நிலம் அறைந்து அழும் தாய்
விசும்பி வெதும்பும் தந்தை
நிணமும் குருதியும் கலந்து
உறைந்து போன மண் மீது
குவிந்து சொரியும் கண்ணீர்
எவரேனும் கனவான்கள்
வெள்ளைத் தோல் துரைமார்கள்
பிள்ளைகள் இருக்குமிடம் சொல்லிப் போகாரோ
துயரில் உருக்குலைந்து உறவுகள் தவிக்கும்.
பணத்தில் புளிச்சல் ஏவறை விடும் முதலாளியோ
ரயில்பெட்டியிலும் தன்னை விளம்பரமிட
கூழாகிய மனித உடலை
வெறித்து நோக்கியிருந்த குழந்தை
எப்போதென்றில்லாமல்
வீறிட்டு அழுகின்றது தாய் நிலத்தில்
கொஞ்சி களிப்பாடிய மழலையின்
பொன்னுடலில்
குண்டு துளைத்ததுவோ
பீரங்கி ஏறிற்றோ தெரியவில்லை
வெற்றிலைக் கொடியாய்
தோள் சாய்ந்து நின்ற மகள்
எங்கேயென்று தெரியவில்லை
முத்தையா முரளிதரனுடன்
முதலாளிதான் தெரிகின்றார்
விலங்குகள் தன்னை வேட்டையாடியதை
இன்னும் அவள் சொல்ல துணியவில்லை
ஒற்றைக் குடிசை இருந்த இடமும்
அடையாளம் தெரியவில்லை
கற்றை நோட்டுக்களோடு
ஞானம் ரஸ்டாக மறுபடியும்
முதலாளி தான் வாறார்.
கொட்டிப் பெருக்கெடுத்து ஓடியது எங்கள் குருதி
விண்ணை முட்டி ஓய்ந்தடங்கியது எங்கள் அழுகுரல்
கொள்ளை போனதெங்கள் வாழ்வு
வற்றி வறண்டு போனது எங்கள் கண்ணீர்
அத்தனையும் முதலாளியிடம்
அதிகாரத்தை அசைவிக்கும் மூலதனமாயிற்று
மீண்டிட முடியா இருளில்
நாங்கள் சுவடற்று மூழ்கிப் போக
நிலம் காற்று ஆகாயம் எங்கும்
முதலாளி தான் வியாபாரியாய்
வியாபிக்கின்றார்!