இலங்கை இராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் வழங்கியமையின் விளைவினை (மீண்டுமொரு முறை) வெலிவேரிய மக்கள் அனுபவித்துள்ளனர், கண்டுள்ளனர். வழமையாகவே மூன்றாம் உலக நாடுகளில் இராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் வழங்குகின்றமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் நிருணத்துவ குழாமின் அறிக்கையின் பிரகாரம் யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை இராணுவம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் யுத்த நேரத்தில் இராணுவத்தினர் உயிரிழப்புகள் ஏற்படுத்தியமை, யுத்த குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் தெரிவித்திருக்கும் நிலையில்; வெலிவேரியவில் மக்கள்; தமது அடிப்படை தேவை, உரிமையை பெற்றுக்கொள்ள நடாத்திய பேரணி மீது அல்லது அமைதிப் போராட்டத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டு அப்பாவி உயிர்களை கொலை செய்தமையை மலையக சிவில் சமூகம் கண்டிக்கின்றது.
இது காட்டுமிராண்டித்தனமான, மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் சட்டமுரணான அதிகாரமேவலாகும் எனவும் சுட்டிக்காட்டுகின்றது. ஈடு செய்ய முடியாத இழப்பிலில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த துயரத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மக்கள் தமக்கான தேவைகளை உரிமைகளை பெற்றுக் கொள்ள, போராட, தமது கருத்தினை வெளிப்படுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் வாழ்வதற்கு உரிமையுடையவர்கள். இராணுவத்தினர் மக்களை பாதுகாப்பதற்கான மக்களிடம் ஊதியம் பெறும் சேவையாளர்கள் என்பதையும், சனநாயக நாட்டில் இராணுவத்தினர் மக்களின் போராட்டங்களில் தலையிடுவது மிகவும் பாரதூரமான விளைவினை ஏற்படுத்தும் என்பதை உலக நாடுகள் பலவற்றில் நாம் கண்டுள்ளோம் எகிப்து, லிபியா என பல நாடுகள் அதனை எம் கண்முன்னே படம்பிடித்து காட்டியுள்ளன என்பதை மலையக சிவில் சமூகம் ஞாபகப்படுத்துகின்றது. சனநாயக உரிமைகளை அடக்கவும் மக்களின் உரிமைகளை பறிக்கவும் அரசாங்கத்திற்கோ இராணுவத்திற்கோ அதிகாரம் கிடையாது இதனை எமது மீயுயர் சட்டமான அரசியலமைப்பு மிகக் தெளிவாக கூறியுள்ளது என்பதோடு மனித உரிமைகள் மக்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவை அரசோ இராணுவமோ மக்களின் உரிமைகளை துச்சமென மதித்தலாகாது.
யுத்தத்தினை மையப்படுத்தி இராணுவத்தினருக்கு எல்லையற்ற அதிகாரத்தினை வழங்கியுள்ளமை நாட்டில் சனநாயகத்திற்கு பெரும் அச்சுருத்தலாகும். இலங்கையில் ஊடகவியலாளர்கள், மக்கள், அரசியல் தலைவர்கள் பலர் இராணுவத்தினரின் வெரிக்கு பலியாகியுள்ளனர், அச்சுருத்தலுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,
• மக்களின் அமைதியான பேரணியை தடுக்க வெலிவேரியாவுக்கு இராணுவத்தினை வரவழைத்தது யார்?
• அவ்வாறு அழைக்க என்ன தேவை ஏற்பட்டது?
• இராணுவத்தினர் மக்களை தாக்கவும் துப்பாக்கி சூடு நடத்தவும் அதிகாரம் கொடுத்தவர் யார்?
• பொலிசார் என்ன செய்துகொண்டிருந்தனர?;
என்பன சுயாதினமான விசாரணையின் மூலம் மக்களுக்கு பகிரங்கபடுத்தப்பட வேண்டும். சும்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நியாயமான விசாரணையின் படி தண்டணை வழங்கப்படவேண்டும்.
வெலிவேரிய மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும,;
அநீதியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமம் இரத்துச் செய்யப்பட்டு பிளாஸ்டிக் இறப்பர் பொருட்கள் உற்பத்தி கம்பனி மூடப்படவேண்டும,;
இராணுவத்தினருக்கான அதிகாரம் குறைக்கப்படவேண்டும்
சனநாயக கோட்பாடுகளையும,; சர்வதேச மனித உரிமை சட்டங்களையும், மனிதாபிமான சட்ட விதிகளையும், மக்கள் இறைமை கோட்பாட்டையும் பின்பற்றி ஒழுக்கக்கூடிய, பிழையாக கட்டளைகளுக்கு கீழ்படியாத மக்கள் இராணுவம் உருவாக்கப்பட வேண்டும், அரசாங்கம் ஊழல்மிகுந்த நாட்டில் மக்களின் உயிர்களை, உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மலையக சிவில் சமூகம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றது.
நன்றி
இப்படிக்கு,
செயலாளர்
எஸ். மோகனராஜன் சட்டத்தரணி
மலையக சிவில் சமூகம்
Up- Country Civil Society
No.03, Uddapussellawa Road, Ragala Bazaar, Halgranoya- Sri Lanka
E- mail: – upcountrycivilsociety@gmail.com