Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேடந்தாங்களில் அதிரும் பறை : மணி ஸ்ரீகாந்தன்

‘நிலவை பறையாக்கு – வீரண்ணா
சூரியனில் சூடேற்று – வீரண்ணா
மனுவின் முதுகெழும்பில் – வீரண்ணா
சிண்டு குச்சி அடிகுச்சி செய் – வீரண்ணா
அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்தி – வீரண்ணா
அடிச்சி நொறுக்கு சாதியத்தை – வீரண்ணா
பெரியாரை முன்னிருத்தி – வீரண்ணா
பெயர்த்தெடு மதவாதத்தை – வீரண்ணா
விழுகிற அடிதனிலே – வீரண்ணா
வீழட்டும் சாதி மதம்.
சஞ் சஞ் சஞ்
சஞ் சனக்கு – வீரண்ணா
சமத்துவத்த முழங்கு – வீரக்கா…………’

மணிமாறன்

என்ற பாடல் பறை இசையோடு வேடந்தாங்கலில் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரத்திலிருந்து 48 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால் வேடந்தாங்கல் வரும். தமிழகத்தின் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் இங்கே அமைந்திருப்பதால் வேடந்தாங்கலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த வேடந்தாங்கலில் தான் பறையொலியால் சாதிகளை விரட்டி அடிக்க மிகப்பெரிய பயிற்சி வேள்வி ஒன்றை தமிழகத்து பறை இசைக்கலைஞர் மணிமாறன் நடாத்திக் கொண்டிருந்தார்.

பறவைகளின் கீச்சிடும் இனிமையான ஓசைகளை வேடந்தாங்கலில் கேட்டுக்கொண்டே நடந்தால் மணிமாறனின் பறையொலி செவி வழியே உள்நுழைத்து நம்மை ஆடச் செய்யும் விந்தையைக் காணலாம்.

அன்று காலை எமது வானவில் சிறப்பு சந்திப்புக்காக காஞ்சிபுரம் வேடந்தாங்கலில் நடைபெறும் பறை இசைப் பயிற்சிப் பட்டறைக்குள் நுழைந்தோம். சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களுமாக கலந்து பறை இசையை ஆர்வத்தோடு இசைத்துக் கொண்டிருந்தார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் சில பறைகள் காய்ந்து முறுக்கேறிக் கொண்டிருந்தன.

கலைக்குழுவில்

“நான் ஆறாவது பெயிலுங்க. எங்க அப்பாவுக்கு கலைகள் பற்றி எதுவும் தெரியாது. ஆனா எங்க தாத்தா ஒரு தெருக்கூத்துக் கலைஞர். அவரு பெயர் சுப்ரமணியம். ஆனா பறை இசையை நான் அவரிடம் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு கலை சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம் என்றால் அது சாவு வீடுகள் தான். நானும் என் நண்பர்களும் சாவு வீடுகளில் விடிய விடிய கானா பாடல்களைப்பாடி பிணத்துக்கு முன்பாக டோலக் வாசிப்போம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் கானா கச்சேரி விடியற் காலையில்தான் முடிவடையும். கச்சேரி முடிந்த உடன் எங்களுக்கு பணம் தர மாட்டார்கள். அதனால் பிணத்துக்கு முன்பாக அமர்ந்து பணம் வரும் வரை காத்திருப்போம். அப்போது அடுத்த ஷிப்டுக்காக பறை இசைக்கலைஞர்கள் பறைகளோடு வருவார்கள். அவர்களும் எனக்கு நண்பர்கள்தான். “இன்னும் காசு தரல மச்சான் லேட் ஆகும் போல” என்று நான் சொல்ல பறை ஆட்டம் தொடங்கும். நானும் நேரத்தைப் போக்க அந்தப் பறையை வாங்கி ரெண்டு தட்டு தட்டுவேன். இப்படித்தான் பறை மீது எனக்கு ஒரு காதல் பிறந்தது.

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு பிணம்தான் வாத்தியாரு!” என்று தம்மைப் பற்றி ஒரு அறிமுகம் செய்தார் மணிமாறன். இப்படி ஒரு அறிமுகம் செய்துகொள்ள இந்த மனிதருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் என மனதுக்குள் நான் வியந்தபோதே, என் சிந்தனையில் மணிமாறன் விஸ்வரூபமெடுத்து நின்றார். நம்நாட்டில் இப்படி எவருக்காவது சிந்திக்கத்தான் தோன்றுமா?

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட மணிமாறனின் மனைவியின் பெயர் மகிழினி. இவர் ஒரு நாடறிந்த பாடகி. கும்கியில் ‘சொய் சொய்’ பாடலைப் பாடியவர் என்றால் வாசகர்களுக்கு இது கூடுதல் தகவலாக அமையும்.

“மகிழினியை மணம் முடித்த பிறகு என் வாழ்விடம் இந்த வேடந்தாங்கலாக மாறிப்போச்சுங்க!” என்கிறார் மணிமாறன். அப்போ நீங்களும் வேடந்தாங்கலுக்கு வந்த பறவை மாதிரிதானா….? என்றதும் மணிமாறன் சிரிக்கிறார்.

சிவகங்கையில் அழகர்சாமி வாத்தியாரிடம் பறை நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தாராம் மணிமாறன். இவரை பறை அடித்து காட்டும்படி அழகர்சாமி வாத்தியார் சொல்லியிருக்கிறார். இவர் சிம்பு குச்சியை எடுத்து இரண்டு தட்டு தட்ட அதைக் கேட்டு உற்சாகமான வாத்தியார்,

“உனக்கு பறை இசையில் சொல்லிக் கொடுக்க எதுவும் இல்லை நீ தவில் கற்கப்போ” என்று கூறினாராம்.
“பிறகு அவரிடம் பறை நுணுக்கங்களை கற்று இன்று அந்த கலை அழிந்து விடாமல் காக்கவும் சாதி வேற்றுமையை துரத்தவும் இன்று நான் பறையை தோளில் சுமக்கிறேன்” என்று சொல்லும் மணிமாறனின் பறை முழக்கம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பெயர் சொல்லக்கூடிய பறை இசைக் குழுக்களில் மணிமாறனின் புத்தர் கலைக்குழு முதன்மை வகிக்கிறது.

தமிழகத்தின் பல இடங்களில் பறை இசைப் பயிற்சி பட்டறைகளை நடாத்தி வரும் மணிமாறனின் பயிற்சி வகுப்புக்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பறையின் நுட்பங்களை முறையாக பயின்று வெளியேறி இருக்கிறார்களாம். மணிமாறனின் பயிற்சி வகுப்புகளில் கற்கும் மாணவர்களின் பெரும்பாலானோர் நல்ல கல்வித் தகமையை கொண்டவர்களாகவும் அலுவலகங்களில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பதை நாம் நேரில் கண்டு கேட்டறிந்தோம்.

‘எமது பறையொலி சாவுக்கானது அல்ல வாழ்வுக்கானது!

எமது பறை முழக்கம்
சாமியாடுவதற்கல்ல சாதிகள் ஆட்டம் காண்பதற்கு!

ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்
பறைகளல்ல இந்திய சாதிகள்!’ என்ற செய்தியையே மணிமாறனின் புத்தர் கலைக்குழு உரத்துச் சொல்லி வருகிறது….

மணிமாறனின் புத்தர் கலைகுழு, ‘சாகும் வரை பறை இசைப்போம். ஆனால் சாவுக்கு பறை இசைக்க மாட்டோம்! சாதியை சாகடிக்காமல் விடமாட்டோம்’ என்பதை தமது குழுவின் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. ஆதியில் பறை சாவுக்கு முழங்கியதால்தான் அது கௌரவம் இழந்தது என்பதும் ஆதிக் கருவி சாதிக் கருவியாக மாறிவிட்டது என்பதும் மணிமாறனின் வேதனை.

ஆனால் ஏன் ஆதித் தமிழன் பறையை சாவுக்கு இசைத்தான் என்பதைப் பற்றி நாம் தேடிப் பார்க்க வேண்டாமா? ஒரு இறந்த பிணத்தின் முன் மென்மையான வீணையையோ, வயலினையோ வாசிப்பது, அச்சூழலுக்கு பொருத்தமாக இருக்காது என்பதோடு பிரிவின் சோகம் மேலும் வெளிப்பட்டு நிற்கும். இதற்கு அப்பால் ஏன் பறையை அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சமூக ஆர்வளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள்.

பறையின் ஒலியைக் கேட்டும் ஒரு மனிதன் இயங்கவில்லை அல்லது அசையவில்லை என்றால் அந்த மனிதனின் இறப்பு உறுதி செய்யப்படுகிறது. அதனால் இதை ஆதி மனிதன் கண்டுபிடித்த ‘ஸ்டெத்தஸ் கோப்’ கருவி என்றும் ஆய்வாளர்கள் பறை ஏன் மரணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதற்கான காரணத்தைச் சொல்கிறார்கள். இதில் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தாலும் இன்றைய வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது அந்தக் காரணம் உண்மை என்று கொள்ளலாம்.

மருத்துவ தொழில்நுட்பங்கள் வளராத அந்தக் காலத்தில், பூலோகம், கீழோகம் என்று கதை விட்டுக் கொண்டிருந்த பெரிசுகள் தமக்கு முடியாத காலத்தில் தாம் இறந்து விடுவோம் என்ற சிந்தனையிலேயே மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த சமயத்தில் பறையை அடித்தால் அவர்கள் மயக்கம் கலைந்து எழும்பி விடுவார்களாம். இன்றும்கூட பத்திரிகை செய்திகளில் இறந்தவர் உயிர்த்தெழுந்தார் என்றும் பாடையில் வைக்கப்பட்டவர் எழும்பி தண்ணீர் கேட்டார் என்றும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கால தேவன் தன்மை தவறுதலாக அழைத்தான் என்றும் பிறகு பச்சை உருண்டை சோறு கொடுத்து வானத்திலிருந்து உருட்டி விட்டான் என்றும் அப்படி ‘உயிர்த்து’ வந்தவர் கரடி விடும் கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.

பாம்பு தீண்டிவர்களில் அனேகமானவர் இப்படி மயக்க நிலையில் இருந்து மீண்டு வருவது சாதாரணம். ஆனால் இந்த உயிர்த்தெழுதல் கதைகள் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் இலங்கையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த உடம்பை ‘எம்பாம்’ செய்து விடுகிறார்கள். மூன்று நான்கு நாட்கள் வைத்திருந்த பின்னரே அடக்கம் அல்லது எரியூட்டல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் (எம்பாம்) முறை இன்னும் நடைமுறையில் இல்லை. அதனால் மரித்தவர் எழலாம் என்ற நம்பிக்கையில் இன்றும் சவ ஊர்வலங்களில் பறை இசைத்து வருகிறார்கள். பறை வெறுமனே இசைக்கருவியாய் நின்று விடாமல், உளவியல் ரீதியானது. மருத்துவ தொடர்புடையது என்பதை வரலாற்றிலிருந்தும் நடைமுறை வாழ்வியலில் இருந்தும் நாம் புரிந்து கொள்கிறோம்.

சவ ஊர்வலங்களில் வேடந்தாங்கல் புத்தர் கலைக்குழு பறை இசைப்பதில்லையே ஏன் எப்படி? என்ற கேள்வியை மணிமாறனிடம் வினவினோம்.

“பிணத்தை சுற்றியுள்ள சுகாதாரமற்ற சூழலையும், சாதியவாதிகளின் வக்கிரத்தையும் பறை இசைக் கலைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதோடு ‘சாவுதப்பு’ என இக்கலை மலினப்படுத்தப்படுவதற்கு இது காரணமாகி விடுகிறது. இதனால்தான், பறை இசையை அதன் இன்றைய தவறான முகவரியில் இருந்து மீட்டு, புதிய கௌரவமான முகவரியை கொடுப்பதற்காகவே நாம் சாவுக்கு பறை இசைக்க மறுக்கிறோம். அதற்கு மாறாக பறையை ஓர் எழுச்சியின் குறியீடாக, விடுதலையின் அடையாளமாக கையாளுகிறோம். ஆகவேதான் செல்லும் இடமெல்லாம் உரத்து முழங்குகிறோம்! பறை சாற்றுகிறோம்! பறை சாவுக்கானது அல்ல, வாழ்வுக்கானது…”என்று ஆவேசமாக பேசுகிறார் மணிமாறன்.

புத்தர் கலைக்குழுவின் பறை பயிற்சியரங்கில் பங்குபற்றுபவர்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி காணப்பட்டனர். அவர்களின் தோள்களில் ஒரு பறை தொங்கிக் கொண்டிருந்தது. இளவயது பெண்களும், ஆண்களும் காய்ந்த வைகோலை குவித்து தீமூட்டி பறையை காய்ச்சி அதற்கான நாதம் வரும்வரை தட்டி முறுக்கேற்றியதையும் அவதானித்தோம். பறை இசைக்கு மேலும் வலு சேர்க்கும் ‘பெருந்தமுரு’, ‘தூம்பு’ போன்ற கருவிகளையும் இளைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள். ‘பெருந்தமுரை’ தோளில் மாட்டியபடி தாளத்திற்கு ஏற்ப உடம்பையும் அசைத்து ஆடிக் கொண்டிருந்த ஒருவரை சந்தித்துப் பேச்சுக் கொடுக்க அவர் தன் பெயர் எழிலன் என்றார். மக்கள் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுவதாகவும் கூறினார். என்ன மக்கள் டீவியிலயா….? என்றதும், ஏன் தொலைக்காட்சியில் வேலை பார்த்தால் பறை இசைக்கக் கூடாதா? என்று எம்மை எதிர் கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்தார் எழிலன்.

பறை வகுப்பு

“நான் மூன்று நாள் விடுப்பில் வந்து இந்த பறை இசையை கற்றுக்கொள்கிறேன் நான் தற்போது சென்னையில் வசித்தாலும் என் சொந்த ஊர் திருநெல்வேலி சங்கரன் கோவில், வீரணாபுரம் என்ற கிராமம். எங்கள் கிராமம் தமுரு செட்டு, ஆழியா ஆட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு ரொம்பவும் பெயர் பெற்றது. சின்ன வயசில் இருந்து எனக்கும் அந்த மாதிரியான கலைகளை கற்பதற்கு ரொம்ப ஆசை. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போ கிடைக்கவும் வந்துட்டேன். எனக்கு இந்த பறையின் நுணுக்கங்களை படிக்க மூன்று நாள் பயிற்சி போதாது. என்னோடு படிக்கும் ஒரு குட்டிப் பையன் மணிமாறனின் பயிற்சி பட்டறைக்கு தொடர்ந்து ஆறு வருடங்களாக வர்றானாம். இன்னும் முழுமையாக கற்கவில்லை என்று சொல்லுறான். மேலும் மணிமாறன் என்கிற பெரிய பறை விற்பனரிடம் நாங்களும் பறை படிச்சோம்னு சொல்லுறது நமக்கு பெருமை..” என்று தூய தமிழில் பேசும் எழிலன் ஒரு தமிழ் பற்றாளர்.

“பறை ஒரு தீண்டதகாத கருவி என்ற கருத்து மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் இருந்தது. அது இப்போது இல்லை. நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சென்னையில் அந்நிய கலாசார கலைகள் ஊடுருவினாலும் பறை இசைத்தால் மக்கள் கூடுவதை தவிர்க்க முடியாது. பறை சத்தம் கேட்டால் ஏறெடுத்துப் பார்க்கவே செய்வார்கள். ஏனெனில் அது உயிரில் கலந்த ஒரு இசை. ஜனவரியில் நிகழும் சென்னை சங்கமத்தில் கூடும் மக்கள் கூட்டமே அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எனவே தமிழனின் ரத்தத்தில் அவனுடைய மரபு இசை கலந்திருக்கிறது. அவன் அதை இன்னும் ரசிக்கிறான்” என்ற எழிலனின் கருத்தை கேட்டுக் கொண்டே நடந்தோம்.
“சாதி வெறி மீதான காதலை இடை மறிப்போம் சாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிப்போம்” என்பது புத்தர் கலைக்குழுவின் முழக்கங்களில் ஒன்று.

“இந்த முழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எமது குழுவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக, சாதி மறுப்பு (அதாவது சாதிக்கு வெளியே சென்று திருமணம் செய்வது) திருமணங்களை செய்யும் எமது தோழர்களுக்கு புத்தர் கலைக்குழு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனாலும், எமது நோக்கம் சாதி மாறி திருமணங்களை செய்து வைப்பது மட்டுமல்ல, காலா காலமாக இந்தப் பறை சாவுக்கானது, சாதியை அடையாளப்படுத்துவது என்று ஓரங்கட்டி வைத்திருந்தார்கள். அந்த பறையை உயர் சாதியினராகத் தம்மைக் கருதும் வன்னியரும், முதலியாரும் ‘இது நம்முடைய இசைக் கருவி’ என்று சொல்ல வைப்பதுதான் எமது முக்கிய நோக்கம்” என்கிறார் மணிமாறன். அவரது பேச்சில் நம்பிக்கை பளீரிடுகிறது.

“எமது பறை இசை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களில் இருபத்தைந்து சதவீதமானோர் சாதி இந்துக்கள்தான். இதுவும் எமக்குக் கிடைத்த வெற்றிதான். பறை இசை கற்க வரும் ஆர்வலர்களிடம் ‘நீங்கள் என்ன குலம், என்ன சாதி என்று நான் ஒருபோதும் கேட்பதில்லை. ஆனால் சமூகத்தால் நீங்கள் என்ன சாதி என்று கேட்பதுண்டு. அதற்குக் காரணம் உண்டு.
சாதி என்பது என் முகத்தில் உமிழ்பட்ட எச்சில் என்றே நான் கருதுகிறேன். அதை துடைத்து விட்டுத்தான், நான் வெளியே வந்திருக்கிறேன். அதனால், நான் சாதி பற்றோடு அதைக் கேட்கவில்லை. எந்தெந்த சாதிக்காரர்களெல்லாம் பறை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம்.

திவ்யா – இளவரசன் காதலால் ஏற்பட்ட தர்மபுரி சாதிக் கலவரம் முடிவடைந்து அதன் கண்ணீர் கூட காய்ந்திருக்காது…. அந்த சமயத்தில்தான் வேடந்தாங்களில் எமது பறை இசை பயிற்சிப் பட்டறை துவங்கியது. அந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த ஆறு வன்னியரும் – ஆறு பறையரும் கை குலுக்கி நட்பு பாராட்டியதோடு, உணவையும், உடையையும் பகிர்ந்து கொண்டார்கள். பறை இசையால் சாதிகளை விரட்டவும் முடியும் என்பதை இந்த சம்பவம் பறை சாற்றுகிறது” என்று மணிமாறன் சொன்னபோது பூரிப்பு முகமெங்கும் அப்பிக் கிடந்தது.

மணிமாறன் புத்தர் கலைக்குழு கோயில் திருவிழா, திருமண வீடுகள், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு பறை முழக்கம் செய்வதால், பறையைப் பற்றி தெரிந்த தமிழ் பற்றாளர்கள் மட்டும்தான் உங்களை விஷேசங்களுக்கு பறை வாசிக்கும் படி அழைக்கிறார்களா? என்று எமது சந்தேகத்தை கேட்டோம்.

“தமிழ் தேசியம் பேசுவோர் மட்டுமே எம்மை அழைக்கிறார்கள் என்றால் பறை இசை அழிவுப் பாதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால், நிலமை அப்படி அல்ல. பிராமணர் வீட்டிலும் சாதி இந்துக்கள் வீட்டிலும் நாம் பறை இசைக்கிறோம். அவர்களாகவே எம்மை அடையாளம் கண்டு அழைக்கிறார்கள். அங்கே தான் எமது வெற்றி தங்கியுள்ளது. ஏனெனில் பறை இசையை மறுபடியும் அதே சமூகத்திடமே கொண்டு சென்று கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் விரிய வேண்டும். அனைத்துத் தமிழர்களின் இசைக்கருவியாக அது மாற வேண்டும். மேலும் எமது குழுவில் நிறைய இளம் பெண்கள் பறை இசைக்கிறார்கள். அவர்களை கச்சேரிகளில் மட்டுமே பறை இசைக்க அனுமதிக்கிறேன். தெருக்களில் வாசிக்க அனுமதிக்க முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால், பெண்கள் மீதான இந்த சமூகத்தின் பார்வை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது மாற இன்னும் கொஞ்சம் காலம் செல்லும்….” என்று சொல்லும் மணிமாறனின் வெறுப்பு இந்த சமூகத்தின் மீதுதான்.
பறை பயிற்சிக்கு வந்திருந்த பெண்களில் சிலர் பறையை அனுபவித்து இசைத்துக் கொண்டிருந்த அழகு எம்மை அவர்கள் பக்கமாக இழுத்துச் சென்றது.

சென்னை கல்லூரி மாணவிகளான கீர்த்தனா, சங்கீதா, காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த திலகவதி, ஹேமாவதி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்கி இருந்தார்கள். தெருக்கூத்து கலைஞரான திலகவதி பறை இசைக்கு அடவு கட்டி ஆடிய ஆட்டம் பிரமிக்க வைத்தது.

“நாங்க தெருக்கூத்து கலையை கட்டைக் கூத்துண்ணுதான் அழைப்போம். அந்தக் கட்டைக்கூத்து கலையை நான் முறையாகக் கற்றுக்கொண்டேன். இப்போது சென்னையில் ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அங்கே சிறுவர்களுக்கு கூத்துக் கலை பற்றியும் சொல்லிக் கொடுக்கிறேன். அதனால் எனக்கு பறை இசை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் மணிமாறனிடம் இப்போது பறை இசையை கற்க வந்திருக்கிறேன்” என்று திலகவதி நிறுத்த கீர்த்தனா தொடர்ந்தார், “எனக்கு சின்ன வயதில் இருந்தே இந்த கலைமீது ஆர்வம் அதிகம். ஆனால் கற்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கு. அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவர் சொல்லி முடிக்க அடுத்ததாக உரையாடலில் இணைந்து கொண்டவர் சங்கீதா.
“என்னையும் கீர்த்தனாவையும் எங்கள் நண்பர்கள்தான் ஊக்கப்படுத்தி பறை இசைப்பதை கற்கும்படி அனுப்பி வச்சாங்க,
நாங்க கற்றுக்கொண்டு அவங்களுக்கும் கற்றுக்கொடுக்கணும” என்று கீர்த்தனாவும் சங்கீதாவும் சொன்னப் போதும் அவர்களின் குரலில் இசையால் சாதிக்கப் போகிற ஒரு வேகம் புயலாக எம்மை கடந்து சென்றது.
“நான் நல்லா பாட்டு எழுதுவேன், பாடுவேன் இன்றைக்குத்தான் மணிமாறன் அண்ணன் கிட்டே பாடிக்காட்டினேன், பாராட்டினார்” என்ற போது ஹேமாவதி குருவின் பாராட்டில் ரொம்பவே உச்சி குளிர்ந்து போய்தான் இருக்கிறார் என்பதை அவரின் ஜிலீர் பேச்சிலிருந்து புரிந்து கொண்டோம்.
“நான் ஹவுஸ் வைப்பா இருக்கேன். என் வீடு காஞ்சிபுரம் தண்டரைப் பேட்டையில இருக்கு. என் கணவரோட முழு ஆதரவும் எனக்கு இருக்கிறது. அவர்தான் என்னை பறை பழக அனுப்பி வைச்சார்! கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் நான் கற்று வந்த பறையை இசைத்துக் காட்டச் சொல்லி ரசிப்பார்” என்று ஹேமாவதி சொல்லும் போது அவரின் முகத்தில் வெட்கம்….
‘நெருப்புச் சூட்டில் பறை மேளம்
நேசத்தோடு சிரிக்குது
நெஞ்சு கூட்டில் உந்தன் முகம்
நெதமும் என்னை வதைக்குது
வட்ட நிலா வட்டப்பறை வட்டப்பொட்டு
அதை வச்சிட மாட்டியா என்னை தொட்டு’

என்ற மணிமாறனின் பாடல் வரிகளோடு, மகிழினியின் குரலும், பறையோசையும் காஞ்சிபுரம் வேடந்தாங்கல் பகுதியை அதிரவைத்துக் கொண்டிருக்க,

புத்தர் கலைக்குழு என்ற பெயர் எப்படி வந்தது என்ற எமது சந்தேகத்தை மணிமாறனிடம் கேட்டோம்.
“நான் வாழ்கிற இந்த காஞ்சிபுரம் மாவட்டம் பௌத்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டிருப்பதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளனகாஞ்சி சங்கரமடம் முற்காலத்தில் பௌத்த பீடமாக இருந்ததாகவே சொல்கிறார்கள். அதோடு உலகத்தினுடைய மானுட சிந்தாந்தத்தை வலியுறுத்திய தலைவனாக புத்தர் விளங்குகிறார்.

இன்றைக்கு மணிமாறன் பேண்ட், சட்டை போட்டு ஏன் நீங்க்ள கூட காலுக்கு காலணி போட்டு நாற்காலியில் சரிசமமாக நாம் உட்கார்ந்து பேசுவதற்கு டாக்டர் அம்பேத்கார்தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் இன்று தமிழ் நாட்டில் ஒரு மூலையில் செத்த மாட்டுக்கு தோல் உரித்திருப்பேன். அல்லது மலம் அள்ளியிருப்பேன். அந்த மகத்தான புத்தனை தமது ஆசான் என்கிறார் அம்பேத்கார். அம்பேத்காருக்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். அவரின் உறவினர் பெயர் ரெட்டை மலை சீனிவாசன். அவரின் வீடு இங்கிருந்து (வேடந்தாங்கல்) 7 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறது. இப்படி யார் யாரெல்லாம் சாதி என்கிற சிறைக்கம்பியை உடைத்து என்னை வெளியே எடுத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் புத்தனை பிடித்திருக்கிறது. அதனால் எனக்கும் பிடித்தது. இங்கே இருக்கிற இசைக்குழுக்கள் மாரியம்மா, செல்லியம்மா, ஒண்டி வீரன், கருப்புசாமின்ணு பெயர் வைக்கும் போது நான் ஏன் புத்தர்ணு வைக்கக் கூடாது?

நிறையப் பேர் ஜீசஸ் கலைக்குழுன்ணு வச்சிருக்கலாமே என்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவுக்கு புத்தன் தாத்தா. இந்திய பெருநிலத்தில் பிறந்தவன். இயேசு இந்தியாவுக்கு வந்த போது பௌத்தத்தை அறிந்து கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதோடு புத்தன் என் சொந்தக்காரன். என் பாட்டன். அவரின் பெயரை வைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று மணிமாறன் சொன்ன போது அவரின் முகத்தில் ஒரு பூரிப்பு பிரகாசமாக…

நீங்கள் கடந்து வந்த பாதையில் அவமானங்களை சந்தித்திருக்கிறீர்களா…? என்று கேட்டோம்.

“நான் கடந்து வந்த பாதை கரடு முரடானது. அதில் அவமானங்கள்தான் அதிகம். அவமானத்தின் அடையாளம் என்று ஆதி கருவியை சாதிக் கருவியாக ஒதுக்கிய இந்த சமூகத்திடமே மீண்டும் அந்த பறையைக் கொண்டு சென்றிருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு அவமானங்களைக் கடந்திருப்பேன்!” என்று சொல்லி பெருமூச்சோடு நிறுத்திய மணிமாறன் சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

“அசிங்கத்தையும் ஆபாசத்தையும் பேசினால் ஆயிரம் பேர் கூடுவார்கள் கேட்பதற்கு. ஆனால் அம்பேத்கர் பற்றி பேசினால் இரண்டு தலைதான் தெரியும். எனினும் நான் இந்த சமூகத்தை விடவில்லை. என்னை விட்டால் இவர்களுக்கு ஒரு நாதியும் இல்லை என்று நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கிறேன். அவமானங்களால் நான் சோர்ந்து விடவில்லை” என்று சொல்லும் போது அந்த வார்த்தைகளில் இந்த பாழாய்ப் போன சமூகத்தை சிந்தனையோட்டத்தை மாற்றத் துடிக்கும் ஒரு வெறி தீயாக எரிவதைப் பார்க்க முடிகிறது.

புத்தர் கலைக்குழுவின் பறை இசைப் பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் முதல் பயிற்சியே, மாட்டுத் தோலை தொட்டு எடுத்து வட்டத்தில் வைத்துக் கட்டுவதுதான்.

“இறந்த மாட்டின் துர்நாற்றம் அடிக்கும். தோளிலிருந்து பிறப்பதுதான் பறை என்பதையும், அதனை கட்டுவது எவ்வளவு சிரமமானது என்பதையும் புரிய வைப்பதற்காகத்தான் அப்படி ஒரு பயிற்சியைக் கொடுக்கிறேன். அந்தப் பாடத்தை பூர்த்தி செய்த பிறகுதான் அவர்கள் கையில் சிண்டு குச்சியும், அடிக்குச்சியையும் கொடுத்து பறை முழங்க வைப்போம்” என்று சொல்லும் மணிமாறனுக்கு பக்க பலமாக அவரின் மகன்கள் இனியனும், சமரனும் இருக்கிறார்கள். பறை இசையில் அப்பாவை மிஞ்சு விடுமளவுக்கு பறையை பிய்த்து உதறுகிறார்கள்.

“பறையில் எந்தளவிற்கு அடி, அடி என்று சொல்கிறேனோ அந்தளவிற்கு படி, படின்ணு சொல்கிறேன். அதே மாதிரி நன்றாக படிக்கிறார்கள். படிப்பில் பட்டம் பெற்ற பின்பும் பறை இசைப்பார்கள்” என்று நம்பிக்கையோடு பேசும் அவர் பறை ஆட்டத்திற்கான சில தாள வகைகளையும் குறிப்பிட்டார்.

‘தக்கு உக்கு தா
தக்கு உக்கு தக்கதின்
ஜங் ஜங் நகுரி நகா’
இவற்றோடு ஒத்தையடி என்பது,
‘தும் தக்கு…..தா…..தக்கு
தா தக்கு…. தா…. ஜன ஜன
தும் தக்கு….. தா…..தக்கு…..தா’
அவரின் தாளக்கட்டு
கேட்பவரை ஆட்டம் போடத்தான் செய்கிறது.

எமது இந்த உரையாடலுக்கு இடையில் இணைந்து கொண்டவர், வனவேந்தன். ஓசூரிலிருந்து தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

“நான் அண்மையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு போயிருந்தேன். அங்கே விடுதலை பத்திரிகையை பார்த்த போது அதில் மணிமாறனின் பறை இசை பற்றிய விளம்பரம் வந்திருந்தது. இந்த இசையை எனக்கு பிறகு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் என் மகனையும் அழைத்து வந்தேன்” என்று சொல்லும் வனவேந்தன் ஒரு பெரியாரிஸ்ட். அதாவது பகுத்தறிவுவாதி.
பறை கற்க வந்திருந்த மதுரையை சேர்ந்த சமுத்திர பாண்டியன், “நான் இப்போ இரண்டாவது தடவையாக பறை இசை படிக்க வந்திருக்கேன். வேப்பேரி

பெரியார் திடலில் நடந்த பறை வகுப்பிலும் கற்றேன். இன்னும் நிறைய பறை நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆர்வத்தோடு பேசும் அந்த இளைஞனை பார்க்க எமக்கு வியப்பாக இருந்தது. தமிழகத்தில் மணிமாறன் செய்து வரும் சேவையை பாராட்டியபடி வேடந்தாங்கலில் இருந்து பறந்தோம்.

நன்றி:தமிழ் வம்பன்

தொடர்புடைய பதிவுகள்:

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? : மருதமுத்து

Exit mobile version