Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடுகிறது?

இந்தியாவை ஆளும் மோடி அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம்  விவசாயிகளை கோபத்திற்குள்ளாக்கியது.

அரசின் அணுகுமுறை உருவாக்கிய அவலம்!

இந்த போராட்டம் துவங்கியதில் இருந்து அரசு பேச்சுவார்த்தை என்ற  பெயரில் விவசாயிகளை அழைத்து  பேசியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகளில் உருப்படியான எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை இன்னொரு பக்கம் மசோதாவுக்கு ஆதரவான பிரச்சாரம் என்ற நிலைப்பாடு விவசாயிகளுக்கு கடுப்பானது. மேலும் இப்படியே இழுத்தடித்தால் விவசாயிகள் சோர்ந்து போய் சரண்டர் ஆவார்கள் என அரசு எதிர்பார்த்தது. ஆனால், 60 விவசாயிகள் இறந்த பின்னரும் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.

நீதிமன்றத்தின் அணுகுமுறை

இந்த மூன்று விவசாய மசோதாக்களுக்கும் எதிராக  பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அப்போது  மூன்று விவசாயச் சட்டங்களுக்கும் தடை விதிக்க மறுத்ததோடு, போராட்டத்திற்கும் தடை விதிக்க மறுத்து விட்டது. இது  கிட்டத்தட்ட தலையிடாக் கொள்கை ஆகும். போராட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதைத்தான் நாங்கள் பார்ப்போமே தவிற போராட்டத்தை முடித்து வைப்பது எங்கள்  நோக்கம் அல்ல என்றும் சொன்னது.

இதற்கிடையில் போராட்டக்களத்தில் நடந்த மரணங்கள் மேலும் போராட்டங்களை திவீரமாக்க இப்போது  உச்சநீதிமன்றம் இந்த போராட்டத்தில் ஒரு தரப்பாக தலையீடு செய்திருக்கிறது.

இதுவரை எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் விவசாயச் சட்டங்கள், போராட்டங்கள் தொடர்பாக தொடுக்கப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா,  மேலும் சில வட இந்தி எம்.பிக்கள் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி  எஸ்.ஏ.போப்டே “ விவசாய சட்டங்கள் தொடர்பாக அரசு என்ன பேச்சுவார்த்தை நடத்துகிறது என தெரியவில்லை. இந்த விவசாயச் சட்டங்களை சில காலங்களுக்கு தள்ளி வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த சட்டங்கள் தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் ஆகின்றன. அதில் ஒன்று கூட விவசாயச் சட்டங்களுக்கு ஆதரவான மனு இல்லை. போராடும் விவசாயிகளில் சில தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயதான முதியவர்கள், பெண்கள் இந்த போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்கள். அரசு இந்த போராட்டங்களை சரியாக கையாளவில்லை.  நீங்கள் தற்காலிகமாக சட்டங்களை நிறுத்தி வைக்கா விட்டால் நாங்கள் நிறுத்தி வைப்போம்” என்று எச்சரித்தார். பின்னர் இரு தரப்பிலும் பேச குழுவை அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இச்சட்டங்களுக்கு தற்காலிக தடை விதித்தது.

 

உச்சநீதிமன்றத்தில் இந்த அணுகுமுறை போராடும் விவசாயிகளிடம் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து பின்னர் விவசாயச் சட்டங்களை எளிதாக அமலாக்க இந்த அணுகுமுறை உதவக்கூடும் என்ற சந்தேகமும் விவசாயிகளிடம் உள்ளது.

Exit mobile version