்டியே தீர்மானித்து விட்டார்கள். அதையே திமுகவும் போய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்து சிக்கியிருக்கிறது.ஸ்டெர்லைட்டை திறப்பதா வேண்டாமா என்று தூத்துக்குடியில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தூத்துக்குடி பொது மக்கள் ஆலையைத் திறக்கக் கூடாது என்று தெரிவித்த நிலையில் ஸ்டெர்லைட்டை ஆக்சிஜனுக்காக திறக்கலாம் என்று திமுக தெரிவித்திருப்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Exit mobile version