முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் சென்னை திநகரில் நடந்தது. இலங்கைத் தமிழர் பாதிகாப்பியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மதிமுக தலைவர் வைகோ பேசும் போது, ” ஒரு கொலைகாரத் தலைவர் இந்தியா வாருகிறார். அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்புக் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது டில்லி அரசு. இது எங்களின் மனதை புண் படுத்துகிறது எங்கள் மக்களைக் கொல்ல நீங்கள் ஆயுதம் கொடுத்தீர்கள் படையும் அனுப்பினீர்கள். இப்போது கொலை காரனுக்கு பதவியும் கொடுத்து கௌரவமும் வழங்குகிறீர்கள். இது இந்திய இறையாண்மை என்னும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். இலங்கையில் தமிழர்கள் படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர் முத்துகுமார் கடந்த ஆண்டு தீக்குளித்து உயிரிழந்தார். அவரது மரணம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவரது சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்குக் காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான இடத்தில், முத்துகுமாருக்கு சிலை அமைப்பதை தடுப்பது ஏன்’ என்று கேட்டார் வைகோ, வைகோ அனுமதியளிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பேசிக் கொண்டிருக்க காவல்துறை அதிகாரிகள் வந்து பேசுவதை நிறுத்தி கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற கோர தொண்டர்கள் ஆவேசம் அடைந்து காவல்துறைக்கு எதிராக கோஷமிட, வைகோ தலையிட்டு சமாதானப்படுத்தினார். அத்தோடு அவர் பேச்சையும் நிறுத்த வில்லை பார்வதியம்மாளுக்கு கருணாநிதி செய்த துரோகத்தை அமபலப்படுத்திப் பேச கூட்டம் 11 மணிக்கு முடிந்தது.காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி ஒரு மணி நேரம் மேலதிகமாக கூட்டத்தை நடத்தியதால் வைகோ மீது தமிழக அரசு இன்று வழக்குத் தொடரக்கூடும்.