உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையோடு தொடர்புடைய மத்திய பாஜக இணை அமைச்சரின் மகனை கைது செய்யக் கோரி நாடு முழுக்க போராட்டங்கள் திவீரமடைந்து வரும் நிலையில் இக்கொலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க எந்த தலைவர்களாலும் செல்ல முடியவில்லை.
இதற்கிடையில் இது ஒரு விபத்து என்றும் விவசாயிகளே வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றும் பாஜக கூறி வந்தது. இதற்கிடையில் வேளாண் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றும் விடியோவை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். இன்னொரு விடியோவில் ப்ரியங்காகாந்தி அந்த விடியோவைக் காட்டி “இந்த விடியோவை நீங்கள் பார்த்தீர்களா மோடி” என்று விடியோ வெளியிட்டுள்ளார் இந்த விடியோக்கள் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில்,
லக்கிம்பூர் கேரி என்ற அந்த மாவட்டமே இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் உத்தரபிரதேசம் செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்திக்கவும் உத்தரபிரதேசம் சென்றார். ஆனால் அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேற அம்மாநில காவல்துறை அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் விமான நிலையத்தின் உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.