Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வைகோ மகன் துரை வைகோ மதிமுக தலைமைக் கழக செயலாளர் ஆனார்!

தமிழ்நாட்டின் மூத்த தலைவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுகவின்  தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் முன்னாள் மூத்த தலைவரும் எம்.பியுமான வைகோ திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற தனிக்கட்சியை துவங்கினார். புலிகளின் வலதுகரமாக செயல்பட்ட வைகோவுக்கு துவக்கத்தில் தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கு இருந்தது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர். ஆனால். காலப்போக்கில் மதிமுக அரசியல் களத்தில் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக பெரிய கட்சியாக வளர முடியவில்லை. திமுகவில் இருந்து வைகோவோடு வெளியேறிய முக்கிய பிரமுகர்கள் பலரும் திமுகவுக்கே திரும்பி விட்ட நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் வைகோ திமுக கூட்டணியில் உள்ளார்.

சென்ற ஆண்டு உடல்நலக்குறைவுக்குள்ளான வைகோ முன்னர் போன்று தீவிர அரசியல் களத்தில் இல்லை. இதனால் கட்சி நிர்வாகிகள் வைகோவின் மகனான துரை வைகோவை பதவிக்கு கொண்டு வரவேண்டும் என கூறி வந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூட வைகோ  “என் மகன் அரசியலுக்கு வரமாட்டான்” என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் துரை வைகோவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்ன போதும் வைகோ ஒத்துக் கொள்ளவில்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், இப்போது  அவரை மதிமுகவின் தலைமைக் கழக செயலாளர் பதவிக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள் 106 பேரில் 104 பேர் துரை வைகோவை பதவிக்கு கொண்டு வர ஆதரவளித்துள்ளதாக மதிமுக அறிவித்துள்ளது. மதிமுக துவங்கப்பட்ட பின்னர் அக்கட்சியில் நடந்துள்ள மிக முக்கியமான மாற்றம் இது.

Exit mobile version