Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்டாலினும் பெரியாரும் : வே. மதிமாறன்

உன் மதமா? என் மதமா? என்று உலகம் முழுக்க யூத, கிறித்துவ, இஸ்லாமிய, இந்து மதவாதிகள் முறுக்கிக் கொண்டு நின்றாலும், இவர்கள் சங்கமிக்கிற இடம் ஒன்று உண்டு. அது , கம்யூனிச எதிர்ப்பு. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் எதிர்ப்பு.

அறிவு ஜீவிகள், மார்க்சியத்தின் பின்னணியில் சிந்திப்பதாக சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள், கதை மேதைகள், கட்டுரையிலேயே கதை விடுபவர்கள், இன்னும் இலக்கியப் போர்வையோடு வரும் இந்து மத வெறியர்கள் & இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வார்த்தைச் சேறுகளை வாரி அடித்துக் கொண்டாலும், இவர்கள் ஒன்றுபடுகிற இடம் ஒன்று உண்டு.

அது, ஸ்டாலின் எதிர்ப்பு.

”ஸ்டாலின் ஒரு கொலைகாரன்”
”ஸ்டாலின் மக்கள் விரோதி”
”ஸ்டாலின் ஆட்சியில் சுதந்திரம் என்று பேச்சுக்கே இடம் கிடையாது.”

”ஸ்டாலின் ஆட்சி இரும்புத் திரை” என்றெல்லாம் இவர்களால் அவதூறு பரப்பப்படுகிற தலைவர் ஸ்டாலின் ஆட்சியை நேரில் கண்ட சாட்சியாக தலைவர் பெரியார்.
ஒடுக்கு முறைகளுக்குத் தாய்வீடாக இருக்கும் சிறைச்சாலை, ஸ்டாலின் ஆட்சியில் கைதிகளுக்கு வீடாகவும் தொழிற்சாலையாகவும் பயன்பட்டது என்று அந்த இரும்புத் திரையை விலக்கிக் காட்டுகிறார்.
ஆம். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில், சாதாரண குடிமகனுக்கு உள்ள சுதந்திரத்தை விட , சோவியத் நாட்டில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச குடியரசில், கைதிகள் கூட எவ்வளவு சுதந்திரமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சாட்சியளிக்கிறார் தலைவர் பெரியார்.

‘பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்‘ என்ற நூலில், தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதியது:

“ Leaforthov‘ ஜெயில் பார்க்க அழைக்கப்பட்டுப் போனோம். டைரக்டர் அறிமுகம் செய்யப்பட்டு அவர் எல்லாம் காட்டினார். மே First க்கு ஆக ஜெயில் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். கைதிகளுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. ஜெயில் என்பது பல பேக்டடரிகள் இருக்கிறது தான்.

பனீன், மொப்ளர் பின்னல் நெசவு பார்த்தோம். டைமன் பட்டில் நல்ல வேலைகள் செய்யப்படுகிறது. மற்றும் கோட்டுகள், ஓவர் கோட்டுகள் முதலியவை செய்யப்படுகின்றன.

சிறைக்கூட அறைகள் பார்த்தோம்; கட்டில் மேஜை நாற்காலி, கம்மோட், தண்ணீர்க் குழாய், பேசின், உஷ்ணம், புஸ்த்தகங்கள் அலமாரி ரேடியோ முதலியவைகள் இருக்கின்றன.

ஒரு ரூமுக்கு 2 அல்லது மூன்று பேர் உண்டு. ஒரு ரூம் 816 அளவு. அவர்களுக்கு க்ஷவரம் செய்யும் சலூன் உண்டு. சையன்சு அறை உண்டு. பத்திரிகைகள் படிக்கும் ரீடிங் ரூம், புஸ்த்தகங்கள் படிக்கும் லைபெரிரி, படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள், சித்திர வேலை கற்பித்தல் முதலியவை உண்டு.

இங்கு டிராமா, சினிமா ஆல்கள் பார்த்தோம். 17 வயது பையன் ஒருவன் பல திருட்டில் அகப்பட்டு 3 1/2 ஆண்டு தண்டனை அடைந்தவனைப் பார்த்து விசாரித்தோம். அவன் 2 ஆண்டு இங்கு இருந்து வேலை பழகி பிறகு தனி பேக்ட்டரிக்கு அனுப்பப்படுவான். இப்போது நெசவு வேலை செய்கிறான். இந்த ஜெயிலில் 600 கைதிகள் உண்டு.

இதை மாதிரி 4 அடுக்கு கட்டடம். இது புரக்ஷிக்கு முன் கட்டப்பட்ட ஜெயில் கட்டடம். சில திருத்தப்பாடு செய்திருக்கிறது. ஆனால், புது ஜெயில்கள் இன்னமும் நன்றாய்க் கட்டப்படுகின்றன. முன் ஒரு அறைக்கு ஒரே கைதி, இவன் எப்போதும் உள்ளேயே இருப்பான்.

முன்னால் இங்கு சர்ச்சு இருந்தது. இப்போது அது ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. ராத்திரி காலத்தில் கைதி சிறைக்குள் இருப்பான். அதுவும் இரவு 12 முதல் 5 மணிவரைதான் இருப்பான்.

ஒரு கைதி 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும்; அவர்களுக்கு சாப்பாடு துணி முதலியவை இல்லாமல் ஒரு கைதிக்கு மீ 30 ரூபிள் சம்பளம் உண்டு. அதில் பகுதியை அவன் இஷ்டப்படி செலவு செய்யலாம். அதாவது, இங்கு கடையில் அவனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். மீதி மீ 15 ரூபிள் வீதம் சேர்த்து வைத்து விடுதலை ஆகிப் போகும் போது கையில் கொண்டு போவான். அவர்களுக்கு அடிக்கடி மீட்டிங்குகள் உண்டு.

தொழில் விஷயமான பிரசங்கம், சோஷியலிஸ்ட் பிரசங்கம் செய்வார்கள். 3 மணி நேரம் படிக்கலாம். 6 நாளில் 1 நாள் லீவு. 7 நாள், சிலர் 14 நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம். குடியானவன் கைதி, கூட்டுப் பண்ணையத்துக்காரன் வருடத்தில் மூன்று மீ வீட்டுக்கு வேலைக்குப் போய்வரலாம். தினமும் தாராளமாய் வீட்டுக்குக் கடிதம் எழுதலாம்; பதில் பெறலாம். பத்திரிகை, புஸ்தகம் தாராளமாய்ப் பெறலாம்.

சாப்பாடு 2 வேளை; காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சாப்பாடு டீ வேண்டியது Free யாய் வேண்டிய வரை கிடைக்கும். தொழில்சாலை உடை தவிர மற்ற உடை அவர்கள் சொந்தத்தில் இஷ்டப்படி உடுத்திக் கொள்ளலாம்.

மே First க்கு 100 பேர்களை ஒரு நாள் எல்லாம் வெளியில் போய் வர அனுமதிப்பார்கள். கைதிகளுக்கு என்று தனிப்பத்திரிகை உண்டு. அது மீ 3 முறை 5 கோபக் விலை. லைபெரிரியில் 8000 எட்டு ஆயிரம் புஸ்த்தகங்கள் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் வருகின்றன. 100க்கு 82 பேர்கள் ஜெயிலில் பத்திரிகைக்கு சந்தாதாரர்கள். செஸ் முதலிய கேம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கின்றன.

இங்குள்ள கைதிகள் குற்றம் செய்தால் இங்கேயே கைதிகளுக்குள் எலக்ட் செய்த ‘காம்ரேட் கோர்ட் ‘டில் விசாரித்து நீதி செலுத்துவார்கள். அந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஜெயில் அதிகாரிகள் 3 நாள் வரை மூடி வைத்திருக்கும் தண்டனை செய்வார்கள்.

12 முதல் 5 வரைதான் ஜெயில் அறை பூட்டி இருக்கும். மற்ற காலங்களில் திறந்தே இருக்கும். பிரரேட் கோர்ட் தண்டனை என்பது குறிப்பிட்ட காலத்துக்கு சில சவுகரியங்கள் இல்லாமல் செய்வது. அவரவர்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு புஸ்த்தகம் உண்டு. இது போல் மாஸ்கோவில் 6 ஜெயில் இருக்கின்றன. மொத்தம் 4000 நாலாயிரம் கைதிகள் உண்டு.

பெண்களுக்குத் தனி ஜெயில் உண்டு. (சில கைதிகள் தங்கள் அறைக்குள் ஸ்ட்டவ் வைத்திருந்தார்கள். மே First க்கு தங்கள் தங்கள் அறையை அலங்கரித்துக் கொண்டும் இருந்தார்கள்) மாஸ்கோ ஜில்லா பூராவுக்கும் சுற்றுப்பக்க கிராமங்களும் சேர்ந்து 4000 கைதிகள். இந்த ஜெயிலில் இருந்து போகும் கைதிகள் நல்ல வேலைக்காரர்களாகி விடுகிறார்கள். ஜெயில் காரணத்தினால் ஓட்டுக்கு அருகதை போய்விடாது.

இந்த டைரக்ட்டர், ரிவிலாஷனுக்கு முன் கொல்லு வேலை செய்து கொண்டிருந்தவர், ஜெயில் திருத்தமெல்லாம் அனேகமாய் இவருடைய முயற்சியிலேயே செய்யப்படுகிறது. இவர் பெயர் மவுலின். ரிவிலூஷனில் இவர் தண்டனை அடைந்து சைபேரியாவில் நாடு கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்; அரசியல் கைதியாயும் இருந்தவர். தான் போர்ட்சைட் வரை வந்திருப்பதாகச் சொன்னார். இவர் 29 வருடமாக கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்து வேலை செய்தவர். இவர் ஓல்ட் போல்ஸ்விக் மெம்பர். 15000 தொழிலாளிகளின் ஸ்ட்ரைக்கை லீட் செய்தவர்.

EVRகேழ்வி: ”இங்கு இவ்வளவு தாரளமாய்க் கைதிகள் விடப்படுகிறார்களே , ஓடிப் போவதில்லையா?”

பதில்: ”இதிலிருந்து ஒரு தடவை 3 பேர் ஓடிப்போனார்கள். பிறகு தானாகவே வந்து விட்டார்கள். சில சமயங்களில் 100 பேர் 200 பேர் சர்க்கஸ் பார்க்க என்று விடப்படுவார்கள். அவர்கள் காவல் இல்லாமலேயே போய் விட்டுத் தாங்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள். காரணம், அவர்களது நல்ல, நடவடிக்கையும் மற்றும் வெளியில் அவர்களுக்கு டிக்கட் இல்லாமல் சுலபத்தில் சாப்பாட்டுச் சாமான், அறைகள் முதலியவை கிடைக்காததுமாகும்.”

ரெவிலூஷன்போது இந்த டைரக்ட்டரின் பெண்ஜாதி குழந்தைகள் எதிரிகளால் (ஒயிட்ஸ்களால்) கொல்லப்பட்டுவிட்டார்கள். இவர் ஆக்ஷியில் இது உள்பட 4 ஜெயில்கள் மேற்பார்வையில் இருக்கிறது.

இந்த 4 ஜெயிலில் இருந்து வருஷம் 1 க்கு 8 மிலியன் ரூபிள் மீதியாகிறது. 2300கைதிகளின் வேலையால் வருடம் 8000000 ரூபிள் சர்க்காருக்கு லாபம். அதாவது ஒரு கைதியால் மீ275 ரூபிள் மீதியாகிறது. கைதிகளுக்கு அதிகமான சுதந்திரமும் சவுகரியமும் உண்டு. நன்றாய் நடந்து கொள்ளுகின்றவர்களுக்கு அதிக சவுகரிமும் லாபமும் உண்டு“


நன்றி : http://mathimaran.wordpress.com/2007/11/19/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

Exit mobile version