Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேளாண் சட்டங்கள்- மோடி பின்வாங்கியது உண்மையா?

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-22 தேதிகளில் அடுத்தடுத்து மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்தியில் ஆளும் மோடி அரசு.இந்த மசோதா கொண்டு வரப்பட்ட ஐந்தே நாட்களில் ஜனாதிபதி இதைச் சட்டமாக்க ஒப்புதலை வழங்கினார்.

இச்சட்டங்கள் தங்கள் வேளாண் கட்டமைப்பை தகர்த்து விடும் என பஞ்சாப் விவசாயிகள் முதலில் போராடினார்கள். பின்னர் அரியானா விவசாயிகள் என போராட்டம் பரவியது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான எத்தனையோ சட்டங்களில் பின்வாங்காத மோடி, காஷ்மீரில் 370-வது பிரிவை சர்வசாதாரணமாக நீக்கிய மோடி விவசாயிகள் போராட்டத்திற்கு பணிந்து வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியது எப்படி?

பிரதமரின் இந்த அறிவிப்பை உடனடியாக ஏற்று போராட்டத்தை முடித்துக் கொள்ளாமல் சட்டம் முழுமையாக நீங்கும் வரை போராடுவோம் என்று விவசாயிகள் சொல்லக் காரணம் என்ன?

கடந்த ஆண்டு துவங்கிய போராட்டம் குளிர், மழை,கோடை என மூன்று பருவங்களையும் கடந்து நடந்து வந்தது. இந்த ஓராண்டில் சுமார் 700 விவசாயிகள் போராட்டக்களத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். 18 பேர் தங்களின் உயிரை மாய்த்திருக்கிறார்கள். இந்த இழப்புகள், தற்கொலைகள் எதற்கும் மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

11 கட்டபேச்சுவார்த்தைகளையும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருடன் விவசாயிகள் நடத்தினார்கள். அதில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது விவசாயிகள் தரப்பாகவும், வேளாண் சட்டங்களில் திருத்தம்  சொல்லுங்கள் செய்கிறோம் என்பது அரசு தரப்பாகவும் இருந்தது. இதற்கிடையில்  தலையிட்ட உச்சநீதிமன்றம் உருப்படியாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் இழுத்தடித்து வந்ததோடு விவசாயிகளோடு பேச வல்லுனர் குழுவை அமைத்தது. ஆனால், அந்த வல்லுனர் குழுவில் இருந்தவர்களே இதன் ஆபத்தை உணர்ந்து பின் வாங்கினார்கள்.

விவசாயிகள் போராட்டம் உருவாக்கிய எழுச்சியும் அவர்களின் உறுதியும் அரசு, நீதிமன்றம் என எதனாலும் உடைக்கப்பட முடியாத ஒன்றாக இருந்தது. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூரில் காரை ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் 9 பேர் கொல்லபப்ட்டார்கள். இந்தக் கொலையில் மத்திய அமைச்சரின் மகன் வேறு வழியில்லாமல் கைது செய்யப்படும் அளவுக்கு நிலமை போனது.

அதன் பின்னர் 14 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை தழுவியது. இமாச்சலப்பிரதேசத்திலும், மேற்குவங்கத்திலும் முழுமையான தோல்வி, பிற மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்பதுதான் அந்த தேர்தல் முடிவுகள் சொன்ன செய்தி.

அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, குஜராத்,உத்தரகாண்ட் என ஐந்து மாநிலங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நவம்பர் இறுதியில் கூட இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அவையை முற்றுகையிடுவோம் என்றார்கள் விவசாயிகள், மேலும் மகா பஞ்சாயத்துகளுக்கும்  அழைப்பு விடுத்தனர்.

இந்த மகா பஞ்சாயத்துகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற இருந்தது. ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் அதிருப்தி நிலவும் நிலையில் வெறும் ராமரை வைத்து அங்கு வாக்குகளைப் பெற்று விட முடியாது என பாஜக நினைக்கிறது. மேலும் மகாபஞ்சாயத்துகள் துவங்கினால் அது அத்தனை எளிதில் முடியாது.தேர்தல் நேரம் மகாபஞ்சாயத்துகளை அகிலேஷ் யாதவும், காங்கிரஸும் உத்தரபிரதேசம் முழுக்க பரப்பி விட்டால் தேர்தலில் வெல்வதே சிக்கலாகி விடும் என்பதால்தான் தற்காலிகமாக ஐந்து மாநில தேர்தல்களும் முடியும் வரை வேளாண் சட்டங்களை ஒத்தி வைக்க பாஜக முடிவு செய்தது.

ஐந்து மாநில தேர்தல்கள் அல்லது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இதே சட்டங்கள் இதே பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ அமலாக்கப்படலாம் என்றே பலரும் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு மோடியின் வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிப்பை விவசாயிகள் மட்டுமல்ல  பொது மக்களும் நம்பவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால், போராடும் விவசாயிகள், அதிருப்தியடைந்துள்ள பொது மக்கள் அனைவரும் இந்துக்கள் என்பதுதான் பாஜகவுக்கு கவலை. இதுவே முஸ்லீம்களாக இருந்திருந்தால் பாஜக பெரிய வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்து முடிப்பார்கள்.

Exit mobile version