உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
பாஜகவினர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் வேகமாகச் செல்லும் விடியோ இன்றும் வெளியாகி உள்ளது. பாஜகவைச் சேர்ந்த வருண்காந்தியே இந்த விடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் மத்திய அமைச்சரான அஜய் மிஷ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது பெயருக்கு கொலை வழக்கு பதிந்துள்ளதே தவிற அவரை கைது செய்யவில்லை.
இன்னொரு பக்கம் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவோ,வேளாண் சட்டங்கள் தொடர்பாகவோ முறையாக விசாரிக்காத உச்சநீதிமன்றம் விவசாயிகள் மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களை பாதிக்கும் பல பிரச்சனைகளில் அரசுக்கு ஆதரவான உத்தரவுகளையே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் இது போன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை விவசாயத் தரப்பினர் நம்பவில்லை.
இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தில் ராமன் காஷ்யப் என்ற பத்திரிகையாளரும் கொல்லப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இறந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் முதல் தகவல் அறிக்கையோ, பிரேதப் பரிசோதனை அறிக்கையோ இன்னும் ராமன் காஷ்யப் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
இந்தியா முழுமையான சர்வாதிகார தேசமாக மாறி விட்டதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.