Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேதாந்தாவின் வெறிக்கு எதிராக பறை ஒலித்த PARAI – Voice Of Freedom

parai1மன்னார் கடற்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகவே போர்களும் மனிதப்படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறியே காணப்படுகின்றது. இலங்கையில் டாட்டா, வேதாந்தா உட்பட நூறு வரையான இந்திய நிறுவனங்கள் 400 மில்லியன் டொலர்கள் வரை 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பின்னர் முதலிட்டுள்ளன. இலங்கையில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சட்டரீதியாகவும் சட்டத்திற்கு உட்படாமலும் தமது முதலீடுகளை மேற்கொள்கின்றன.

புலிகள் மீண்டும் உயிர்கின்றன என்று ராஜபக்சவும் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று புலம்பெயர் பிழைப்புவாதிகளும் ஒருவருக்கு ஒருவர் தீனிபோட்டு வளர்த்துக்கொள்கின்றனர். ஒருபுறத்தில் ராஜபக்ச தன்னைத் தண்டிக்கப் போகிறார்கள் என்று அனுதாபத்தைப் பெற, மறுபுறத்தில் ராஜபக்சவைத் தண்டிப்பது மட்டுமே தமிழ் மக்களின் தேவை என்று புலம்பெயர் வியாபாரிகள் தொடைகளைத் தட்டிக்கொள்ள பல்தேசிய வியாபாரச் சுரண்டல் யாருக்கும் தெரியாமல் நடந்தேறுகிறது.

இந்திய பிரித்தானிய நிறுவனங்கள் இலங்கையைச் சுரண்டிக்கொழுப்பதில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றுள்ளன. வேதாந்தாவின் இந்திய நிறுவனமான ‘கேயரின் இந்தியாவின்’ கிளையாகவே இலங்கையில் வளங்கள் சுரண்டப்படுகின்றன. ஒரிசாவின் நியாம்கிரி மலையில் இயற்கையின் அரவணைப்போடு வாழ்ந்துவரும் மக்களை அவர்களது நிலங்களை விட்டு வெளியேற்றிவிட்டு 600 ஏக்கர் நிலத்தைப் பறித்து வேதாந்தா வெறியாட்டம் நடத்தியது. வேதாந்த அலுமீனியம் என்ற அதன் மற்றொரு கிளை பழங்குடி மக்களின் இரத்தத்தில் அலுமீனியத்தை அகழ்வதற்கு எதிராக அந்த மக்கள் வீரம்செறிந்த போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்தியாவில் ஏழு பிரதேசங்களில், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கையின் மன்னாரிலும் வேதாந்தா எண்ணை அகழ்வில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் 30 வீதமான பெற்றோலை ‘கேரின் இந்தியா’ நிறுவனமே வழங்கி வருகிறது. இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணையையும் இயற்கை வாயுவையும் கண்டுபிடித்துள்ள வேதாந்தா அதனை அகழ்ந்தெடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் வன்னி இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பிரித்தானிய அரசு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் மட்டும் இலங்கைக்கு வழங்கவில்லை. வேதாந்தாவின் இணை நிறுவனமான கேயரின் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மன்னாரில் பெற்றோலிய அகழ்வு வேலைகளுக்கான அனுமதியையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தது.

மன்னார் கடற்படுக்கையில் 74 மில்லியன் பரல்களுக்கு இணையான பெற்றோலிய வளத்தை கேயரின் கண்டுபிடித்துள்ளது. 2017/18 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து எண்ணை அகழ்வு விற்பனைக்கு வரும் என்கிறது வேதாந்தா நிறுவனம்.

இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக்குழுவாகப் புலிகளைப் பயன்படுத்திக்கொண்ட பிரித்தானிய அரசிற்கு இலங்கை அரசைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர் புலிகளின் தேவை அற்றுப்போனது. இதனால் புலிகளையும் மக்களையும் அழித்து ராஜபக்ச என்ற குரூரமான சர்வாதிகரியை ஆட்சியில் அமர்த்தியது. இன்று ராஜபக்ச தனது மூச்சுவிட்டால்கூட போர்க்குற்ற விசாரணை செய்வோம் என மிரட்டி தனது பல்தேசிய வியாபார நிறுவனங்களைச் சுரண்ட அனுமதித்துள்ளது. வேதாந்தா மட்டுமல்ல, இலங்கையில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் வியாபாரத்தை பிரித்தானிய நிறுவனங்கள் முதலிடம் வகிக்கின்றன. மருத்துவத்தைத் தனியார் மயப்படுத்த பிரித்தானியாவும் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் இந்திய பிரித்தானிய நிறுவனங்கள் முன்னணியில் திகழ்கின்றன. இலங்கையில் போரை நடத்தியதன் பின்னணியில் உலக நாடுகள் பங்களித்திருப்பதை யாரும் நிராகரிக்கவில்லை. உலக நாடுகளின் அதிகாரவர்க்கத்தை ‘சர்வதேச சமூகம்’ என விழிக்கும் தமிழ்த் தலைமைகள், அந்த சர்வதேச சமூகம் மக்களை அல்ல பல்தேசியப் பண முதலைகளையே காப்பாற்றும் என்பதை இப்போது அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் அரசியல் செயற்பாட்டாளரான அருந்ததி ராய் கூறுவது போல இலங்கையில் நடைபெற்ற அழிப்பு பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கானது.

இலங்கையை மையமாகக் கொண்ட மற்றொரு பல்தேசிய வியாபார நிறுவனமான ஹேலிஸ் இற்காக வெலிவேரிய என்ற சிங்களக் கிராமத்தில் அப்பாவி மக்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். மன்னாரில் பெற்றோலிய அகழ்விற்கு ஹேலிஸ் கேயரின் உடன் இணைந்து செயற்படுகிறது.

நேற்று-01.07.2014- பிரித்தானியாவில் பறை- சுதந்திரத்திற்கான குரல் இளைஞர்கள் வேதாந்தா நிறுவனத்தின் முன்னால் போயில்-வேதாந்தா அமைப்புடன் இணைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

மன்னாரில் சூறையாடப்படும் நமது வளங்களுக்காகவும் மக்களுக்காகவும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்தேசிய வியாபார வெறியர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் பறை முழங்கியது. இவர்களோடு மேலும் சில தமிழர்களும் இணைந்து கொண்டார்கள்.

ஏகாதிபத்தியங்கள் தொடர்பாகவும் பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பாகவும் புதிய சந்ததியிடம் ஏற்படும் விழிப்புணர்வின் எதிரொலியாகப் பறை ஒலித்தது. வேதாந்தாவிற்கு எதிராக மட்டுமல்ல மக்களைச் சூறையாடி போர்களைகளதும், இனப்படுகொலைகளதும் பின்புலத்தில் செயற்படும் ஏனைய பல்தேசிய கோப்ரட் வியாபார நிறுவனங்களுக்கு எதிராகவும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் விரிவடையும்.

Exit mobile version